உங்களுக்கு அவசரப் பணத் தேவை இருந்தால் எங்களிடம் வாருங்கள்.. ஆர்பிஐ அவசர அழைப்பு.. யாருக்கு?
சென்னை: நாடு முழுக்க பணவீக்கத்தை சமாளிக்க ஆர்பிஐ முக்கிய பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஜூன் 3, 2026 புதன்கிழமை அன்று வேரியபிள் ரேட் ரெப்போ (Variable Rate Repo - VRR) ஏலம் மூலம் ₹50,000 கோடியை வங்கிகளுக்கு வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது.
வேரியபிள் ரேட் ரெப்போ என்றால் என்ன?
இதை எளிமையாகச் சொன்னால், வங்கிகளுக்கான குறுகிய கால அடகுக்கடை போன்றது. வணிக வங்கிகளுக்கு அன்றாடத் தேவைகளுக்கு சில நாட்களுக்கு அவசரப் பணம் தேவைப்படும்போது, அரசுப் பத்திரங்களை அடமானமாக வைத்து ஆர்பிஐ-யிடம் பணம் பெறுகின்றன. பின்னர் வட்டியுடன் திருப்பிச் செலுத்தி பத்திரங்களை மீட்டுக் கொள்கின்றன. இதைத்தான் ரெப்போ (Repo) என்கிறோம்.

'வேரியபிள் ரேட்' என்பது ஏல முறையைக் குறிக்கிறது. வங்கிகளிடம் "எவ்வளவு வட்டி தரத் தயார்?" என்று ஆர்பிஐ கேட்கும். வங்கிகள் போட்டியிட்டு வட்டி விகிதத்தை சொல்லும். அதில் சிறந்த சலுகையை ஆர்பிஐ தேர்வு செய்யும்.
இந்த முறை இரண்டு நாட்களுக்கு மட்டும் அதிகபட்சம் ₹50,000 கோடி வரை கடன் வழங்க ஆர்பிஐ முடிவு செய்துள்ளது. ஜூன் 3 காலையில் ஏலம் நடைபெறும். வங்கிகள் ஜூன் 5 அன்று வட்டியுடன் பணத்தை திருப்பித் தர வேண்டும்.
ஆர்பிஐ ஏன் இந்த நடவடிக்கையை எடுக்கிறது?
வங்கிகளிடம் உள்ள உபரிப் பணம் (Surplus Liquidity) வேகமாகக் குறைந்து வருவதே முக்கியக் காரணம். மே 31 அன்று வங்கிகளிடம் ₹1.40 லட்சம் கோடி உபரிப் பணம் இருந்தது. ஆனால் ஜூன் 1 அன்று அது ₹85,411 கோடியாகக் குறைந்துவிட்டது. இந்த வேகமான சரிவு ஆர்பிஐ-க்கு எச்சரிக்கை மணி அடித்துள்ளது.
எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆர்பிஐ வங்கிகளுக்கு கதவுகளைத் திறந்து வைத்துள்ளது. "உங்களுக்கு அவசரப் பணத் தேவை இருந்தால் எங்களிடம் வாருங்கள்" என்று அழைப்பு விடுத்துள்ளது.
வங்கிகளின் சுவாரசியமான சுணக்கம்
ஆர்பிஐ பணம் தருகிறது என்றால் வங்கிகள் உடனே ஓடி வரும் என்று நினைக்கலாம். ஆனால் உண்மை அதற்கு நேர்மாறாக உள்ளது. முந்தைய நாள் (ஜூன் 2) நடைபெற்ற 3 நாட்கள் கால ஏலத்தில் ₹75,000 கோடி தர ஆர்பிஐ தயாராக இருந்தது. ஆனால் வங்கிகள் வெறும் ₹17,445 கோடியை மட்டுமே கோரின. மீதி ₹57,000 கோடிக்கு எந்த வங்கியும் வரவில்லை. கோரிய தொகைக்கு 5.26% வட்டியில் பணம் வழங்கப்பட்டது.
வங்கிகள் ஏன் ஆர்வம் காட்டவில்லை? தற்போதைய சூழலில் தங்களின் அன்றாடத் தேவைகளை சமாளிக்கும் அளவு பணம் தங்களிடம் இருப்பதாக வங்கிகள் நம்புகின்றன. தேவையில்லாமல் வட்டிக்கு கடன் வாங்க விரும்பவில்லை என்பது தெளிவாகிறது.
இருப்பினும், நாட்டின் பொருளாதாரத்தில் எந்தவித தடையும் ஏற்படாமல் இருக்க ஆர்பிஐ மிகவும் விழிப்புடன் செயல்படுவதை இந்த நடவடிக்கை காட்டுகிறது. பணத் தட்டுப்பாடு வராமல் தடுக்க மத்திய வங்கி எப்போதும் தயாராக இருக்கிறது.
இந்த ₹50,000 கோடி VRR ஏலம் வெற்றிகரமாக முடிந்தால், குறுகிய காலத்தில் வங்கிகளின் பணப்புழக்கம் சீராகும். இது கடன் வழங்கல், முதலீடுகள் மற்றும் ஒட்டுமொத்த பொருளாதார நடவடிக்கைகளுக்கு நல்ல சமிக்ஞையாக அமையும். வரும் நாட்களில் ஆர்பிஐ-யின் அடுத்த நகர்வுகள் சந்தையின் கவனத்தை ஈர்க்கும் என்பதில் சந்தேகமில்லை












Click it and Unblock the Notifications