காத்துவாக்கில் வந்த படங்களால் காத்துவாங்கிய தியேட்டர்கள்.. மாற்றி யோசித்ததால் கல்லா கட்டும் மேஜிக்
சென்னை: காத்துவாக்கில் இந்த வாரம் 8 படங்கள் தியேட்டர்களில் ரிலீஸ் ஆகி உள்ளன. ஆனாலும் தியேட்டர்கள் சென்னை உள்பட பல்வேறு நகரங்களில் காத்துவாங்குகின்றன.. இதனால் தியேட்டர்களுக்கு ரசிகர்களை வரவைக்க பழைய படங்களை ரீ-ரிலீஸ் செய்யும் மாற்று முயற்சியில் இறங்கி உள்ளன. இந்த முயற்சிக்கு ரசிகர்களிடையே கணிசமான வரவேற்பும் கிடைத்துள்ளது.
கோவிட் பெருந்தொற்றுக்கு பின்னர் தியேட்டர்கள் நிலைமை தலைகீழாக மாறியது. பல தியேட்டர்கள் மூடப்பட்டன. இருக்கும் தியேட்டர்கள் மல்டி பிளக்ஸ்களாக மாறின. தியேட்டர்களில் ஒரு படம் ஒரு வாரத்தை தாண்டுவதே பெரிய விஷயமாக இப்போது இருக்கிறது. படம் நன்றாக உள்ளதாக மக்கள் மத்தியில் வாய்மொழியாக பரவினால் மட்டுமே தியேட்டர் பக்கம் வருகிறார்கள். மற்றபடி படம் பார்க்க வரும் எண்ணத்தையே மக்கள் குறைத்துக் கொண்டுள்ளார்கள்.

அந்த காலத்தில் சினிமா தியேட்டர்கள் மட்டுமே பொழுதுபோக்கு அம்சமாக இருந்தது. இன்று அப்படி இல்லை..கையிலே ஆறாம் விரல் செல்போன்கள் இருக்கின்றன. அந்த செல்போன்களில் மூழ்கும் மக்கள் அதைத்தான் பொழுதுபோக்காக நினைக்கிறார்கள். மிக நல்ல பெயர் பெற்ற படம், பெரிய நடிகர்களின் படங்கள் என்றால் மட்டுமே தியேட்டர்களை நோக்கி பயணிக்கும் நிலை இருக்கிறது.. மற்ற படங்கள் எல்லாம் திரையிட்டால், தியேட்டர்கள் காத்துவாங்குகிறது.
அண்மைக்காலமாக தியேட்டர்கள் காத்து வாங்கி வருகின்றன. பெரிய நடிகர்களின் படங்கள் எதுவும் வெளியாகாத காரணத்தால் மக்கள் தியேட்டருக்கு வருவதை வெகுவாக குறைத்துவிட்டார்கள். இது ஒருபுறம் எனில் ரஜினி நடித்த லால் சலாம் படத்திற்கே பெரிய அளவில் கூட்டம் வரவில்லை..
சென்னையில் பெரிய தியேட்டர்களில் படம் பார்க்க போனால் பாப் கார்ன் 280 ரூபாய் என்கிற அளவில் உள்ளது. 180 ரூபாய்க்கு குறைவாக எந்த உணவு பண்டமும் விற்கப்படுவது இல்லை.. குழந்தைகளுடன் படம் பார்க்க செல்வோருக்கு படத்திற்கான செலவைவிட பாப்கார்ன் செலவு அதிகம். வாரம் ஒரு படம் போகிறவர்கள் என்றால் கூட, 4 படத்திற்கு ஒரு குடும்பத்தில் படம் பார்க்க போனால் 8000 ரூபாய் செலவு செய்ய வேண்டும். மாதம் ஒரு படம் என்றால் கூட 2000 ரூபாய் அன்றைய தினம் செலவு செய்ய வேண்டி நிலை உள்ளது.
இதனால் மக்கள் தியேட்டர்களில் மிக பெரிய நடிகர்கள் மற்றும் தங்களின் ஆஸ்தான ஹீரோக்களின் படங்கள், இயக்குனர்களின் படங்களை மட்டும் தியேட்டருக்கு போய் பார்க்கும் கலாச்சாரம் பரவி உள்ளது. மற்றபடங்களை தியேட்டருக்குபதில் 30 நாட்கள் கழித்து ஒடிடியில் பார்க்கிறார்கள்.
தற்போதைய நிலையில் பெரிய நடிகர்களின் படங்கள் எதுவுமே ரிலீஸ் ஆகவில்லை. நடிகர் விஜய், அஜித், ரஜினி, கமல், சூர்யா, தனுஷ், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், விக்ரம், கார்த்தி, விஷால், ஜெயம் ரவி உள்பட எந்த பெரிய மற்றும் முன்னணி நடிகர்களின் படங்களும் தற்போதைய நிலையில் ரிலீஸ் ஆகவில்லை.. அதேநேரம் சிறிய நடிகர்களின் படங்களே பெரும்பாலும் ரிலீஸ் ஆகி வருகின்றன..
தமிழ் திரையுலகில் இந்த வாரம் நினைவெல்லாம் நீயடா.. வித்தைக்காரன், பைரி, பர்த் மார்க், பாம்பாட்டம் உள்பட 8 படங்கள் ரிலீஸ் ஆகி உள்ளன. ஆனால் இத்தனை படங்கள் வெளியாகியும் தியேட்டர்கள் பெரும்பாலும் காத்து வாங்குகின்றன. இதை சமீப காலமாக பார்த்த தியேட்டர்கள், மாற்றி யோசிக்க தொடங்கின- இதன்படி பழைய படங்களை ரீ ரிலீஸ் செய்ய தொடங்கி உள்ளன.
புதிய படங்கள் வெளியான திரையரங்குகள் காத்து வாங்கும் நிலையில், பழைய படங்களை ரீ-ரிலீஸ் செய்த தியேட்டர்கள் கல்லா கட்டுகின்றன. உதாரணமாக அண்ணாமலை, வாலி, பில்லா, காதலுக்கு மரியாதை, திருமலை உள்பட பல்வேறு திரைப்படங்கள் வெளியிட்ட திரையரங்குகளில் ஹவுஸ் புல் காட்சிகளாக ஓடுகின்றன. இதனால் ஏராளமான திரைப்படங்கள் வரும் மாதத்தில் ரீ-ரிலீஸ் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய படங்கள் வெளியாகமல் இருக்க பள்ளிகளில் தேர்வு நடைபெற உள்ள ஆண்டு தேர்வுகள் காரணமாக இருக்கலாம் என்றும் ஏப்ரல் 14 முதல் இயல்புநிலை திரும்பும் என்றும் தியேட்டர்கள் நம்பிக்கையில் உள்ளன.












Click it and Unblock the Notifications