நிஜ வாழ்க்கை வேற..சினிமா வேறு.. தூங்கி எழுந்ததும் எல்லாம் மாறிவிடும்! விஜய்யை போட்டு பிளந்த எடப்பாடி
சென்னை: நாட்டில் கொடுமைய பாருங்க.. எல்லாரும் இறந்தவங்க வீட்டுக்கு போய் ஆறுதல் சொல்லுவாங்க.. ஆனால் இங்க ஒரு கட்சி இருக்கு.. என்று விஜய்யை மறைமுகமாக விமர்சித்து எடப்பாடி பழனிசாமி பேசினார். மேலும் நிஜ வாழ்க்கை வேற.. சினிமா வாழ்க்கை வேற.. தூங்கி எழுந்ததும் எல்லாம் மாறிவிடும் எனவும் மக்கள் புரிந்து ஓட்டுப் போடுமாறும் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் திமுக தலைமையில் ஒரு அணியும், அதிமுக தலைமையில் ஒரு அணியும், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் மற்றும் சீமானின் நாம் தமிழர் கட்சி என 4 முனை போட்டி நிலவுகிறது.

முதல் முறையாக களம் கண்டுள்ள விஜய்யும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். நாளை அக்கட்சி சார்பில் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் 234 வேட்பாளர்களையும் விஜய் அறிவிக்க இருக்கிறார். மேலும் 30 ஆம் தேதியே அனைத்து தொகுதிகளிலும் விஜய் கட்சி சார்பில் போட்டியிடுபவர்கள் வேட்புமனு தாக்கல் செய்யவும் விஜய் கூறியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொள்ளவும் விஜய் திட்டமிட்டுள்ளார்.
இது ஒரு புறம் இருக்க மீண்டும் ஆட்சிக்க வர துடிக்கும் அதிமுகவும் தொகுதி பங்கீட்டை நிறைவு செய்து, 150 தொகுதிகளுக்கு வேட்பாளர்களையும் அறிவித்து தீவிர பிரசாரத்திலும் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் எடப்பாடி பழனிசாமி நேற்று தாம்பரத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் மறைமுகமாக விஜய்யை கடுமையாக விமர்சித்து பேசினார். எடப்பாடி கூறியதாவது:-
இங்கே ஒரு கட்சி இருக்கிறது.. எல்லாரும், இறந்த பிறகு அவங்க வீட்டில் போய் துக்கம் விசாரிப்பார்கள்.. ஆனால் அந்த கட்சிக்கு?.. நாட்டுல கொடுமைய பாருங்க.. நாட்டின் தலையெழுத்தை பாருங்க.. எதுக்காக இவங்க எல்லாம் இறந்தார்கள்.. ஏன் இறந்தார்கள்.. அந்த குடும்பத்தை இங்க வரவச்சு.. அனுதாபம் சொல்றாங்களாம்.. என்னாது இது, சினிமா அப்படித்தான் இருக்கும். டெக்னிக்கலாத் தான் இருக்கும்.. மக்கள் ஏமாற வேண்டாம்..
சினிமா பார்க்கலாம்.. எதற்காக பார்க்க வேண்டும்.. மனதில் இருக்க பாரங்கள் குறைவதற்கு சினிமாவ பார்க்கலாம்.. ரசிக்கலாம்.. அதோட நிறுத்திக் கொள்ள வேண்டும்.. நிஜ வாழ்க்கையில் ஒத்துவருமா? நிஜ வாழ்க்கை வேற.. சினிமா வாழ்க்கை வேற.. நிஜ வாழ்க்கை நிஜம். சினிமா வாழ்க்கை என்பது கனவு.. கனவில் நீங்கள் என்ன வேண்டுமானாலும் காணலாம்.. ஆனால் நிஜ வாழ்க்கையில் இது பலிக்குமா? தூங்கி எழுந்ததும் எல்லாம் மாறிவிடும்" என்று பேசினார்.
ஏற்கனவே விஜய்யை பன்னையார் என விமர்சித்து அதிமுக கூறியிருந்த நிலையில் தற்போது விஜய்யை விமர்சிக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரத்தை முன்னெடுத்து இருப்பது கவனம் பெற்றுள்ளது. அதிமுக பாஜக கூட்டணிக்கு விஜய்யை கொண்டு வர முயற்சிகள் நடந்ததாக முதலில் பேசப்பட்டது. இந்த நிலையில் நேற்று அமித்ஷாவும் இதனை மறுத்துள்ளார். விஜய்யை எங்கள் கூட்டணிக்குள் கொண்டு வந்தால், அது எங்கள் வாக்கு வாங்கிக்கே பாதிப்பு ஏற்படுத்தக்கூடும் என்றும், எனவே விஜய்யை எங்கள் கூட்டணிக்குள் கொண்டு வர பேச்சுவார்த்தையே நடத்தப்படவில்லை என அமித்ஷாவே சொல்லியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications