“சிக்கலைத்தான் கொண்டு வர்றீங்க..” - அப்செட்டான முதல்வர் ஸ்டாலின் - அதிரடி ஆர்டரின் பின்னணி என்ன?
சென்னை : தமிழகத்தில் புதிய கட்டடங்கள், சாலைகளுக்கு மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரைச் சூட்ட உள்ளாட்சி அமைப்புகள் தீர்மானம் கொண்டுவரும் நிகழ்வுகள் சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன.
திருவாரூரில், தெற்கு ரத வீதிக்கு கருணாநிதியின் பெயரை வைக்க நகராட்சி சார்பில் தீர்மானிக்கப்பட்டதற்கு எதிராக பாஜகவினர் பெரும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கடும் எதிர்ப்பால் அந்த பெயர் மாற்றும் முடிவை நிறுத்திவைக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.
அதேபோல பல இடங்களிலும் இதுபோன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு வருவதால், முதல்வர் ஸ்டாலின் அதிகாரிகளிடம் கோபமாக உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, அரசு சார்பில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உள்ளாட்சி அமைப்புகள்
தமிழகத்தில் பல்வேறு மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளிலும் பல்வேறு சாலைகள், கட்டடங்கள், பேருந்து நிலையங்களுக்கு மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு புதிய பெயர்கள் சூட்டப்பட்டு வந்தன. இதில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளதால் கோபமடைந்துள்ள முதல்வர் ஸ்டாலின், அதிகாரிகள் மூலம் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் அதிரடி உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளார்.

ஆட்சிக்கு வந்தபிறகு
ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சிப் பொறுப்புக்கு வந்தபிறகு, பல்வேறு திட்டங்களுக்கும், சாலைகள், கட்டடங்களுக்கும் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெயரைச் சூட்ட வேண்டும் என திமுகவினர் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், அது எதிக்கட்சிகளின் விமர்சனங்களுக்கு வழிவகுக்கும் என்பதால் முதல்வர் ஸ்டாலின் அமைதி காத்து வருகிறார். பல கட்ட யோசனைகளுக்குப் பிறகுதான் சென்னை கிழக்கு கடற்கரை சாலை 'முத்தமிழறிஞர் கலைஞர் சாலை' என அழைக்கப்படும் அறிவிப்பையே முதல்வர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் அறிவித்தார். அதற்குமே கூட ஆங்காங்கே சலசலப்புகள் எழுந்தன.

திருவாரூர்
திருவாரூர் தெற்கு ரத வீதிக்கு கலைஞர் கருணாநிதி சாலை என பெயர் சூட்ட வேண்டும் என திருவாரூர் நகரசபை தீர்மானம் நிறைவேற்றியது. இதையடுத்து, விரைவில் பெயர் மாற்றப்படும் என தகவல் வெளியானது. ஆனால், திருவாரூர் தெற்கு ரத வீதிக்கு கருணாநிதி பெயரை சூட்டக்கூடாது என வலியுறுத்தி பா.ஜ.க சார்பில் திருவாரூரில் போராட்டம் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டத்திற்கு பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் எப்போதும் இல்லாத அளவிற்கு பா.ஜ.கவிற்கு பயங்கரமான கூட்டம் கூடியது.

நிறுத்திவைப்பு
இந்த பெயர் மாற்ற முடிவு பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, தெற்குரத வீதிக்கு கருணாநிதி பெயர் வைக்கும் தீர்மானத்தை நிறுத்தி வைக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். இது திமுகவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த அதிமுக ஆட்சியில் பேருந்து நிலையங்கள், மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு எம்.ஜி.ஆர், ஜெயலலிதா பெயர்கள் சூட்டப்பட்டன. ஆனால், ஒரு தெருவுக்கு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெயரை வைக்கவே இவ்வளவு யோசனை ஏன் என திமுக தொண்டர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தனர்.

திருப்பூரில் தீர்மானம்
திருப்பூர் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில், புதியதாக கட்டப்பட்டுள்ள பேருந்து நிலையத்துக்கு 'முத்தமிழறிஞர் டாக்டர்.கலைஞர் மத்திய பஸ் நிலையம்' என பெயர் சூட்டும் தீர்மானத்தை மேயர் தினேஷ்குமார் முன்மொழிந்தார். இந்த தீர்மானம் அரசுக்கு அனுப்பி பரிந்துரை செய்யப்படும் எனவும் தெரிவித்தார். இந்த தீர்மானத்தை திமுக, மதிமுக, காங்கிரஸ் உட்பட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த கவுன்சிலர்கள் வரவேற்றனர்.

பாஜகவினர் எதிர்ப்பு
திருப்பூர் பழைய பேருந்து நிலையம் கட்டும் பணியானது, பிரதமர் மோடியின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெறும் பணி. இதற்கு கலைஞரின் பெயர் வைப்பது ஏற்க முடியாது, திருப்பூர் குமரன் போன்ற தியாகிகளின் பெயர் வைக்கலாம் என்று கலைஞரின் பெயர் வைப்பதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் , திருப்பூரில் பாரதிய ஜனதா கட்சியினர் தங்களது கருத்துகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

நாகர்கோவில் சர்ச்சை
நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்துக்கு வடசேரியில் அண்ணா விளையாட்டு அரங்கம் அருகே புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது. அங்கு ஏற்கனவே இருந்த கலைவாணர் அரங்கத்தை இடித்துவிட்டு புதிதாக இந்த அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டடத்துக்கு கலைஞர் மாளிகை என பெயர் சூட்ட மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் கலைவாணர் பெயரையே மீண்டும் சூட்ட வேண்டும் என சில அமைப்புகள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. கலைவாணர் பெயரைச் சூட்ட வலியுறுத்தி நாகர்கோவில் வடசேரியில் உள்ள அண்ணா சிலை முன் ஆர்ப்பாட்டமும் நடந்தது.

ஸ்டாலின் கோபம்
இதுபோன்ற நிகழ்வுகள் தொடர்ந்து நடந்து வருவதால் முதல்வர் ஸ்டாலின் கோபமடைந்துள்ளார். என்னைக் கேட்காமல் ஏன் தீர்மானம் போடுகிறார்கள்? இதற்கு எதிர்ப்புகள் வந்தால் யார் பொறுப்பு ஏற்றுக் கொள்வது? என்ன செய்ய வேண்டும் எப்போது செய்ய வேண்டும் என்பதெல்லாம் அரசுக்குத் தெரியும். உள்ளாட்சி மன்றங்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் பணிகளை செய்தால் போதும். தேவையற்ற வேலைகளில் ஈடுபட வேண்டாம் என கண்டிப்பாகச் சொல்லிவிடுங்கள் என முக்கிய அதிகாரிகளிடம் காட்டமாகப் பேசியுள்ளார்.

கருணாநிதி பெயர் வேண்டாம்
இதையடுத்துத்தான் நாகர்கோவில் மாநகராட்சியின் புதிய கட்டடத்துக்கு கருணாநிதி பெயர் சூட்டப்படாது என அரசு அறிவித்துள்ளது. அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், கலைவாணர் பெயரிலேயே அழைக்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும், அரசின் அனுமதி பெற்ற பின்னரே, மன்றங்கள் மற்றும் மாமன்றங்கள் நகராட்சி சொத்துக்களுக்கு பெயரிட வேண்டும் என்ற விதிகளை பின்பற்றாமல், அரசின் ஒப்புதலின்றி நகராட்சி சொத்துக்களுக்கு பெயர் வைப்பதற்கான முன்மொழிவுகளை மன்றத்தில் வைத்து தீர்மானங்கள் இயற்றக்கூடாது.

கண்டிப்பு
முதலமைச்சர் ஸ்டாலினின் அறிவுறுத்தலின்படி, மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கு சொந்தமான சாலைகள், தெருக்கள், பேருந்து நிலையங்கள், கட்டடங்கள், பூங்கா, விளையாட்டு திடல்கள் முதலியவற்றிற்கு பெயர் வைப்பது அல்லது பெயர் மாற்றுவது தொடர்பான முன்மொழிவுகள் நகராட்சி நிர்வாக இயக்குநர் அல்லது பேரூராட்சிகளின் ஆணையாளர் வழியாக அரசிற்கு அனுப்பப்பட வேண்டும் எனவும், அரசின் அனுமதி பெற்ற பின்னரே பெயரிடுவது மற்றும் பெயர் மாற்றம் குறித்த தீர்மானங்கள் சம்பந்தப்பட்ட மாமன்றங்களின் ஒப்புதலுக்கு வைக்கப்படுதல் வேண்டும் என கண்டிப்புடன் உத்தரவிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications