நயினார் நாகேந்திரனை டேமேஜ் செய்யும் ஓபிஎஸ்.. சுக்கு நூறாகும் பாஜகவின் ஆபரேஷன் தென் தமிழகம் பிளான்!
சென்னை: தமிழக அரசியல் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் ஓ.பன்னீர்செல்வம் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. நயினார் நாகேந்திரனின் சில செயல்பாடுகள் காரணமாக டென்ஷனான ஓபிஎஸ், அவரின் செல்வாக்கைக் குறைக்கும் நோக்கத்துடன் அடுத்தடுத்த நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகப் பார்க்கப்படுகிறது.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் வெளியேறி இருக்கிறார். ஓபிஎஸ் வெளியேறியது தொடர்பாக நயினார் நாகேந்திரன் பேசுகையில், எங்களிடம் கூறி இருந்தாலும் பிரதமர் மோடியை சந்திக்க ஏற்பாடு செய்து கொடுத்திருப்போம் என்று தெரிவித்திருந்தார். அவருடன் நான் தொலைப்பேசியில் பேசி எந்த முடிவும் எடுக்க வேண்டாம் என்று கூறி இருந்தார். ஆனாலும் வெளியேறிவிட்டார் என்றார்.

நயினார் நாகேந்திரன் இந்த பேச்சு ஓபிஎஸ் தரப்பைக் கோபத்தின் உச்சிக்கு கொண்டு சென்றிருக்கிறது. ஏனென்றால் பிரதமர் மோடி வருகைக்கு முன்பாக நயினார் நாகேந்திரனுக்கு 6 முறை தொலைப்பேசியில் அழைத்திருக்கிறார் ஓபிஎஸ். ஆனாலும் அவர் பேசவில்லை. பின்னர் 2 முறை மெசேஜ் அனுப்பி இருக்கிறார். அப்போதும் கண்டுகொள்ளவில்லை. இந்த மெசேஜையும் ஓபிஎஸ் வெளிப்படையாகக் காட்டி இருக்கிறார்.
ஓ.பன்னீர்செல்வத்தின் இந்த செயல்பாடுகள் பாஜகவினரை திகைப்படைய செய்திருக்கிறது. ஏனென்றால் 7 ஆண்டுகளாக பாஜகவுடன் நெருக்கம் காட்டிவந்த ஓபிஎஸ், திடீரென பாஜகவை எதிர்ப்பதோடு, பாஜக மாநிலத் தலைவரான நயினார் நாகேந்திரனையே டேமெஜ் செய்யத் தொடங்கி இருக்கிறார். இது நயினார் நாகேந்திரனின் இமேஜை கேள்விக்குள்ளாக்கி இருக்கிறது.
ஏனென்றால் ஓபிஎஸ் முதல்வராக இருந்த போது, 2 முறை அமைச்சரவையில் நயினார் நாகேந்திரன் இருந்திருக்கிறார். அதேபோல் இருவரும் முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். ஓபிஎஸ் கடந்த முறை பாஜக கூட்டணியில் இருந்ததன் காரணமாகவே பாஜக, தென் மாவட்டங்களில் அதிகளவில் 2வது இடத்தை பிடித்தது. இந்த நிலையில் ஓபிஎஸ் இடத்தை நயினார் நாகேந்திரனை வைத்து நிரப்ப பாஜக ஆயத்தமாகியது.
இதன் காரணமாக ஓபிஎஸ் விலகலைக் கூட பாஜக மேலிடம் கண்டுகொள்ளவில்லை. இந்த நிலையில் நயினார் நாகேந்திரனுடன் ஓபிஎஸ் மோதி வருவதற்கு மறைமுக காரணமும் இருப்பதாகப் பார்க்கப்படுகிறது. அதாவது முக்குலத்தோர் அடையாளமாக நயினார் நாகேந்திரனை கொண்டு வரும் பாஜகவின் முயற்சிக்கு முட்டுக்கட்டை போடுவதுதான் அது.
இதன் காரணமாகவே மதுரை மாநாட்டை ஒத்தி வைத்துவிட்டு, நேரடியாக பல்வேறு மாவட்டங்களுக்குச் சுற்றுப்பயணம் செல்வதை ஓபிஎஸ் ஆலோசித்திருக்கிறார். மதுரை, சிவகங்கை, தேனி, ராமநாதபுரம், நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் ஓபிஎஸ் தரப்புக்கு இன்னும் ஆதரவு இருந்து வருகிறது. அதேபோல் தேவர் ஜெயந்தி நெருங்கி வரும் சூழலில், ஓபிஎஸ் தனது அரசியலைத் தீவிரப்படுத்தி இருப்பதாகப் பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications