அப்பா vs மகன்.. 3 மாதங்களுக்கு முன் நடந்த மோதல்.. மீண்டும் வீதிக்கு வந்த பாமக உட்கட்சி பிரச்சனை!
சென்னை: பாமகவின் தலைவராக செயல்பட்டு வந்த அன்புமணி ராமதாஸ், இனி பாமகவின் செயல் தலைவராக செயல்படுவார் என்று அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் கட்சியின் தலைமை பொறுப்பை தாமே ஏற்றுக் கொண்டுள்ளதாக ராமதாஸ் அறிவித்துள்ள நிலையில், அக்கட்சியின் உட்கட்சி பிரச்சனை மீண்டும் விவாத பொருளாக மாறி இருக்கிறது.
ராமதாஸ் அறிவிப்பு
2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு மட்டுமே உள்ள நிலையில், தமிழ்நாட்டின் அனைத்து கட்சிகளும் உட்கட்டமைப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்து பாமக நிறுவனர் ராமதாஸ் பேசுகையில், பாமகவின் தலைவர் பொறுப்பில் இருந்து அன்புமணி நீக்கப்படுகிறார். அதனால் கட்சியின் தலைவர் பொறுப்பை நானே ஏற்றுக் கொள்கிறேன்.

செயல் தலைவர்
வரும் காலங்களில் பாமகவின் செயல் தலைவராக அன்புமணி ராமதாஸ் செயல்படுவார். 2026 சட்டமன்றத் தேர்தலில் இளைஞர்களை வழிநடத்தவே இந்த முடிவு எடுத்துள்ளேன். பாமக தலைவராக நான் பொறுப்பேற்றதற்கு பல்வேறு காரணங்கள் உண்டு. அனைத்தையும் உங்களிடம் பகிர்ந்து கொள்ள முடியாது. கூட்டணி உள்ளிட்ட விஷயங்கள் குறித்து கட்சியின் நிர்வாகிகளை அழைத்து பேசி முடிவெடுப்போம்
என்று தெரிவித்துள்ளார்.
அன்புமணிக்கு பின்னடைவு
இது தமிழக அரசியலில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்துள்ளது. ஏனென்றால் தலைவராக இருந்த ஒருவரை செயல் தலைவராக கீழ் இறக்கப்பட்டிருப்பது அன்புமணி ராமதாஸ் அரசியல் வாழ்க்கைக்கே பின்னடைவாக மாறி இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் பாமகவில் நீடித்து வரும் தந்தை மற்றும் மகனுக்கு இடையிலான மோதல் மீண்டும் வீதிக்கு வந்திருப்பதாக பார்க்கப்படுகிறது.
பாமக தலைவராக அன்புமணி
பாமகவின் தலைவராக 2022ஆம் ஆண்டு அன்புமணி ராமதாஸ் பொறுப்பேற்றார். அவரது தலைமையில் நாடாளுமன்றத் தேர்தலை பாமக சந்தித்துள்ள நிலையில், 3 ஆண்டுகளுக்குள் மீண்டும் ராமதாஸ் அந்த பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளார். இந்த பிரச்சனை நீண்ட நாட்களாகவே நடந்து வருவதாக அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.
அன்புமணி ராமதாஸ் அதிருப்தி
கடந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் பாமக தரப்பில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில், பாமக நிறுவனர் ராமதாஸ் இளைஞரணி தலைவர் பொறுப்பை முகுந்தனுக்கு வழங்கினார். பேரனுக்கு பொறுப்பு வழங்கியதற்காக அன்புமணி ராமதாஸ் மேடையிலேயே எதிர்ப்பு தெரிவித்தார். அதுமட்டுமல்லாமல், பனையூரில் அலுவலகம் திறந்துள்ளேன். அங்கு வந்து என்னை சந்திக்கலாம் என்று மேடையிலேயே அறிவித்து சென்றார்.
சமாதானம்
இதனையடுத்து பாமக நிர்வாகிகள் இருவருக்கும் இடையில் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். தொடர்ந்து முகுந்தனுக்கு அளிக்கப்பட்ட பொறுப்பு திரும்ப பெறுவதாக அறிவிக்கப்பட்ட பின், பிரச்சனை சுமூக நிலைக்கு வந்ததாக கூறப்பட்டது. ஆனாலும், ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையிலான மோதல் முடிவுக்கு வரவில்லை என்பது தற்போது தெரிய வந்துள்ளது.












Click it and Unblock the Notifications