தமிழகத்தில் ரெக்கார்டு பிரேக்கிங் தேர்தல் எது? சப்தமில்லாமல் சாதித்த ஜெயலலிதா!
சென்னை: தமிழகத்தில் தேர்தல் வரலாற்றில் நடந்த ரெக்கார்டு பிரேக்கிங் தேர்தல் குறித்து தெரிந்து கொள்ளலாம். இந்த சாதனை தற்போது திமுக அரசால் செய்ய இயலுமா என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.
2006 சட்டசபைத் தேர்தலில் தொங்கு நிலை ஏற்பட்டதால், 2011 தமிழக சட்டசபைத் தேர்தலை அரசியல் கட்சிகள் மிகுந்த கவனத்துடன் எதிர்கொண்டன. திமுக 11 கட்சிகளுடனும், அதிமுக 8 கட்சிகளுடனும் கூட்டணி அமைத்து தேர்தல் களத்தில் இறங்கின.

அதிமுக கூட்டணியில் இடதுசாரி கட்சிகள், தேமுதிக போன்றவை இடம்பெற்றிருக்க, திமுக அணியில் காங்கிரஸ், பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போன்ற கட்சிகள் அங்கம் வகித்தன.
திமுக, காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீட்டில் கடுமையான இழுபறி நிலவியது. இறுதியாக, காங்கிரஸுக்கு 63 தொகுதிகளை ஒதுக்க திமுக ஒப்புக் கொண்டது. திமுக 119 தொகுதிகளில் போட்டியிட்டது. பாஜக 204 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட்டது.
அதேசமயம், மதிமுக தேர்தலைப் புறக்கணித்தது. விலைவாசி உயர்வு, 2ஜி முறைகேடு, அறிவிக்கப்படாத மின்வெட்டு போன்ற பிரச்சினைகள் முக்கிய விவாதப் பொருளாக இருந்த நிலையில், அரசியல் கட்சிகள் இலவச அரிசி, மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி, லேப்டாப் போன்ற பல வாக்குறுதிகளை அள்ளி வீசின.
இத்தேர்தலில் 77.8% வாக்குகள் பதிவாகின. இது தமிழக சட்டசபைத் தேர்தல் வரலாற்றில் ஒரு புதிய சாதனையாகும். 160 தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக, 150 இடங்களில் மிகப்பெரிய வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது.
திமுக வெறும் 23 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற்று, எதிர்க்கட்சி அந்தஸ்தைக் கூடப் பெற முடியாமல் போனது. அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிக, 29 இடங்களில் வெற்றி பெற்று முக்கிய எதிர்க்கட்சியாக உருவெடுத்தது. முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி திருவாரூரிலும், ஜெயலலிதா ஸ்ரீரங்கத்திலும் வெற்றி பெற்றனர்.
2006 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் அமைச்சர்களாக இருந்த 16 பேர் இந்தத் தேர்தலில் தோல்வியைத் தழுவினர். ஜெயலலிதா நான்காவது முறையாக முதலமைச்சராகப் பதவியேற்று, 33 பேர் கொண்ட அமைச்சரவையை அமைத்தார்.
லேப்டாப், மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி போன்ற தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியதன் மூலம் அவர் மக்கள் மத்தியில் நல்ல பெயரைப் பெற்றார். இது 2016 சட்டமன்றத் தேர்தலிலும் அதிமுக ஆட்சி தக்கவைக்கப்பட ஒரு முக்கியக் காரணமாக அமைந்தது. இது போல் 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலிலும் அதிமுகவே ஆட்சியை தொடர முயன்றது. ஆனால் ஜெயலலிதா என்ற ஆளுமை இல்லாத நிலையில் அக்கட்சி எதிர்க்கட்சியானது. இந்த முறை அதிமுக ஆட்சியை பிடிக்க போராடுகிறது. திமுகவோ இரண்டாவது முறையாக ஆட்சியில் தொடர முயற்சிக்கிறது. இருவரில் யார்! தீர்ப்பு மக்கள் கையில்!












Click it and Unblock the Notifications