இரவில் குளிர்! பகலில் வெப்ப அலை? 20 டிகிரி செல்சியஸ் இடைவெளி.. ஊட்டிக்குப் போகலாமா?
சென்னை: வரலாறு காணாத அளவுக்கு ஊட்டி மற்றும் கொடைக்கானல் மலைப்பிரதேசங்களில் வெப்பநிலை உயர்ந்துள்ளதற்கு என்ன காரணம்?
உதகை மற்றும் கொடைக்கானல் மலைப்பிரதேசங்களுக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகள் கட்டாயம் இ பாஸ் வழங்க வேண்டும் என்று திண்டுக்கல் மற்றும் நீலகிரி மாவட்ட ஆட்சியர்களுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வரும் மே 7 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை இந்த இ பாஸ் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் கூறியிருந்தது. அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு ஒரே நாளில் இ பாஸ் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது.
சில அரசியல் தலைவர்களும் பொதுமக்களும் இந்த இ பாஸ் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். வழக்கம் போல் சுற்றுலாவாசிகள் அனுமதிக்கப்பட வேண்டும் என்று அவர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கு இணையாகச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இந்தக் கட்டுப்பாடு தேவை என்றும் அப்போதுதான் இந்த மலைப் பிரதேசத்தில் உள்ள வன உயிரினங்கள் காப்பாற்றப்படும் என்றும் இங்குள்ள நீர்நிலைகள் உயிர் பெறும் என்றும் கூறுகின்றனர்.
அளவுக்கு அதிகமான வாகனங்கள் இந்த மலைப் பிரதேசங்களில் வருவதால், அதன் இயற்கை வளங்கள் பாதிக்கப்படுவதாகவும், மக்கள் பெருக்கத்தால் நெருக்கடி அதிகரித்துள்ளதாகவும் கூறுகிறார்கள்.

உண்மையில் மலைகளின் ராணி என்று வர்ணிக்கப்படும் ஊட்டிக்கு என்னதான் ஆச்சு? இந்த மாற்றத்திற்கு என்ன காரணம்.
ஊட்டியில் தொடர்ந்து 2வது நாளாக 29 டிகிரி செல்சியஸ். அதாவது 84 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகி உள்ளது.
வரலாறு காணாத வெப்பநிலை:
தனியார் வானிலை ஆய்வாளர் ஸ்ரீகாந்த், "இந்த ஆண்டு மழையின் அளவு மிகக்குறைவு. அதனால் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாகவே உள்ளது.
கடல் மட்டத்திலிருந்து நாம் மேலே செல்ல செல்ல புற ஊதாக் கதிர்களின் தாக்கம் அதிகரிக்கும். உதாரணமாகச் சொன்னால், சமவெளி பிரதேசத்தில் உள்ள வெப்பத்தின் தாக்கத்தைவிட 10% கூடுதலாக மலைப்பிரதேசத்தில் நிலவக் கூடும்.

அப்படிப் பார்த்தால் 2ஆயிரத்து 200 மீட்டர் உயரம். அதனால் 25% கூடுதலாகப் புற ஊதாக் கதிர்களின் தாக்கம் அதிகமாக இருக்கும். இதன் தாக்கத்தால் ஊட்டியில் வெளிச்சம் கண்களைக் கூசும் அளவுக்கு அடிக்கும். பளீரென்று இருக்கும்.
ஆனால், இரவு நேரங்களில் குளிரும் ஊட்டியில் இருக்கும். பகல் வெப்ப நிலைக்கும் இரவு வெப்ப நிலைக்கும் 20 டிகிரி வேறுபாடு இருப்பதை உணரலாம்.
உதாரணமாகச் சென்னையில் இரவு வெப்ப நிலைக்கும் பகல் வெப்பநிலைக்கும் வேறுபாடு சுமார் 8 டிகிரிதான் உள்ளது. மிஞ்சிப் போனால் அது 10 டிகிரியாக உயரலாம். ஊட்டியின் நிலை அப்படி இல்லை. 20 டிகிரி அளவுக்கு உள்ளது.
ஆகவேதான் மக்கள் அதிக சிரமத்திற்கு ஆளாகின்றனர். ஆகவே, 3 வாரங்களுக்குப் பிறகு ஊட்டிக்குச் சுற்றுலா போகலாம். இப்போதைக்குப் போனால், அதன் பலனை அனுபவிக்க முடியாது" என்கிறார்.

மக்கள் சொல்வது என்ன?
ஊட்டியில் வாழும் மக்கள் இந்த ஆண்டு கோடை வெயில் வரலாறு காணாத அளவுக்கு உள்ளதாகச் சொல்கிறார்கள். வழக்கமாக ஜனவரியில் மழை பெய்யும் என்று சொல்லும் உதகை மக்கள் இந்த வருடம் மே மாதம் வரை மழை என்பதே இல்லை என்று சொல்கிறார்கள்.
75 வருடங்களுக்கு முன்னதாக அதிக பட்ச வெப்பநிலை என்பது 27.5 டிகிரி செல்சியஸ் ஆக பதிவாகி உள்ளது. கடந்த 2 நாள்களாக வரலாறு காணாத அளவில் 28 டிகிரி செல்சியஸ் வெப்பம் வீசி வருகிறது.
இதற்கு எல்லாம் காரணம், ஊட்டி பழைய நிலையில் இல்லை என்கிறார்கள் அந்த ஊர்வாசிகள். கட்டடங்களின் காடாக மாறிவிட்டது என்றும் இப்போது குடிக்கக் கூட குடிநீர் கிடைக்காமல் தவிப்பதாக அவர்கள் புலம்புகிறார்கள்.












Click it and Unblock the Notifications