சென்னைவாசிகளுக்கு குட் நியூஸ்.. சென்னைக்கு விடுக்கப்பட்டிருந்த ரெட் அலர்ட் வாபஸ்.. மழை குறையும்!
சென்னை: வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதுவும் சென்னையை வரலாறு காணாத மழை புரட்டி போட்டு விட்டது.
சென்னையில் சனிக்கிழமை இரவு முதல் முழுக்க விடிய விடிய மழை கொட்டி தீர்த்தது. சென்னை நகர் பகுதிகள், புறநகர் பகுதிகளில் பேய் மழை கொட்டியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்ததால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

சென்னையில் மழை
பல இடங்களில் வீட்டின் மாடி வரை கூட தண்ணீர் தேங்கியது. சாலை போக்குவரத்து, ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. விமான சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்க கடலின் மத்தியப் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாகத்தான் சென்னை உள்பட பல்வேறு இடங்களில் கனமழை கொட்டி தீர்த்துள்ளது. இதன்பிறகு இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.

காற்றழுத்த தாழ்வு மண்டலம்
மேற்கு மற்றும் வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று . காரைக்கால் மற்றும் ஸ்ரீஹரிகோட்டா இடையே புதுச்சேரி அருகே கரையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு ஏற்கனவே கூறி இருந்தது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு இருந்தது. இதன் காரணமாக சென்னையில் நேற்று இரவு முதல் இன்று மதியம் வரை மீண்டும் மழை வெளுத்தெடுக்க தொடங்கியது.

கரையை கடக்க தொடங்கியது
இன்று மதியம் வரை பேய் மழை கொட்டிய நிலையில் தற்போது மழை அளவு சற்று குறைந்துள்ளது. வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்க தொடங்கி உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது மணிக்கு 16 கி.மீ நகர்ந்து வருகிறது. இதேபோல் அடுத்த இரண்டு மணி நேரமும் நகர்ந்து கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரெட் அலர்ட் வாபஸ்
இந்த நிலையில் சென்னைக்கு விடுக்கப்பட்டு இருந்த ரெட் அலர்ட் வாபஸ் பெறப்பட்டுள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலசந்திரன் கூறியுள்ளார். இது தொடர்பாக நிருபர்களிடம் அவர் கூறியதாவது:- சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் விடுக்கப்பட்டு இருந்த ரெட் அலர்ட்( அதிகனமழை எச்சரிக்கை) விலக்கி கொள்ளப்பட்டுள்ளது. அதே வேளையில் சென்னையில், அண்டை மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும். காலை வரை இந்த மழை நீடிக்கலாம். அதன்பிறகு மழை படிப்படியாக குறையும். அதிகப்பட்சமாக சென்னை நுங்கம்பாக்கத்தில் 63 மி.மீ மழை பெய்துள்ளது என்று அவர் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications
