செவ்வாழை கிலோ ரூ.60.. பொள்ளாச்சியில் சர்ப்ரைஸ்.. கிடுகிடுவென ஏறிய விலை! கோவை விவசாயிகளுக்கு ஜாக்பாட்
சென்னை: பொள்ளாச்சி சந்தையில் செவ்வாழை விலை திடீரென உயர்ந்து, விவசாயிகளுக்கு இனிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. சித்திரை திருநாளை முன்னிட்டு தேவை அதிகரித்ததால், கடந்த சில வாரங்களாக மந்தமாக இருந்த சந்தை ஒரேநாளில் சூடுபிடித்தது.. இந்த மாற்றம், கடும் வெயிலால் பாதிக்கப்பட்டிருந்த விவசாயிகளுக்கு புதிய நம்பிக்கையை அளித்துள்ளது.. கோவை மாவட்டத்தில் வாழை சாகுபடி எப்படி உள்ளது?
கோவை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான கிணத்துக்கடவு, மேட்டுப்பாளையம், அன்னூர் உள்ளிட்ட இடங்களில் வாழை விவசாயம் சமீபகாலமாக பெரும் வளர்ச்சியை எட்டியுள்ளது.

இதற்கு மிக முக்கியமான காரணம், தென்னை மரங்களுக்கு இடையே வாழை மரங்களை ஊடுபயிராகச் சாகுபடி செய்யும் முறை விவசாயிகளிடையே அதிகரித்துள்ளதுதான். சொட்டு நீர் பாசன வசதி மற்றும் விளைச்சலை உடனடியாகக் கொள்முதல் செய்ய மண்டிகள் மற்றும் சந்தைகள் அருகிலேயே அமைந்திருப்பதால், விவசாயிகள் தென்னைக்கு மாற்றாகவும், கூடுதல் வருமானத்திற்காகவும் வாழையைத் தேர்வு செய்கின்றனர்.
கோவை வாழை விவசாயிகள்
அதிலும் , குறைவான காலத்தில் அதிக லாபம் ஈட்ட முடியும் என்ற நம்பிக்கையில் G-9 போன்ற உயர்தர ரகங்களை பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.
இருந்தாலும் இந்த வாழை விவசாயத்தில் பல்வேறு சவால்களும் நீடிக்கின்றன. அடிக்கடி ஏற்படும் சந்தை விலை வீழ்ச்சி, விவசாயிகளின் உழைப்பை வீணடிக்கும் காட்டுப்பன்றிகளின் அட்டகாசம் மற்றும் பலத்த காற்று வீசும் காலங்களில் வாழை மரங்கள் முறிந்து விழுவது போன்ற இயற்கை சீற்றங்கள் விவசாயிகளுக்குப் பெரும் கவலையைத் தருகின்றன.
இதுபோன்ற இடர்பாடுகளையும் தாண்டி, சரியான திட்டமிடல் மற்றும் சந்தை வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளும் விவசாயிகள் நல்ல லாபத்தை பெற்று வருகின்றனர்.
பொள்ளாச்சி சந்தையில் வாழை விலை
இந்நிலையில், பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு ஒரு நற்செய்தியாக, பொள்ளாச்சி காந்தி மார்க்கெட்டில் வாழைத்தார்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.
பொள்ளாச்சியில் வாரந்தோறும் புதன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வாழைத்தார் விற்பனை சந்தை நடைபெறுவது வழக்கம். இந்தச் சந்தைக்குப் பொள்ளாச்சி சுற்றுவட்டாரக் கிராமங்கள் மட்டுமின்றி, தூத்துக்குடி மற்றும் திருச்சி போன்ற வெளி மாவட்டங்களில் இருந்தும் அதிகளவில் வாழைத்தார்கள் விற்பனைக்குக் கொண்டு வரப்படுகின்றன.
கடந்த சில மாதங்களாகவே, கோடை வெயிலின் தாக்கம் மிகக் கடுமையாக இருந்ததால், கிணத்துக்கடவு மற்றும் பொள்ளாச்சி சுற்றுவட்டாரக் கிராமங்களில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் வாடி வதங்கின. இதனால் போதிய விளைச்சல் இல்லாமல், சந்தைக்கு வரும் வாழைத்தார்களின் வரத்து கடந்த 2 மாதங்களாக பெருமளவு குறைந்து காணப்பட்டது. வரத்து குறைந்ததால் விலையும் சுமாராகவே இருந்து வந்தது. ஆனால், நேற்று நடந்த ஸ்பெஷல் மார்க்கெட்டில் இந்த நிலைமை அப்படியே தலைகீழாக மாறியது.
சித்திரை முதல் நாள் சர்ப்ரைஸ்
வெளியூர்களில் இருந்து வரும் வாழைத்தார்களின் வரத்து குறைந்திருந்தாலும், நீண்ட இடைவேளைக்குப் பிறகு பொள்ளாச்சி சுற்றுவட்டாரக் கிராமங்களில் இருந்து கணிசமான அளவு வாழைத்தார்கள் விற்பனைக்கு வந்திருந்தன.
சித்திரை முதல் நாள் என்பதால், வீடுகளில் சாமி கும்பிடவும், விசேஷங்கள் கொண்டாடவும் மக்கள் அதிகளவில் வாழைத்தார்களை வாங்க ஆர்வம் காட்டினார்கள்.. இதனால் தேவையை ஈடுகட்ட வியாபாரிகள் போட்டி போட்டு ஏலம் எடுத்ததால், அனைத்து ரக வாழைகளின் விலையும் கடந்த வாரத்தை விட கிடுகிடுவென உயர்ந்தது.
செவ்வாழை ரூ.60 தந்த சர்ப்ரைஸ்
சந்தை நிலவரப்படி, ஒரு கிலோ செவ்வாழை 60 ரூபாய்க்கு விற்பனையாகி உள்ளது. அதேபோல் பூவன் மற்றும் கற்பூரவள்ளி ரகங்கள் தலா 40 ரூபாய்க்கும், மோரீஸ் ரகம் 38 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டன.
கேரள மக்களின் விருப்பமான ரஸ்தாளி மற்றும் நேந்திரன் ரகங்கள் தலா 45 ரூபாய்க்கு விலை போனதாக வியாபாரிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். வெயில் மற்றும் தண்ணீர் பற்றாக்குறையால் தவித்த விவசாயிகளுக்கு, இந்த விலை உயர்வு ஓரளவு நிம்மதியைக் கொடுத்துள்ளது. சித்திரை பிறப்பை முன்னிட்டு இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளதால், தோட்டங்களில் அறுவடைப் பணிகளும் சூப்பராக விறுவிறுப்படைந்துள்ளனவாம்...!!












Click it and Unblock the Notifications