சிகப்பு தக்காளி! தாம்பரம் டூ கூடுவாஞ்சேரி வரை செம மழை.. அப்படியே கேளம்பாக்கம் வரை நகரும்.. வெதர்மேன்
சென்னை: தாம்பரம், பெருங்களத்தூர், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி வரை கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். மேலும் இந்த மழை சிறுச்சேரி- கேளம்பாக்கம் வரை நகரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த 4 ஆம் தேதி முதல் இந்த மாதம் 28 ஆம்ஆண்டு வரை கத்தரி வெயில் வாட்டி வதைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கோடை காலம் தொடங்கிய நிலையில் மக்கள் இந்த கத்தரி வெயிலால் மிகவும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள்.

காலை 8 மணிக்கெல்லாம் வெயில் மண்டையை பிளக்கும் அளவுக்கு இருக்கிறது. மாலை 5 மணிக்குத்தான் சற்று காற்றோட்டமாக இருக்கிறது. தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் வெயில் 105 அல்லது 106 டிகிரி பாரன்ஹீட்டாக இருந்து வருகிறது.
தமிழகத்தில் வளிமண்டல கீழக்கு, மேலடுக்கு சுழற்சி, வெப்பச்சலனம் காரணமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில் கூட நல்ல வெயில் தெரிவதாக கூறுகிறார்கள். இந்த நிலையில் இந்த வெயில் எத்தனை நாளைக்குத்தான் வாட்டிவதைக்கும் என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது: நுங்கம்பாக்கத்தில் 104 டிகிரி பாரன்ஹீட்டாக இருந்தது. அது போல் சென்னை புறநகர் பகுதிகளில் 41 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியிருந்தது. அதாவது 105 டிகிரி பாரன்ஹீட். வேலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு , சென்னை ஆகிய மாவட்டங்களில் இன்று வெயில் வாட்டி எடுத்தது.
ஆனால் இந்த வெயில் வரும் ஜூன் 5ஆம் தேதியுடன் முடிந்துவிடும். அதாவது வடதமிழகமான கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், சென்னை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் வரும் ஜூன் 5 வரை மட்டுமே வெயில் இருக்கும் என தெரிவித்துள்ளார். அது போல் பெங்களூர், கிருஷ்ணிகிரி, தருமபுரி மாவட்டங்களில் மழை தொடரும்.

இந்த மழை வேலூர், திருப்பத்தூர், திருப்பூர், சேலம், தேனி, கோவை, நீலகிரி, புதுக்கோட்டை உள்ளிட்ட உள்மாவட்டங்களிலும் கொடைக்கானலிலும் மழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். அது போல் தாம்பரம்- பெருங்களத்தூர், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி பகுதிகளில் சிவப்பு தக்காளிகள் காணப்படுகின்றன. இதனால் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் இந்த சிவப்பு தக்காளிகள் அப்படியே சிறுச்சேரி- கேளம்பாக்கம் பகுதிக்கு மெல்ல நகரும். வடதமிழகத்தில் வெப்பம் தகித்து வரும் நிலையில் சென்னை மேற்கு புறநகர் பகுதிகளில் மழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளார்.
தற்போது முகப்பேர், அண்ணாநகர், அம்பத்தூர், நெற்குன்றம், கோயம்பேடு உள்ளிட்ட படங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. சேலையூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்யத் தொடங்கிவிட்டது. இதனால் தற்போது அலுவலகம் முடிந்து வீடு திரும்புவோர் போக்குவரத்து நெரிசலில் சிக்கியுள்ளனர்.












Click it and Unblock the Notifications