ஒருவாட்டி முடிவு பண்ணிட்டா.. தீவிர ஆலோசனை.. மாநாட்டு தேதியை லாக் செய்யும் விஜய்
சென்னை: கோட் படம், தவெகவின் அரசியல் பயணம் என்று நடிகர் விஜய் பரபரப்புடன் இருக்கிறார். தவெகவுக்கு அரசியல் கட்சிக்கான அனுமதியை தேர்தல் ஆணையம் வழங்கிய நிலையில், அவர்களின் முதல் மாநாட்டுக்கு காவல்துறையும் அனுமதி வழங்கிவிட்டது. இந்நிலையில், தவெக மாநாட்டை இந்த மாதமே நடத்தி முடிக்க வேண்டும் என்று விஜய் கூறியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஒருபக்கம் விஜயின் கோட், மறுபக்கம் விஜயின் அரசியல் பிரவேசம் டாப் கியரில் சென்று கொண்டிருக்கிறது. விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை விக்கிரவாண்டியில் நடத்துவதற்கு காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து, விரைவில் விஜய் மாநாட்டு தேதியை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்தது.

இதற்கிடையே, தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு, இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து அந்தக் கட்சியின் தலைவர் விஜய் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், "என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களே. 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற அடிப்படை கோட்பாட்டோடு, நாம் அரசியலை அணுகுவதும் ஒருவித கொள்கை கொண்டாட்டமே.
முழுமையான கொண்டாட்டத்திற்காகவும், அரசியல் கட்சிக்கான சட்டப்பூர்வ பதிவுக்காகவுமே, நாம் இதுவரை காத்திருந்தோம். இப்போது அதற்கான அனுமதியும் கிடைத்துவிட்டது. தமிழக வெற்றிக் கழகத்தை, அரசியல் கட்சியாக பதிவு செய்வதற்காக கடந்த பிப்ரவரி 2ம் தேதி இந்திய தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்து இருந்தோம்.
அதைச் சட்டபூர்வமாகப் பரீசிலித்த தேர்தல் ஆணையம், தற்போது நம் தமிழக வெற்றிக் கழகத்தை ஓர் அரசியல் கட்சியாக பதிவு செய்து, தேர்தல் அரசியலில் பதிவு செய்யப்பட்ட கட்சியாக பங்குபெற அனுமதி வழங்கியுள்ளனர். இதை உங்களுடன் பகிர்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். திசைகளை வெல்ல போவதற்கான முன்னறிவிப்பாக, இப்போது முதற்கதவு நமக்காக திறந்துள்ளது.
இச்சூழலில், நமது கழகத்தின் கொள்கை பிரகடன முதல் மாநில மாநாட்டுக்கான ஆயத்த பணிகள் தொடங்கியுள்ளது. அதுகுறித்த அறிவிப்பு வரும் வரை காத்திருங்கள். தடைகளை தகர்த்தெறிந்து கொடி உயர்த்தி, கொள்ளை தீபம் ஏந்தி, தமிழக மக்களுக்கான தலையாய அரசியல் கட்சியாக தமிழ்நாட்டில் வலம் வருவோம். வெற்றிக் கொடியேந்தி மக்களைச் சந்திபோம். வாகை சூடுவோம்." என்று கூறியுள்ளார்.
செப்டம்பர் 23ம் தேதிக்கு இன்னும் 15 நாள்களே உள்ளன. விஜய் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்து முடிவு எடுத்த பிறகே மாநாடு தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள் என்று கூறப்பட்டு வந்தது. இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு குறித்து விஜய் முக்கிய முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தவெக மாநாடு நடத்துவதற்கான அனுமதியை போலீஸார் வழங்கியுள்ள நிலையில், பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்களுடன் மாநாடு ஏற்பாடுகள் தொடர்பாக பணையூரில் உள்ள தனது வீட்டில் ஆலோசனையில் தவெக கட்சியின் தலைவர் விஜய் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
மாநாட்டுக்கு இன்றும் 15 நாட்களே உள்ள நிலையில் எவ்வாறு அனைத்துப் பணிகளையும் செய்து முடிக்க முடியும் என்ற கேள்வி எழுந்து வந்த நிலையில், இந்த ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் மாநாட்டை இந்த மாதமே நடத்தி முடிக்க வேண்டும் என்று விஜய் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாநாட்டுக்கான ஏற்பாட்டுப் பணிகளை அனைவரும் ஒருங்கிணைந்து விரைந்து மேற்கொள்ள வேண்டும் என விஜய் அறிவுறுத்தல்கள் வழங்கியுள்ளார்.
23 ம் தேதி விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் மாநாடு நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 33 விதிமுறைகள் காவல் துறை சார்பில் வழங்கப்பட்டுள்ளன. அவை அனைத்தையும் கருத்தில்கொண்டு மாநாடு பணிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், மாநாடு பணிகள் எவ்வாறு மேற்கொள் வேண்டும், பல்வேறு மாவட்டங்களில் இருந்து பொதுமக்களை எவ்வாறு ஒருங்கிணைத்து அழைத்து வர வேண்டும் என்றும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.












Click it and Unblock the Notifications