இதென்ன ராஜினாமா சீசனா..? 7 சீட் காலி! தமிழக சட்டசபையில் அடுத்தடுத்து காலியான எம்.எல்.ஏ பதவிகள்!
சென்னை: இது என்ன ராஜினாமா சீசனா? எனக் கேட்கும் அளவுக்கு, தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்துள்ளனர். தற்போதைய சூழலில் தமிழக சட்டசபையில் 7 உறுப்பினர்களுக்கான இடங்கள் காலியாக உள்ளன. 5 பேர் கட்சி தாவியதாலும், 2 பேர் மறைந்ததாலும் என மொத்தம் 7 சட்டசபை உறுப்பினர் இடங்கள் காலியாக உள்ளன.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு என்ற அமைப்பை தொடங்கி அதன் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு வந்தார். இந்நிலையில், அதிமுகவில் இணையும் அவரது முயற்சிகள் அனைத்தும் தோல்வியுற்ற நிலையில், இன்று திமுகவில் இணைந்துள்ளார். அதிமுகவில் உயரிய பொறுப்புகள் வகித்து, 3 முறை முதலமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் இன்று திமுகவில் இணைந்துள்ளது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் தமது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளார். சட்டசபை செயலரிடம் ராஜினாமா கடிதத்தை அளித்தார் ஓ.பன்னீர்செல்வம். 5 முறை எம்.எல்.ஏவாக தேர்வு செய்யப்பட்டவர் ஓ.பன்னீர்செல்வம். 2021 தேர்தலில் போடிநாயக்கனூர் தொகுதியில் இருந்து அதிமுக சார்பில் எம்.எல்.ஏ ஆனார். இந்நிலையில், அவர் ராஜினாமா செய்துள்ளதால், அந்த தொகுதி காலியாகி உள்ளது.
அதேபோல, ஓபிஎஸ் ஆதரவாளரான பி.அய்யப்பனும் தனது எம்.எல்.ஏ பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார். திருமங்கலத்தைச் சேர்ந்த பி அய்யப்பன், கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் முறையாக உசிலம்பட்டி தொகுதியில் இருந்து எம்.எல்.ஏவாக தேர்வு செய்யப்பட்டவர். ஓபிஸ்ஸுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த அய்யப்பன் இன்று தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனால் உசிலம்பட்டி தொகுதியும் காலியாகி உள்ளது.
முன்னதாக, ஓபிஎஸ் ஆதரவாக இருந்த தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ. வைத்திலிங்கம், தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். அதனை தொடர்ந்து, சென்னை அண்ணா அறிவாலயம் சென்ற வைத்திலிங்கம், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார். இதனையடுத்து ஒரத்தநாடு தொகுதி தற்போது காலியாக உள்ளது.
முன்னதாக அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தனது கோபிசெட்டிப்பாளையம் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தவெக தலைவர் விஜய் முன்னிலையில், அந்தக் கட்சியில் இணைந்தார். இதனால் கோபிசெட்டிப்பாளையம் தொகுதி தற்போது காலியாக உள்ளது.
இதேபோல், ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளராக இருந்து வந்த மனோஜ் பாண்டியன் தனது ஆலங்குளம் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு, திமுகவில் இணைந்தார். இதனால் அந்த தொகுதியும் தற்போது காலியாக உள்ளது.
மேலும், வால்பாறை தொகுதி அதிமுக எம்.எல்.ஏ.வாக இருந்த அமுல் கந்தசாமி கடந்த ஆண்டு ஜூன் மாதம் காலமானார். அதேபோல், சேந்தமங்கலம் தொகுதி எம்.எல்.ஏ. பொன்னுசாமியும் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் காலமானார்.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் தற்போது மொத்தம் 7 தொகுதிகள் காலியாகியுள்ளன. பொதுவாக எம்.எல்.ஏ. தனது பதவியை ராஜினாமா செய்தால், அல்லது காலமானால் அந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்படும். ஆனால், சட்டமன்றத் தேர்தலுக்கு 6 மாதங்கள் மட்டுமே இருந்தால் இடைத் தேர்தல் அறிவிக்கப்படமாட்டாது. தற்போது விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருப்பதால், இந்த 7 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படாது.












Click it and Unblock the Notifications