கேஎல் ராகுலை எப்படி திட்டலாம்? லக்னோ அணி ஓனர் செய்தது தவறு.. கோபமான ஓய்வு டிஜிபி ரவி! பரபர வீடியோ
சென்னை: ஐபிஎல்லில் நேற்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடனான போட்டியில் தோல்வியடைந்த பிறகு லக்னோ அணி கேப்டன் கேஎல் ராகுலை அதன் உரிமையாளர் மைதானத்திலேயே திட்டினார். இதுதொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை கிளப்பிய நிலையில் தமிழகத்தில் டிஜிபியாக பணியாற்றி ஓய்வு பெற்ற ரவி ஐபிஎஸ் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. நேற்று 57வது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின.

இதில் முதலில் பேட்டிங் பிடித்த லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக பதோனி 30 பந்துகளில் 55 ரன்களும், பூரன் 26 பந்துகளில் 48 ரன்களும் எடுத்து அவுட் ஆகாமல் நின்றனர். கேப்டன் கேஎல் ராகுல் 33 பந்தில் 29 ரன்கள் எடுத்து இருந்தார்.
அடுத்து களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி 9.4 ஒவர்களில் விக்கெட் இழப்பின்றி 167 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. தொடக்க ஆட்டக்காரர்களான அபிசேக் சர்மா 28 பந்துகளில் 75 ரன்களும், டிராவிஸ் ஹெட் 30 பந்துகளில் 89 ரன்கள் எடுத்து சன்ரைசர்ஸ் அணியின் வெற்றியை உறுதி செய்தனர். தற்போதைய சூழலில் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற இந்த போட்டியில் லக்னோ வெற்றி பெற்றிருக்க வேண்டும்.
ஆனால் தோல்வியடைந்ததால் அந்த அணி புள்ளி பட்டியலில் 6 வது இடத்தில் உள்ளது. இது லக்னோ அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தான் போட்டிமுடிந்ததும் லக்னோ கேப்டன் கேஎல் ராகுலிடம் களத்திலேயே விரக்தியை வெளிப்படுத்தினார் சஞ்சீவ் கோயங்கா. அவர் கேஎல் ராகுலை திட்டியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான வீடியோக்கள் இணையதளங்களில் வெளியானது.
சஞ்சீவ் கோயங்காவின் இந்த செயலுக்கு ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தான் தமிழ்நாட்டில் டிஜிபியாக பணியாற்றி ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி ரவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கேஎல் ராகுலை திட்டிய அணி உரிமையாளர் சஞ்சீவ் கோயங்காவிற்கு அவர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இததொடர்பாக ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி ரவி கூறியுள்ளதாவது:
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் கேப்டன் ராகுலை அணி உரிமையாளர் சஞ்சீவ் திட்டியது தவறு. அவர் அணி உரிமையாளராக இருக்கலாம். ஆனால் கேஎல் ராகுல் போன்ற சர்வதேச கிரிக்கெட் வீரரை எப்படி திட்ட முடியும்?. தோல்வி வந்தால் தோல்விக்கான காரணம் என்ன என்பதை அலசி ஆராய்ந்து அறிவுரை கூற வேண்டுமே தவிர பொது வெளியில் மீடியாக்கள் இருக்கும்போது ஓனர், அணி கேப்டன், சர்வதேச பிளேயரை திட்டக்கூடாது.
இந்த சம்பவம் நமக்கும் ஒரு பாடமாகும். நமது நண்பர்கள், வேண்டியவர்கள், கணவன் - மனைவி பிரச்சனை, வேண்டாத வார்த்தை சொல்லிவிட்டால் மற்றவர்கள் இருக்கும்போது அறிவுரை கூறவோ, திட்டவோ கூடாது. இது அவர்களுக்கு பிடிக்காது. மேலும் சோர்வடைவார்கள்.
குழந்தைகள் வேண்டாத வேலையை செய்தாலும் கூட மற்றவர்கள் முன்பு சத்தம் போடவோ, தண்டிக்கவோ கூடாது. எனவே இதுபோன்ற சம்பவங்கள் நடக்க கூடாது. கேஎல் ராகல் போன்றவர் தைரியமாக இருக்க வேண்டும். அடுத்து வெற்றி வரும். இருப்பினும் சன்ரைசர்ஸ் அணிக்கு வாழ்த்துகள். ஏனென்றால் ஐபிஎல்லில் அவர்கள் ஹிஸ்டரியை உருவாக்கி உள்ளனர்'' என்றார்.












Click it and Unblock the Notifications