என் 28 ஆண்டுகால பணி நேர்மையை இழிவுபடுத்தி விட்டார்.. ஆனந்த் வெங்கடேஷுக்கு எதிராக ஓய்வுபெற்ற நீதிபதி!
சென்னை: அமைச்சர் பொன்முடிக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் தனக்கு எதிராக தனி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்த தேவையற்ற கருத்துகளை நீக்கக்கோரி ஓய்வு பெற்ற நீதிபதி வசந்த லீலா, உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளருக்கு மனு அனுப்பியுள்ளார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி உள்ளிட்டோரை விடுதலை செய்து வேலூர் மாவட்ட நீதிமன்றம் கடந்த ஜூன் மாதம் உத்தரவிட்டிருந்தது. இதனை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து மறு ஆய்வு மனுவாக விசாரித்து வந்தார். அதேபோல அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்குகளில் போதிய ஆதாரங்கள் இல்லை என ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றம் விடுவித்த நிலையிலும், அந்த வழக்குகளையும் தாமாக முன்வந்து மறு ஆய்வு விசாரணைக்கு எடுத்தார் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்.

நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் காட்டம்: இந்த வழக்குகளின் விசாரணையின்போது, சொத்துக் குவிப்பில் வழக்கில் இருந்து அமைச்சர்களை விடுவித்து உத்தரவிட்ட கீழமை நீதிமன்ற தீர்ப்புகளை ஆனந்த் வெங்கடேஷ் கடுமையான விமர்சித்திருந்தார். குறிப்பாக, சொத்துக் குவிப்பு வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டது மாவட்ட நீதிபதி உள்ளிட்ட நீதித்துறை அதிகாரிகளின் ஆசியுடன் நேர்த்தியாக நடந்துள்ளது என்றும், இந்த உத்தரவுகள் ஒரே மாதிரியாக இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
மேலும் பொன்முடி வழக்கில் நீதிபதியின் செயல்பாடுகளை விமர்சித்த ஆனந்த் வெங்கடேஷ், நான்கு நாட்களுக்குள், வேலூர் முதன்மை மாவட்ட நீதிபதி, 172 அரசு தரப்பு சாட்சிகள் மற்றும் 381 ஆவணங்களின் சாட்சியங்களை மார்ஷல் செய்து, ஜூன் 28, 2023 அன்று குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் விடுவித்து 226 பக்க தீர்ப்பை வழங்கியுள்ளார். இது நீதிபதியின் மிகப்பெரிய சாதனை. தீர்ப்பை வழங்கிய இரண்டு நாட்களில், முதன்மை மாவட்ட நீதிபதி ஜூன் 30, 2023 அன்று பணியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார் எனத் தெரிவித்தார்.
மீண்டும் விசாரணை: இதற்கிடையே, சொத்து குவிப்பு வழக்கை ஆனந்த் வெங்கடேசன் மறு ஆய்வுக்கு எடுத்ததற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. ஆனால், வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம், ஆனந்த் வெங்கடேசன் போன்ற நீதிபதிகள் இருப்பதற்கு கடவுளுக்கு நன்றி என்று தெரிவித்தது. நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் சுழற்சி முறையில் மதுரை உயர் நீதிமன்ற கிளைக்கு மாற்றப்பட்டதால், வழக்கை தற்போது நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரித்து வருகிறார்.
இந்த நிலையில் அமைச்சர் பொன்முடிக்கு எதிரான சொத்து குவிப்பு மறு ஆய்வு வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தமது தரப்பு வாதங்களை முன்வைக்க அவகாசம் வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதனை கேட்டுக்கொண்ட நீதிபதி, பொன்முடி வழக்கில் மட்டுமல்லாமல் மறு ஆய்வுக்கு எடுக்கப்பட்ட அனைத்து வழக்குகளிலும் உரிய நடைமுறைகள் பின்பற்றப்பட்டனவா என்பது குறித்து தலைமைப் பதிவாளர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
ஓய்வு பெற்ற நீதிபதி வசந்த லீலா விளக்கம்: இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக வேலூர் மாவட்ட நீதிமன்றத்தில், சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோரை விடுவித்து தீர்ப்பளித்த நீதிபதியான ஓய்வு பெற்ற நீதிபதி வசந்த லீலா, சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளருக்கு தற்போது விளக்கமளித்துள்ளார்.
அதில், வழக்கை விழுப்புரம் நீதிமன்றத்தில் இருந்து வேலூருக்கு மாற்றி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதன் அடிப்படையிலேயே விசாரணைக்கு எடுத்துக் கொண்டதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், மொத்தம் 40 நாட்கள் நடந்த விசாரணையின் உத்தரவுகளை பார்க்காமல் ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்த கருத்துகள் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல என்றும், குற்றம்சாட்டப்பட்டவர்களின் நட்சத்திர பலன்களை தொடர்புபடுத்தி ஆனந்த் வெங்கடேசன் கூறிய கருத்துகள் தன்னை இழிவுபடுத்தும் வகையில் உள்ளதாகவும் ஓய்வு பெற்ற நீதிபதி வசந்த லீலா தெரிவித்துள்ளார்.
பணி நேர்மையை சந்தேகத்திற்கு உள்ளாக்கிவிட்டார்: யாருக்கும் சாதகமாகவோ அல்லது அச்சத்தின் அடிப்படையிலோ பொன்முடி வழக்கில் தீர்ப்பு வழங்கவில்லை என்றும், அரசு தரப்பு சாட்சிகள், எழுத்துப்பூர்வமான வாதங்கள் என 150 பக்கங்கள் தவிர்த்து 75 பக்கங்கள் மட்டுமே தீர்ப்பாக தன்னால் எழுதப்பட்டதாகவும் விளக்கம் அளித்துள்ளார். தனது தரப்பு விளக்கத்தை கேட்காமலேயே நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விமர்சித்துள்ளதால் ஒரே உத்தரவில், 28 ஆண்டுகள் கட்டிக்காத்த பணி நேர்மையை பறித்து விட்டதாகவும் வசந்த லீலா வேதனை தெரிவித்துள்ளார்.
தனக்கு எதிராக தனி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்த களங்கப்படுத்தும் கருத்துகளை நீக்க வேண்டும், தான் என்ன தவறு செய்தேன் என்பதைக் கூறாமல் உயர்நீதிமன்ற தனி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்த கருத்துகளை நீக்க வேண்டும் என்றும் ஓய்வு பெற்ற நீதிபதி வசந்த லீலா, உயர்நீதிமன்ற தலைமை பதிவாளருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications