Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'மாமன்னன்' தனபால் போல... ஒரிஜினல் 'கழுவேத்தி மூர்க்கன்' தி.க. சிவகங்கை இராமச்சந்திரன்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி, வடிவேலு நடித்த மாமன்னன் திரைப்படம் அதிமுக மாஜி சபாநாயகர் தனபாலை குறியீடாக கொண்டதாக கூறப்பட்டு வருகிறது. மறைந்த திமுக தலைவரான முன்னாள் முதல்வர் கருணாநிதியின் ஒரு பேரன் உதயநிதி ஸ்டாலின் நடித்த மாமன்னன் எப்படி சமூக நீதி பேசுகிறதோ அதேபோல கருணாநிதியின் மற்றொரு பேரன், உதயநிதியின் சகோதரர் அருள்நிதி நடித்த கழுவேத்தி மூர்க்கன் திரைப்படமும் ஆணித்தரமான சமூக நீதியை பேசும் ஜாதியவெறிக்கு எதிரான மாஸ் படம்.

கழுவேத்தி மூர்க்கன் என்பது ஆதிக்க ஜாதியில் பிறந்து அந்த ஜாதியினரின் ஆதிக்கத்துக்கு எதிரான நபராக நிற்கக் கூடிய மூர்க்கசாமி பற்றிய கதை. சிவங்கை மாவட்டத்தில் இதே வாழ்க்கையை நிஜத்தில் வாழ்ந்தவர் சிவகங்கை இராமச்சந்திரன்.

Review: Kazhuvethi Moorkkan speaks Periyarist Sivaganga Ramachandran History?

இது தொடர்பாக பெரியாரிஸ்ட் அதி அசுரன், காட்டாறு இணையதளத்தில் எழுதி இருப்பதாவது: பெரியார் காலத்தில் அவரது ஜாதி ஒழிப்பு, கடவுள் மறுப்புக் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு ஏராளமான திரைப்படங்கள் வெளிவந்தன. திராவிட இயக்கங்களின் வெற்றிக்கே அவை காரணமாகவும் இருந்தன.
80 களிலிருந்து பாரதிராஜா, மணிவண்ணன், பாக்கியராஜ் போன்ற பல இயக்குநர்கள், சத்யராஜ் போன்ற நடிகர்கள் ஜாதி ஒழிப்பு, கடவுள் மறுப்புக் கருத்துக்களைத் தங்களது திரைப்படங்களில் பரப்பிவந்தனர். இந்தத் தொடர்ச்சி இடையில் கொஞ்சம் விடுபட்டது.

Review: Kazhuvethi Moorkkan speaks Periyarist Sivaganga Ramachandran History?

தேவர்மகன், மறுமலர்ச்சி, சின்னக்கவுண்டர், விருமாண்டி, விருமன் என ஜாதிப் பெருமை பேசும் படங்களும், அந்த ஜாதிவெறிப்படங்களுக்கு எதிரான காலா, அசுரன், நெஞ்சுக்குநீதி, கர்ணன் போன்ற படங்களும் வெளிவந்து கொண்டே இருக்கின்றன. இந்த இருவிதமான படங்கள் நிறைய வருகின்றன. ஆனால், பட்டியல் ஜாதியினரும் பிற்படுத்தப்பட்டோரும் தங்களது ஜாதிகளைத் துறந்து மனிதர்களாக இணைய வேண்டும் என்ற அடிப்படையில் படங்கள் வருவது மிகக் குறைவு. அந்த அடிப்படையில் மாமன்னன், கழுவேத்தி மூர்க்கன் ஆகிய படங்கள் வந்துள்ளன. மாமன்னன் பற்றி பலரும் எழுதி வருகிறார்கள் என்பதால் நாம் கழுவேத்தி மூர்க்கனைப் பார்ப்போம்.

ஒரு தலித் இளைஞரும், ஒரு முக்குலத்தோர் ஜாதி இளைஞரும் சிறுவயதிலிருந்தே நண்பர்களாக வாழ்கிறார்கள். அவர்கள் இருவருமே அவர்களது மனதில் ஜாதிச் சிந்தனைகளுக்கு இடம் கொடுக்காமல் வாழ்கின்றனர். அந்த இருவரது ஜாதியிலும், ஜாதிவெறியைத் தூண்ட நினைப்பவர்களையும், ஜாதியைப் பயன்படுத்தி வாழ நினைப்பவர்களையும் மிகத்துல்லியமாக அடையாளம் கண்டு அவர்களை எதிர்க்கின்றனர். சமுதாயத்தின் இயல்பாக நிலவும் ஜாதியச் சிந்தனையானது, ஒரு போஸ்டர் ஒட்டுவதில் ஜாதிவெறித் தாக்குதலாக உருவமெடுக்கிறது. ஒரு தலித் பகுதியில் ஒரு ஜாதிவெறிப் போஸ்டரை ஒட்ட முடியாமல் போகிறது. அந்தப் புள்ளியிலிருந்து வெடித்த ஜாதி வெறியை கழுவேத்தி மூர்க்கன் பேசுகிறது.

Review: Kazhuvethi Moorkkan speaks Periyarist Sivaganga Ramachandran History?

ஒரு 20 ஆண்டுகளுக்கு முன்னால் தென்மாவட்டங்களில் போஸ்டர் ஒட்டுவது என்பது போராட்டங்களின் ஒரு வடிவமாகவே இருந்தது. அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் ஜாதிப் போஸ்டர்களையும், ஜாதிக்கு எதிரான போஸ்டர்களையும் அடுத்தடுத்துப் பார்க்க முடியும். மதுரையில் இந்தப் போஸ்டர் யுத்தத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கவனிக்கத்தக்க அளவில் வெற்றி பெற்றார்கள். அதன் விளைவாக, அந்தப் பண்பாடே அழிக்கப்பட்டுவிட்டது. அந்தக் காலகட்டத்தைப் பார்த்தவர் களுக்கு இந்தப் படத்தை எளிதாகப் புரிந்து கொள்ள முடியும்.

படத்தில், பிற்படுத்தப்பட்ட ஜாதியின் போஸ்டரை தலித் பகுதியில் ஒட்ட வரும் தனது ஜாதி இளைஞர்களை கழுவேத்தி மூர்க்கன் அதிரடியாகத் தாக்குவார். படத்தில் முதல் அடி அதுதான். அந்த அதிரடிப் பின்னணி இசையில் நமது நினைவுக்கு வந்தவர் சிவகங்கை இராமச்சந்திரன். கழுவேத்தி மூர்க்கனைப் போல, பூமிநாதனைப் போல அந்தந்த ஜாதியைச் சேர்ந்த ஜாதிவெறியர்களை எதிர்த்து நின்ற சுயஜாதித் துரோகிகளின் பாசறைதான் திராவிடர் இயக்கம். கழுவேத்தி மூர்க்கன் கதை நடக்கும் களம் இராமநாதபுரம் மாவட்டம். அந்த மாவட்டத்தின் சிவகங்கையில் வாழந்த இராமச்சந்திரன் என்ற 1930 களின் மூர்க்கனைப் பற்றி நாம் அறிந்து கொள்வது அவசியம்.

Review: Kazhuvethi Moorkkan speaks Periyarist Sivaganga Ramachandran History?

நீதிக்கட்சி காலத்தில், பெரியாரின் தளபதியாகத் திகழ்ந்தவர். 1929 செங்கல்பட்டு சுயமரியாதை மாநாட்டில் தனது சேர்வை என்ற ஜாதிப் பட்டத்தைத் தூக்கி எறிந்தவர். இராமநாதபுரம் மாவட்டத்தில் ஜில்லா போர்டு தலைவராகவும் இருந்தவர். அந்த மாவட்டத்தில் பெரியாரின் தலைமையில் ஏராளமான ஆதிதிராவிடர் மாநாடுகளை நடத்தியவர். அதனால் தனது ஜாதிக்காரர்களின் கடும் கோபத்துக்கும் எதிர்ப்புக்கும் ஆளானவர்.

1930 களில் தேவகோட்டை பகுதியிலுள்ள இரவுசேரியில் தனது ஜாதிக்காரர்கள் பட்டியல் ஜாதியினரைத் தாக்கியதால் அந்தப் பகுதியில் 144 தடை உத்தரவு போடப்பட்டிருந்தது. அந்த நேரத்திலும் தாக்குதல் நடந்த பகுதிக்குத் துப்பாக்கியுடன் சென்று, தனது ஜாதி மக்களை எதிர்த்து நின்று தாக்குதலைத் தடுத்து நிறுத்தியவர் இராமச்சந்திரன். அந்த வரலாறு தான் கழுவேத்திமூர்க்கனின் முதல் அடியில் நினைவுக்கு வந்தது.

சிவகங்கை மன்னரின் கட்டுப்பாட்டில் இருந்த மாணவர் விடுதிகளில் தலித் மாணவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அப்போது, அதை எதிர்த்துப் போராடி தலித் மாணவர்களுக்கும் விடுதிகளில் உரிமை பெற்றுத் தந்தார். இப்படிப்பட்ட பல சுயஜாதித் துரோகிகளை வரலாறு கண்டிருந்தாலும், தமிழ்த் திரைப்படங்கள் அவர்களைக் கொண்டாடவில்லை. அந்த மாபெரும் குறையைச் சரி செய்துள்ளார் இயக்குநர் கௌதம்ராஜ். சிறப்பான படங்களைத் தேர்வு செய்து நடிக்கும் அருள்நிதியை நம்பியே முதலில் இந்தப் படத்திற்குச் சென்றேன். அவர், கௌதம்ராஜ் எனும் ஒரு நல்ல இயக்குநரை எனக்கு அறிமுகப்படுத்தினார்.

Review: Kazhuvethi Moorkkan speaks Periyarist Sivaganga Ramachandran History?

மேலும் சந்தோஷ் பிரதாப், எங்க ஊர்ப் பெண் துசாரா விஜயன், சாயாதேவி, இமான், யுகபாரதி என அனைவரது பங்களிப்பைம் இயக்குநர் மிகச்சரியாகப் பயன்படுத்தி வெற்றி கண்டுள்ளார். சிறு சிறு மாற்றுக்கருத்துக்கள் இருந்தாலும் இன்றைய சூழலில், அமேசானில் வெளியாகியுள்ள கழுவேத்தி மூர்க்கனைக் கொண்டாடுவோம். இவ்வாறு பெரியாரிஸ்ட் அதி அசுரன் எழுதி இருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+