“எடப்பாடியின் எழுச்சி”.. அடிமட்டத் தொண்டர் டு அதிகார பீடம்! பழனிசாமியின் அரசியல் பயணம் ஒரு ரீவைண்ட்!
சென்னை : சிலுவம்பாளையத்தில் சாதாரண கிளை செயலாளராக அரசியல் அத்தியாயத்தைத் தொடங்கிய எடப்பாடி பழனிசாமி, இன்று அதிமுகவின் உச்சபட்ச பதவியான பொதுச் செயலாளர் எனும் அதிகார பீடத்தை அடைந்திருக்கிறார். இந்த 50 ஆண்டு கால அரசியல் பயணம் வெற்றி - தோல்வி என ரோலர் கோஸ்டர் அத்தியாயங்கள் கொண்டது. அவரது பிறந்தநாளில், அவரது அரசியல் பயணத்தை ரீவைண்ட் செய்து பார்ப்போம் வாங்க..
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகேயுள்ள சிலுவம்பாளையம் என்ற சிறிய கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் 1954-ஆம் ஆண்டு மே 12-ம் தேதி பிறந்தவர் எடப்பாடி பழனிசாமி. ஈரோட்டில் உள்ள கல்லூரியில் கல்லூரிப் படிப்பை முடித்த பிறகு, உள்ளூரிலேயே வெல்ல வியாபாரம் செய்துவந்தார். 1972 காலகட்டத்தில் செங்கோட்டையன் மூலம் அரசியலுக்குள் காலெடுத்து வைத்தார் பழனிசாமி. திமுகவிலிருந்து பிரிந்து எம்.ஜி.ஆர் அதிமுகவைத் தொடங்கி, அப்போது இரண்டு ஆண்டுகள்தான் ஆகியிருந்தது.

அதிமுகவை விரிவுபடுத்தப்பட்டுக் கொண்டிருந்த அந்த நேரத்தில் 1973ல் சிலுவம்பாளையம் கிளைச் செயலாளர் பொறுப்பு எடப்பாடி பழனிசாமிக்கு கிடைத்தது. தொடர்ந்து, அதிமுகவில் தன்னை நிலைநிறுத்தும் வேலைகளில் ஈடுபட்டு வந்தார் ஈபிஎஸ். எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு ஜெயலலிதா - ஜானகி என இரு அணிகளாக அதிமுக பிளவுபட்ட நிலையில், ஜெ அணியில் முதல் முறையாக எடப்பாடி பழனிசாமிக்கு தேர்தல் டிக்கெட் கிடைத்தது.
முதல் தேர்தல் : 1989ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி தொகுதியிலிருந்து அதிமுக ஜெ பிரிவில் சேவல் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் எடப்பாடி பழனிசாமி. 1991இல் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1996ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைச் சந்தித்தார் எடப்பாடி பழனிசாமி. இதையடுத்து, டெல்லியில் எம்.பியாக கால்பதிக்க வாய்ப்பு கிடைத்தது.

1998 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், திருச்செங்கோடு தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். 1999 நாடாளுமன்றத் தேர்தலில் திருச்செங்கோடு மக்களவை தொகுதியில் மதிமுகவின் கண்ணப்பனிடம் தோல்வியடைந்தார். 2004ஆம் ஆண்டு மீண்டும் வாய்ப்பு கிடைத்த நிலையில் அதே திருச்செங்கோடு தொகுதியில் திமுகவின் சுப்புலட்சுமி செகதீசனிடம் தோல்வியுற்றார்.
அடுத்தடுத்து சறுக்கல்கள் : நாடாளுமன்றத் தேர்தலில் அடுத்தடுத்து இருமுறை தோல்வியுற்றாலும், கட்சியில் அவரது வளர்ச்சி நிதானமாக இருந்து வந்தது. அதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளர் எனும் நிலைக்கு உயர்ந்தார் ஈபிஎஸ். மீண்டும் சட்டமன்றத் தேர்தலைக் குறிவைத்தார் எடப்பாடி பழனிசாமி. ஆனால், அதிலும் சறுக்கல். 2006ல் எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு பாமக வேட்பாளரிடம் தோல்வியைத் தழுவினார்.
மீண்டும் 2011ஆம் ஆண்டு எடப்பாடி தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி முதல் முறையாக அமைச்சரவைக்குள் காலடி வைத்தார். தமிழக அரசின் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சராக ஜெயலலிதாவின் கேபினட்டில் பொறுப்பேற்றார் எடப்பாடி பழனிசாமி.
கேபினட்டில் நுழைந்தார் : 2016 ஆண்டு மீண்டும் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் அமைச்சராகப் பொறுப்பேற்றார் ஈபிஎஸ். இந்த காலகட்டத்தில் தான் எடப்பாடி பழனிசாமிக்கு அதிர்ஷ்டம் கொட்டோ கொட்டென்று கொட்டி, அவரது அரசியல் வாழ்க்கையையே புரட்டிப் போட்டது.

ஜெயலலிதாவுக்கும், அதிமுகவின் அதிகார மையமாகத் திகழ்ந்த சசிகலா குடும்பத்தினருக்கும் நம்பிக்கையானவராக எடப்பாடி பழனிசாமி மாறியிருந்தாலும், கொங்கு மண்டலத்துக்கு வெளியே செல்வாக்கு பெற்றிடாதவராகவே இருந்த எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் வீசிய புயலில், அந்தர்பல்டி அடித்து முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்தார்.
புயலில் கிடைத்த நாற்காலி : ஜெயலலிதா மரணத் தருவாயில் இருந்தபோது ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சராக பொறுப்பேற்றார். பின்னர், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சில நாட்களில் சசிகலா அதிமுகவின் பொதுச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டார். சசிகலா முதல்வர் நாற்காலியை எட்டும் நேரத்தில், ஓ.பன்னீர்செல்வம் அதிருப்தி அடைந்து தர்ம யுத்தத்தை தொடங்கினார்.
இந்தச் சூழலில்தான் 2017 பிப்ரவரி 14-ஆம் தேதி சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா குற்றவாளி எனத் தீர்ப்பு வழங்கப்பட்டது. சிறைக்குச் செல்லும் முன் தனக்கு விசுவாசம் மிக்க ஒருவரை முதல்வர் பதவியில் அமர்த்த நினைத்தார் சசிகலா. செங்கோட்டையன் போன்ற மூத்த அமைச்சர்கள் பலர் அங்கு இருந்தபோதும் எடப்பாடி பழனிசாமி அந்த இடத்திற்கு வந்தார்.
ஓபிஎஸ் - எடப்பாடி : சசிகலாவின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கி, முதல்வர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார் எடப்பாடி பழனிசாமி. சசிகலாவின் சிறைவாசத்துக்குப் பிறகு அதிமுகவில் காட்சிகள் அனைத்தும் அப்படியே மாறின. முதல்வராக இருந்த எடப்பாடியின் கை ஓங்கியது. டிடிவி தினகரன் ஓரங்கட்டப்பட்ட நிலையில், 17 எம்.எல்.ஏக்கள் தினகரன் பக்கம் சேர்ந்தனர். இதனால் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி கலையும் சூழல் ஏற்பட்டது.
ஆட்சியைத் தக்கவைக்க அவருக்கு அப்போது இருந்த ஒரே சாய்ஸ் ஓ.பன்னீர்செல்வம்தான். ஓபிஎஸ்ஸுக்கு துணை முதல்வர் பதவியும், கட்சியில் ஒருங்கிணைப்பாளர் பதவியும் தருவதாகச் சொல்லிச் சேர்த்துக்கொண்டார். அடுத்த நான்கு ஆண்டு காலம் வெற்றிகரமாக ஆட்சியை நடத்தினார் எடப்பாடி பழனிசாமி. 2021ல் அதிமுக தோல்வியடைந்த நிலையில், எதிர்க்கட்சி தலைவர் யார் என்பதில் ஓபிஎஸ், ஈபிஎஸ் இடையே மோதல் வந்தபோதும், வெற்றிக்கனியை ஈட்டினார் எடப்பாடி பழனிசாமி.
ஒற்றைத் தலைமை : அதன் பின்னர் ஓராண்டு கடந்த நிலையில், ராஜ்யசபா எம்.பி சீட்டை முன்வைத்து அதிமுகவில் பிரச்சனை தொடங்கியது. ஒற்றைத் தலைமையாக வரவேண்டும் என்ற தனது விருப்பத்தை எடப்பாடி பழனிசாமி தனது ஆதரவாளர்கள் மூலமாக வெளிப்படுத்த, ஓபிஎஸ் வெகுண்டெழுந்தார். அதிமுக பொதுக்குழு கூட்டமே அமளி துமளி ஆன நிலையில், ஆனாலும், அடுத்தடுத்து எடப்பாடி பழனிசாமி பக்கம் கை வலுத்தது.
கடந்த ஜூலை பொதுக்குழுவில் ஓபிஎஸ்ஸை கட்சியை விட்டே நீக்கிவிட்டு இடைக்கால பொதுச் செயலாளரானார் ஈபிஎஸ். தொடர்ந்து 10 மாதங்களுக்கும் மேல் வழக்குகள், பொதுக்குழு என சுற்றிச் சுழன்று வந்த அதிமுக பிரச்சனையில் எடப்பாடி பழனிசாமியின் கை ஓங்கி தற்போது அதிமுகவின் பொதுச் செயலாளராகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளார் எடப்பாடி பழனிசாமி.
அடிமட்ட பொறுப்பான கிளைச் செயலாளராக தனது அரசியல் அத்தியாயத்தைத் தொடங்கிய எடப்பாடி பழனிசாமி, அடுத்த 50 ஆண்டுகளில் அதிமுகவின் உச்சபட்ச பதவியான பொதுச் செயலாளர் நாற்காலியில் அமர்ந்த கதை இன்றளவும் அரசியல் களமே வியப்பது. தொண்டர்களால் நடத்தப்படும் கட்சி அதிமுக என எடப்பாடி பழனிசாமி இன்று சூளுரைப்பதும் தனது வாழ்க்கையையே அடிப்படையாக வைத்துத்தான்.












Click it and Unblock the Notifications