35 தொகுதிகளில் திமுகவுக்கு ஆபத்து? விசிக பலம் பற்றி திமுக எடுத்த ரகசிய சர்வே? ஆடிப்போன ஆளும் கட்சி
சென்னை: வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் விசிக ஒருவேளை திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினால் அதனால் என்ன மாதிரியான இழப்புகள் வரும்? எத்தனை தொகுதிகளில் வெற்றிவாய்ப்பைப் பறிகொடுக்க வேண்டி இருக்கும் என்பது பற்றி திமுக ஒரு ரகசிய சர்வேவை எடுத்துள்ளதாகத் தகவல் கசிந்துள்ளது.
திமுக கூட்டணியிலிருந்து விசிக எப்போதும் வெளியேறும் என்று எடப்பாடி பழனிசாமி ஆவலாகக் காத்துக் கொண்டுள்ளார். ஆகவே, 'இப்போது திமுக கூட்டணியில் சலசலப்பு ஆரம்பமாகிவிட்டது' என்று குரலை உயர்த்தி வேகமாகப் பேசி இருக்கிறார். ஒரு திருமண விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், 'எங்களுக்குள் மாற்றுக் கருத்து இருக்கலாம். ஆனால், கூட்டணி ஒற்றுமையாக இருக்கிறது' என்று கூறியிருந்தார்.

ஆக, திமுக கூட்டணி மாற்றுக் கருத்து எழுத் தொடங்கிவிட்டன. அதற்கு முதல் கதவைத் திறந்துவிட்டது விசிக. சரியாகச் சொல்லப் போனால் விசிகவை கூட்டணியிலிருந்து வெளியேற்றிக் கொண்டு வர தலித் அமைப்புகளே நினைக்கின்றன. ஒரு பக்கம் திருமாவை ஆதரித்துக் கொண்டே திமுகவுடனான விசிக கூட்டணியை ரஞ்சித் விமர்சிக்கிறார். அவர் ஆம்ஸ்ட்ராங் கொலை விவகாரத்தில் விசிகவின் ஆதரவு தங்களுக்குக் கிடைக்கும் என நம்பினார். நீதி கேட்டு நடந்த பேரணிக்கு விசிக தொண்டர்கள் வருவார்கள் என்று நினைத்தார். திருமா உஷாராகி தனது கட்சியினரைப் பங்கேற்க வேண்டாம் என்று முற்றுப்புள்ளி வைத்தார்.
விசிக மற்றும் திமுக கூட்டணியை விரும்பாத தலித் அமைப்பில் ரஞ்சித் முதல் இடத்தில் இருக்கிறார். அதேபோல் விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா திமுக கூட்டணியை விரும்பவில்லை. அவர் தலித் முதல்வர் என்றும் அதிகாரப் பகிர்வு என்று பேசி ஒரு விரிசலுக்கு விதைப் போட்டார். அதையும் திருமா எப்படியோ தடுத்து நிறுத்தினார். அப்படி இருந்தும் ஆதவ் தொடர்ந்து திமுகவை சாம்சங் தொழிலாளர் பிரச்சினை, விமானப் படை சாகசப் பேரணி உள்ளிட்ட சில விவகாரங்களில் விமர்சித்து வருகிறார்.
இதுவரை அமைதியாக இருந்து வந்த கம்யூனிஸ்ட் கட்சி சாம்சங் தொழிலாளர் பிரச்சினை விவகாரத்தில் திமுகவுடன் ஒரு உரசலை உருவாக்கிக் கொண்டுள்ளது. மேலும் முன்பே பேருந்து தொழிலாளர் பிரச்சினை தொடர்பாக திமுக ஆட்சியை கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிற்சங்கங்கள் விமர்சித்து வருகின்றன. இதுவும் திமுக கூட்டணிக்கு தலைவலியைக் கொடுத்துள்ளது.
என்னதான் திமுக கூட்டணி இரும்புக் கோட்டைப் போல உள்ளது என வெளியே ஆளும் கட்சியினர் பேசி வந்தாலும் உள்ளுக்குள் சில அச்சங்கள் நிலவிவருவதை உணர முடிகிறது. குறிப்பாகக் கடந்த 2021 தேர்தலில் ஜெயலலிதா உயிருடன் இல்லை. அதிமுகவில் பெரிய அளவுக்கு வலிமையான தலைவர்களே இல்லை என்று சொல்லப்பட்ட தருணத்தில்தான் எடப்பாடி பழனிசாமி தேர்தலைச் சந்தித்தார். திமுக கூட்டணி 159 இடங்களில் வென்றது. திமுக மட்டும் 125 தொகுதிகளைக் கைப்பற்றியது. காங்கிரஸ் 18, விசிக 4 எனப் பல தொகுதிகளை வென்றன. மதிமுக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டதால் ஆட்டத்தில் அவர்கள் இல்லை.
அதிமுக கூட்டணி 75 இடங்களில் வென்றது. அதில் அதிமுக மட்டுமே 65 இடங்களைக் கைப்பற்றியது. பாமக 5, பாஜக 5 என சில தொகுதிகள் இந்த அணிக்கு கூட்டணி சேர்த்தன. என்னதான் ஆளும் கட்சியாக திமுக வந்துவிட்டாலும் திமுகவுக்கும் அதிமுகவுக்குமான வாக்கு சதவீத இடைவெளி என்பது 3.87%தான். இது கூட்டணி பலத்தைச் சேர்க்காமல் கூறப்படும் கணக்கு.
கடந்த முறை களத்திலிருந்த மக்கள் நீதி மய்யம், அமமுக, தேமுதிக ஆகிய கட்சிகளுக்கு 2026 இல் பிரகாசமான வாய்ப்பு இல்லை என்றே சொல்லப்படுகிறது. விஜய் வேறு புதிய கட்சி தொடங்கி களத்தில் நிற்கிறார். அது அதிமுக, திமுக வாக்குகளை உடைக்கும் என்று சொல்கிறார்கள். தவெக 40 லட்சத்திற்கு மேல் உறுப்பினர்களைச் சேர்த்துள்ளது. எனவே குறைத்து மதிப்பிட முடியாது என்றே சொல்கிறார்கள்.
இந்நிலையில்தான் விசிக முரண்டு பிடித்து வருவது தலைவலியாக திமுகவுக்கு மாறியுள்ளது. உரசல் இல்லை, மாற்றுக் கருத்து உள்ளது என முதல்வர் சொன்னாலும் இன்னும் 2 வருடங்களில் என்ன மாற்றமும் வரலாம். விசிக வெளியேறும் மனநிலைக்கு வந்துவிட்டது என்பதை திமுக மறைமுகமாக உணர்ந்துவிட்டது. ஒருவேளை விசிக திமுக கூட்டணியை விட்டு வெளியேறினால், அதன் பாதிப்பு எப்படி இருக்கும்? எந்தெந்த தொகுதிகளில் வாக்குகள் சரிந்து வெற்றியைப் பாதிக்கும் என்பதை அறிய திமுக ஒரு ரகசிய சர்வே எடுத்துள்ளதாகத் தகவல் கசிந்துள்ளது.
அப்படி எடுக்கப்பட்ட தொகுதிகளின் எண்ணிக்கையைக் கண்டு திமுக கலங்கிப் போய் இருப்பதாகவும் சொல்கிறார்கள். இந்த கருத்துக்கணிப்பில் கிட்டத்தட்ட 35 தொகுதிகள் வரை விசிக வெளியேறினால் பாதிக்கப்படும் என்று ஒரு எச்சரிக்கை திமுக தலைமைக்கு சர்வே குழு சொல்லி இருக்கிறது. மாவட்ட வாரியாக எங்கே எல்லாம் வாக்குகள் சரியும் அது அதிமுக அல்லது பிறகட்சிக்கு என்ன லாபத்தைக் கொடுக்கும் என்றும் முதல்வர் பார்வைக்கு எடுத்துக் கூறியுள்ளது குழு. ஆகவேதான், திருமாவை அரவணைக்கத் தொடங்கி இருக்கிறார் முதல்வர் என்கிறார்கள்.
2026 மகன் உதயநிதியை முதல்வராகக் கொண்டுவர வேண்டும் எனத் திட்டமிட்டு காய்களை நகர்த்தி வருகிறார் ஸ்டாலின். அந்தத் தருணத்தில் விஜய் வேறு வருகிறார். அதை அனைத்தையும் உணர்ந்து விசிக சட்டமன்ற உறுப்பினர்கள் மூலம் திருமாவை தக்க வைக்கத் தயார் நிலையில் இப்போதே திமுகவின் முதல் குடும்பத்தினர் இறங்கி இருக்கின்றன.












Click it and Unblock the Notifications