காந்தி தேசப்பிதா இல்லையா? உச்சநீதிமன்றம் சொன்னது என்ன? ஆர்.என்.ரவி சர்ச்சை!
சுபாஷ் சந்திரபோஸின் 127வது பிறந்தநாள் விழா அண்ணா பல்கலைக் கழகத்தில் கொண்டாடப்பட்டது. அதில் தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவி கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர், '1947இல் இந்தியாவுக்குச் சுதந்திரம் கிடைத்ததற்குக் காரணம், நேதாஜிதான். அதற்குக் காரணம், காந்தி இல்லை' என்று ஒரு சர்ச்சைக்குரிய கருத்தை முன்வைத்திருந்தார். இது குறித்து காங்கிரஸ் கட்சி மிகக் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளது.

'தேச பக்தர்களின் ஆன்மா ஆளுநரை மன்னிக்காது' என்று அக்கட்சியின் மாநிலத் தலைவை கே.எஸ். அழகிரி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
ஆளுநரின் பேச்சு குறித்து மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த எழுத்தாளர் அருணன், "மகாத்மா காந்தியை, தேசப் பிதா காந்தியைப் படுபாவி கோட்சே ஒருமுறைதான் சுட்டுக் கொன்றான்.
ஆனால், சங் பரிவார் சங்கத்தைச் சேர்ந்த ஆளுநர் உள்ளிட்டவர்கள் அவரை மீண்டும் மீண்டும் கொலை செய்துகொண்டு வருகிறார்கள். அவர் சுதந்திரப் போராட்டத்திற்காகச் செய்த பங்களிப்பைத் தொடர்ந்து கொலை செய்துகொண்டிருக்கிறார்கள்.

நேதாஜியைப் புகழ்வதில் நமக்கு எந்தக் குறையும் இல்லை. கருத்து வேறுபாடு ஒன்றும் இல்லை. ஆனால், அவரது விழாவில் ஏன் மகாத்மா காந்தியை மட்டம் தட்டுவதைப் போலப் பேசுகிறார்கள்.
ஆளுநர் ரவி என்ன பேசி இருக்கிறார்? 'காந்தி நடத்திய போராட்டம் பலன் தரவில்லை' என்று பேசி இருக்கிறார். இதை எல்லாம் கேட்டால் மக்கள் சிரிப்பார்கள்.
பலருக்கும் தெரியும். இந்தியச் சுதந்திர வரலாற்றில் இரண்டு யுகங்கள் முக்கியமானவை. ஒன்று, திலகர் யுகம். அடுத்து காந்தி யுகம். திலகர் யுகம் தனிமனித வீரத்தை நம்பி இருந்தது. தனிமனித வீரத்தைக் கொண்டு இந்தியச் சுதந்திரப் போராட்டத்தை நடத்த முடியாது.

ஆகவே அதை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும் என்று விரும்பியவர் காந்தி. விரும்பியது மட்டுமல்ல; அதைச் செயல்படுத்திக் காட்டியவர் மகாத்மா காந்தி. அதனால்தான் நேதாஜி அவரை தேசத்தின் தந்தை என்றார். அதை ஏன் இவர்கள் மறைக்க விரும்புகிறார்கள்?" என்கிறார்
இவரைத் தொடர்ந்து மூத்த பத்திரிகையாளர் 'தார்சு' ஷ்யாம்,"இந்தியாவுக்குச் சுதந்திரம் கிடைத்ததற்குக் காரணம், கூட்டு முயற்சி. இந்தியச் சுதந்திரத்திற்காக 4 வழிகளில் பாடுபட்டார்கள். ஒன்று ஆன்மிக வழி.
இந்தியா மிகப் பெரிய ஆன்மிக நாடு, யோகத்தில் சிறந்த நாடு, இங்குள்ளவர்கள் நினைத்தாலே பிரிட்டிஷ்காரர்களை விரட்டிவிடலாம் என்றார் அரவிந்தர். அவரது வழி ஆன்மிகம். வர்த்தகம் மூலம் வெள்ளையனை விரட்டி விடலாம். அதற்காகச் சுதேசி கப்பல் விடுவோம் என்று சொல்லி கப்பல் விட்டவர் வ.உ.சி.

இதற்கு அடுத்து காந்தியின் மிதவாதம் அல்லது அகிம்சை மூலம் சுதந்தரம் பெறலாம் என்று கருத்தாக்கம் முன்வைக்கப்பட்டது. இதற்கடுத்து நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் தீவிரவாத போராட்டம். ராணுவ பலம் கொண்டு வெள்ளையர்களை எதிர்ப்பது என்பது அவரது வழியாக இருந்தது.
இவ்வாறு 4 வழிகளில் இந்தியச் சுதந்திரப் போர் நடைபெற்றது. அதை வரலாற்றில் நாம் படிக்கலாம். இதுதான் ஆளுநர் கருத்துக்குக் கொடுக்க வேண்டிய விளக்கமாக உள்ளது.
அடுத்து அவர் மகாத்மா என்ற பட்டத்தைப் பற்றி ஒரு கருத்தை முன்வைத்திருக்கிறார். அந்த தேசப் பிதா என்ற பட்டத்தை சுபாஷ் இருந்திருந்தால் கட்டாயம் மறுத்திருப்பார். உண்மையில் நம் நாட்டில் யாருக்குமே தேசப் பிதா என்ற பட்டம் யாருக்கும் கொடுக்கப்படவில்லை. மகாத்மா காந்தி உட்பட யாருக்கும் கொடுக்கப்படவில்லை என்பதே நிஜம்.

ஏனெனில் நமது அரசியல் சாசனம் 18 ஆவது பிரிவு அதற்குத் தடைவிதிக்கிறது.
லக்னோவிலிருந்து ஐஸ்வர்யா என்ற ஒரு பெண் ஆர்டிஐக்கு 2012இல் ஒரு மனு போடுகிறார். 'ஏன் மகாத்மா காந்தியைத் தேசப் பிதா என்று கூறுகிறோம்?' என்று கேள்விக்கு விளக்கம் கேட்கிறார். அதற்கு அரசு, 'மகாத்மா காந்திக்குத் தேசப் பிதா என்ற பட்டம் அதிகாரப்பூர்வமாகக் கொடுக்கப்படவில்லை' என்று விளக்கம் அளித்தது.
இதற்குப் பின்னால், உச்சநீதிமன்றத்திற்கு இந்த வழக்கு சென்றது. அங்கே சீப் ஜஸ்டிஸ் பாப்டே அமர்வு இதற்கு என்ன தீர்ப்பு அளித்தது என்றால், 'மக்கள் மத்தியில் மகாத்மா காந்தி தேசப் பிதாவாக இருக்கிறார்.

அவருக்கு அதிகாரப்பூர்வமான அங்கீகாரம் எதுவும் அவருக்குத் தேவையில்லை' என்று சொன்னார். இதுதான் இந்தியத் தலைமை நீதிபதியின் கருத்து. அதன்பின் வழக்குத் தள்ளுபடி செய்யப்பட்டது.
ஆனால், இதற்கு எல்லாம் முன்னதாக வரலாற்றில் மகாத்மா காந்தியைத் தேசத் தந்தை என்று அழைத்தவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். நேதாஜியின் வானொலி காந்தியைத் தேசத் தந்தை என்றுதான் அழைத்தது.

1946இல் இந்தியப் பெருங்கடலில் பிரிட்டிஷ் கப்பல் படையை நேதாஜியின் ஐஎன்ஏ படை மூழ்கடித்தது என்று கூறி இருக்கிறார். ஆனால், 1945 ஆகஸ்ட் மாதம் நேதாஜி மர்மமான முறையில் நேதாஜி விமானத்தில் மரணமடைந்ததாக ஜப்பான் அரசு அறிவித்தது என்பது வரலாறு." என்கிறார்














Click it and Unblock the Notifications