‛‛கையில் பாய்ந்த சென்டர் மீடியன் கம்பி’’.. சென்னையில் இரவில் அலறி துடித்த பெண்.. நெஞ்சே பதறுதே
சென்னை: சென்னை வேப்பேரியில் இருசக்கர வாகனம் விபத்தில் சிக்கிய நிலையில் அதில் பயணித்த பெண்ணின் கையில் சாலை சென்டர் மீடியனில் வெளியே நீண்டு கொண்டிருந்த இரும்பு கம்பி பாய்ந்தது. போலீசாரால் அந்த பெண்ணை மீட்க முடியாததால் அவர் அலறி துடித்த நிலையில் தீயணைப்பு வீரர்கள் வந்து கம்பியை வெட்டி எடுத்து மீட்டனர். தற்போது அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் பவித்ரா. அதேபோல் திருவண்ணாமலையை சேர்ந்தவர் விக்னேஷ். இவர்கள் 2 பேரும் சென்னை வேப்பேரியில் உள்ள பழமுதிர்சோலையில் வேலை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் தான் இன்று இரவில் அவர்கள் 2 பேரும் இருசக்கர வாகனத்தில் வேப்பேரியில் உள்ள பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர். இருசக்கர வாகனத்தை பவித்ரா ஓட்டினார். விக்னேஷ் பின் இருக்கையில் அமர்ந்திருந்தார்.
அப்போது திடீரென்று பவித்ராவின் கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் சாலை நடுவே உள்ள சென்டர் மீடியனில் மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் சென்ற பவித்ரா மற்றும் விக்னேஷ் ஆகிய 2 பேரும் கீழே விழுந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக பவித்ராவின் கையில் சாலை சென்டர் மீடியனில் நீண்டு கொண்டிருந்த இரும்பு கம்பி பாய்ந்தது. கையின் ஒரு பகுதியில் குத்தி மறுபுறமாக அந்த கம்பி வெளியே வந்துள்ளது.
இதனால் அவர் வலி தாங்க முடியாமல் அலறி துடித்தார். இதுபற்றி அறிந்தவுடன் வேப்பேரி போலீசார் சென்று பவித்ராவை மீட்க முயன்றனர். ஆனால் அவர்களால் மீட்க முடியவில்லை. இதையடுத்து ஆம்புலன்ஸ் உதவியுடன் பவித்ராவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதற்கிடையே தான் அங்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் இரும்பு கம்பியை கட்டர் உதவியுடன் இரும்பு கம்பியை வெட்டி எடுத்து பவித்ராவை மீட்டனர்.
அதன்பிறகு பவித்ரா ஆம்புலன்ஸ் மூலம் சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு அவசர சிகிச்சை பிரிவில் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் பவித்ராவின் கையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த சம்பவம் சென்னை வேப்பேரியில் இன்று இரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications