சைதை நீதிமன்றத்தில் ஆஜரான அண்ணாமலை.. ஸ்தம்பித்து போன சென்னை.. படத்தை பாருங்க
சென்னை: சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜராக தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வந்த காரணத்தால் கிண்டி சைதாப்பேட்டை சாலை மொத்தமும் ஸ்தம்பித்தது. கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சைதாப்பேட்டை நீதிமன்றம் ஆளுநர் மாளிகை அருகே வேளச்சேரி, கிண்டி, அடையாறு ஆகிய முக்கிய பகுதியை இணைக்கும் இடத்தில் அமைந்துள்ளது. இந்த சாலை ஒருவழிப்பாதையாகும். இந்த சாலையில் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால் சென்னையின் பல்வேறு பகுதிகள் ஸ்தம்பித்து போய்விடும்.

இந்நிலையில் கடந்த ஏப்ரல் 14ம் தேதி தி.மு.க.வினரின் சொத்துப் பட்டியல்களை தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். அண்ணாமலை வெளியிட்ட பட்டியலில் திமுகவின் பொருளாளர் டி.ஆர்.பாலுவின் பெயரும் இடம் பெற்று உள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த டிஆர் பாலு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினர். மேலும், அவர் மீது வழக்குத் தொடரப்போதவதாகவும் அறிவித்தார் அதன்படி, திமுக நாடாளுமன்ற குழு தலைவரும், திமுக பொருளாளருமான டி.ஆர்.பாலு அண்ணாமலைக்கு எதிராக சென்னை சைதாப்பேட்டை பெருநகர 17-வது நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்தார்.

டிஆர் பாலு தனது வழக்கில், 1957ஆம் ஆண்டு முதல் அரசியலில் இருந்து, எம்.பி.யாகவும், மத்திய அமைச்சராகவும் பதவி வகித்துள்ள தனக்கு பொதுமக்கள் மத்தியில் நற்பெயரும் மரியாதையும் உள்ளது. அதை களங்கப்படுத்தும் விதமாக அண்ணாமலை அவதூறான ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார் என குற்றம்சாட்டி இருந்தார் டி.ஆர்.பாலு.
இந்த மனு மாஜிஸ்திரேட்டு அனிதா ஆனந்த் முன் கடந்த மாதம் விசாரணைக்கு வந்தபோது தி.மு.க பொருளாளர் டி.ஆர்.பாலு ஆஜராகி பிரமாண வாக்குமூலம் அளித்தார். இந்நிலையில் வழக்கு கடந்த ஜூன் 15ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது டிஆர் பாலு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், எங்கள் குடும்பத்தினர் 21 நிறுவனங்களில் பல கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார். பொய்யான குற்றச்சாட்டை கூறி நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதற்காக அண்ணாமலை எனக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும். இதுதவிர அவர் மீது கிரிமினல் அவதூறு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி இருந்தார்.
இதையடுத்து, இவ்வழக்கு விசாரணைக்கு ஜூலை (14-ம் தேதி) நேரில் ஆஜராகும்படி தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைக்கு சைதாப்பேட்டை நீதிமன்றம் சம்மன் அனுப்பி இருந்தது. இதைத் தொடர்ந்து, நீதிமன்ற ஆணைக்கிணங்க சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இன்று அண்ணாமலை ஆஜரானார் . அப்போது அவருக்கு வழக்கின் நகல் வழங்கப்பட்டது. இதையடுத்து வழக்கின் அடுத்த விசாரணையான ஆகஸ்ட் 24-ம் தேதி மீண்டும் ஆஜராகுமாறு அண்ணாமலைக்கு சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டது.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, " டி.ஆர்.பாலு மீது நாங்கள் முன்வைத்த அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் 2014ஆம் ஆண்டு மு.க.அழகிரி மதுரையில் தெரிவித்திருக்கிறார். டி.ஆர்.பாலு எவ்வாறு ஊழல் செய்தார் எத்தனை கப்பல் வைத்துள்ளார் அதன் மூலம் எவ்வளவு சம்பாதித்துள்ளார் எல்லாம் தெரியும் என்று அழகிரி கூறினார். அவர்மீது டி.ஆர்.பாலு எந்த வழக்கும் தொடரவில்லை. டி.ஆர்.பாலு மட்டுமல்ல, அவரது குடும்ப உறுப்பினர்களும் சொத்து குவித்திருக்கிறார்கள்.

திமுக ஃபைல்ஸ் பார்ட் 1 வெளியிட்டதால் திமுகவினர் பலர் என் மீது கடும் கோபத்தில் உள்ளனர். முதல்வர் உட்பட திமுகவின் பல்வேறு நிர்வாகிகள் ஆயிரம் கோடிக்கு மேல் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடுத்துள்ளனர். அதில் இன்று டி.ஆர்.பாலு தொடர்ந்த அவதூறு வழக்கில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளேன். பாஜகவின் ஊழலுக்கு எதிரான போராட்டம் அடுத்த நிலைக்கு சென்றுள்ளது.
அடுத்தகட்டமாக திமுக ஊழல் பட்டியல் சம்பந்தமான DMK Files பாகம் இரண்டு தயாராக உள்ளது. பாதயாத்திரைக்கு முன்பு DMK Files பாகம் 2 வெளியாகும். இதில் 300-க்கும் மேற்பட்ட பினாமிகள் மூலமாக சொத்து குவித்த விவரங்கள் இடம்பெறுகின்றன. பினாமிகள் பெயர்களை பொது வெளியில் சொல்வதா அல்லது ஆளுநரிடம் தெரிவிப்பதா என்பது குறித்து வழக்கறிஞர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறோம்.
பினாமி பெயரில் சொத்துகளை வாங்கியிருக்கக்கூடிய பட்டியலில் இருப்பவர்கள் சமூகத்தில் முக்கிய பொறுப்புகளில் இருக்கிறார்கள். இந்த ஆதாரங்களை சிபிஐயிடம் வழங்கலாம் என்றால் தமிழ்நாட்டுக்குள் தங்கள் அனுமதியின்றி சிபிஐ வரக்கூடாது என்று தமிழ்நாடு அரசு சட்டம் பிறப்பித்துள்ளது. சிபிஐக்கு கொடுத்திருக்கக்கூடிய அந்தஸ்தை மாநில அரசு எடுத்துவிட்டது. இதனால் நாம் தப்பித்து விடலாம் என முதல்வர் ஸ்டாலின் நினைக்கிறார்.

திமுக பைல்ஸ் இரண்டாம் பாகம் குறித்த ஆவணங்களை ஆளுநரிடம் சீல் வைக்கப்பட்ட கவரில் வழங்கலாமா அல்லது லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி அவர்களிடம் கொடுப்பதா அல்லது பொதுவெளியில் கொடுப்பதா என்று விரைவில் அறிவிப்பேன். DMK Files Part 2-வில் அதிமுகவில் இருந்து சென்ற திமுக அமைச்சர்கள் தான் அதிகம். பாதயாத்திரையின்போது dmk files பாகம்3, பாகம் 4 என அடுத்தடுத்து வெளியிடப்படும்" இவ்வாறு அண்ணாமலை கூறினார்.
இந்நிலையில் அண்ணாமலை நீதிமன்றத்தில் இன்று ஆஜராக வந்த காரணத்தால், பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பெரிய அளவில் திரண்டனர்.இதனால் சைதாப்பேட்டை நீதிமன்றம் அமைந்துள்ள கிண்டி சாலையில் ஏராளமான வாகனங்கள் சிக்கி கொண்டன.ஒருவழிப்பாதையான அந்த சாலை வழியாகவே கிண்டி, சைதாப்பேட்டை, வேளச்சேரியில் இணைய முடியும். அடையாறு, மயிலாப்பூர், கோட்டூர்புரம் செல்லவும் அந்த சாலை வழியாக சென்றால் தான் முடியும்.
ஆளுநர் மாளிகையை ஒட்டிய பகுதியில் அமைந்துள்ள சைதாப்பேட்டை நீதிமன்றம் அருகே ஏதேனும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால் சென்னை அண்ணா சாலையும், அடையாறு சாலையும், கிண்டி சாலையும் ஸ்தம்பித்துவிடும். இந்த சாலைகள் ஸ்தம்பித்தால் கிட்டத்தட்ட மொத்த சென்னையும் நிஜமாக ஸ்தம்பித்துவிடும். மிகவும் முக்கியமான இடம் ஆகும். இப்படியான சூழலில் இன்று காலை அண்ணாமலை வந்த போது சைதாப்பேட்டை கிண்டி சாலையில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் சரியாக நீண்ட நேரம் ஆனது.












Click it and Unblock the Notifications