வாசமலர் வாடியது ஏன்? கண்களை மூடியது ஏன்? ரோபோ சங்கர் மறைவால் டி ராஜேந்தர் உருக்கம்
சென்னை: நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் காலமானார். கடந்த 16 ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் நேற்று இரவு உயிரிழந்தார். ரோபோ சங்கர் மறைந்த செய்தி தமிழ் திரையுலகத்தை துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. நடிகர்கள், ரசிகர்கள் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். நடிகரும், இயக்குநருமான டி ராஜேந்தரும் இரங்கல் தெரிவித்துள்ளார்.
பிரபல தமிழ் நடிகர் மற்றும் நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் (வயது 46) சென்னையில் நேற்று காலமானார். கடந்த 16 ஆம் தேதி படப்பிடிப்புக்கு சென்றிருந்த ரோபோ சங்கர் அங்கு மயங்கி விழுந்தார். இதையடுத்து அவர் சென்னை பெருங்குடியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையான GEM மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

நடிகர் ரோபோ சங்கர்
GEM மருத்துவமனையின் (பெருங்குடி) தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் எஸ். அசோகன் இதுகுறித்து கூறுகையில், "ரோபோ சங்கருக்கு கடுமையான இரைப்பைக் குடல் இரத்தப்போக்கு மற்றும் பல உறுப்பு செயலிழப்பு என ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைப் பிரிவில் தீவிர மருத்துவக் கண்காணிப்பில் இருந்தார்.
எங்கள் மருத்துவர்கள் குழுவின் சார்பில் தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டும் பலனளிக்காமல், அவரது நிலை rapidly மோசமடைந்தது" என்றார். இதையடுத்து நேற்று காலையில் அவரது உடல்நிலை மோசமடைந்ததால் நடிகர் ரோபோ சங்கருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு சுமார் 8:30 மணியளவில் அவர் காலமானார்.
டி ராஜேந்தர் உருக்கம்
நடிகர் ரோபோ சங்கர் திடீரென மறைந்த நிலையில் அவருக்கு திரையுலத்தினர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். அரசியல் தலைவர்கள், நடிகர்கள், திரையுலகினர், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். நடிகரும், இயக்குந ரும், தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் டி. ராஜேந்தரும் ரோபோ சங்கர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார். ஒன் இந்தியா தமிழுக்கு அவர் கூறியதாவது:-
தமிழ்நாட்டு வரலாற்றிலேயே நீங்கா இடம்பிடித்த வரலாற்று நாயகர்கள் என்றால், அது தான் பொன்னர் சங்கர்.. தமிழ்த் திரையுலக வரலாற்றிலேயே தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்தவர் என்றால் அது தான் ரோபோ சங்கர்.. தன் நடிப்பு ஆற்றலாலும், உடல் மொழியாலும், நடன திறமையாலும் ரசிகர்களின் உள்ளங்களை எல்லாம் கொள்ளை கொண்டவர்.
அவரது உயிரை காலம் இவ்வளவு விரைவாக வந்து ஏன் கொள்ளையடித்து சென்றான் என்று தெரியவில்லை.. நெஞ்சம் தாங்கவில்லை. சமீபத்தில் தான் நான் ஒரு படத்தில் அவரை நடிக்க வைப்பதற்காக ஒப்பந்தம் செய்து இருந்தேன். இந்நிலையில் அவருக்கு இப்படியொரு நிலையா? நெஞ்சம் பொறுக்கவில்லையே.. பழகுவதற்கு அவர் பண்பானவர், பாசமானவர்.. அந்த பாசமலர், அந்த வாசமலர் வாடியது ஏன்? கண்களை மூடியது ஏன்?
நெஞ்சம் தாங்கவில்லையே, கண்களில் நீரூற்று நிற்கவில்லையே.. அவரை இழந்து வாடும் தமிழக ரசிக பெருமக்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.. அன்னாருடைய ஆத்மா சாந்தியடைய எல்லா வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.. இவ்வாறு அவர் கூறினார்.
நடிகர் சிம்பு இரங்கல்
நடிகர் சிம்புவும் ரோபோ சங்கர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் கூறுகயில், "நடிகர் ரோபோ சங்கர் அவர்கள் மறைந்த செய்தி கேட்டு மிகுந்த வருத்தமடைந்தேன். எப்போதும் சிரிப்பை பரிமாறிய ஒரு மனிதரை இப்படி இழந்துவிடுவது மிகுந்த வேதனை. அவர் மறைவு திரையுலகத்திற்கும், ரசிகர்களின் இதயங்களுக்கும் பெரும் இழப்பு. என்றும் நம்முள் வாழும் அவரின் சிரிப்புகள் நினைவாகவே இருக்கும். அவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கல் அனுதாபங்கள்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications