முதல்வர் ஸ்டாலினிடம் இருந்து பறந்து சென்ற போன் கால்.. உடனே நெகழ்வுடன் நன்றி சொன்ன ரோஜா
சென்னை: நடிகையும் ஆந்திரா சுற்றுலா துறை அமைச்சருமான ரோஜாவுக்கு தொலைப்பேசி மூலம் அழைத்து அக்கறையுடன் நலம் விசாரித்துள்ளார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். இதனால் நெகிழ்ந்து போன ரோஜா, ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளார்.
பிரபல இயக்குனர் ஆர்கே செல்வமணி இயக்கத்தில் பிரசாந்திற்கு ஜோடியாக செம்பருத்தி படத்தில் 90களில் அறிமுகம் ஆனவர் நடிகை ரோஜா. அந்த படம் ஹிட் அடிக்கவே தமிழில் மிகப்பெரிய நடிகையாக உயர்ந்தார். தமிழில் மட்டுமின்றி, தெலுங்கு, கன்னடம், மலையாள படங்களிலும் நடித்தார். தமிழில் 70க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள ரோஜா, தெலுங்கிலும் ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார்.

தன்னுடைய முதல் பட இயக்குனரான ஆர்கே செல்வமணியை காதலித்து வந்த ரோஜா அவரை 2002ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.
சினிமாவை தொடர்ந்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளர், தயாரிப்பாளராக வலம் வந்த ரோஜா, சினிமாவை தொடர்ந்து ஆந்திராவில் அரசியலிலும் களம் இறங்கினார்.
ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்த ரோஜா, நகரி தொகுதியில் 2014ம் ஆண்டு போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர் தற்போது ஆந்திராவின் சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் இளைஞர் மேம்பாட்டு அமைச்சராக உள்ளார். நடிகை ரோஜா கடந்த வாரம் சென்னையில் உள்ள தனது வீட்டில் தங்கியிருந்தார். அப்போது அவருக்கு திடீரென கால் வீக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த ஜூன் 9ம் தேதி சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் ரோஜா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ரோஜாவிடம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக நலம் விசாரித்தார். இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள அமைச்சர் ரோஜா, தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ட்விட்டரில் அமைச்சர் ரோஜா கூறியுள்ளதாவது: "தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் மனிதாபிமான செயலால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். என்னை தொலைபேசியில் அழைத்த முதல்வர, என்னுடைய உடல்நிலை குறித்து விசாரித்து, உடல்நலனை கவனித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.
இதேபோன்று முன்னர் தனக்கு ஏற்பட்ட இதே உடல்நலப் பிரச்சினையை தான் கடந்த வந்த அனுபவம் குறித்தும், எப்படி சமாளித்தார் என்பதையும் என்னிடம் கூறினார். என்னுடைய உடல்நலன் குறித்த அறிவுரையின் மூலம் பிறர் மீது அவர் வைத்திருக்கும் அன்பைக் கண்டு நெகிழ்ந்து போனேன். அவர் மிகச்சிறந்த ஆட்சியாளர் மட்டுமல்ல. அக்கறையான மனிதரும் கூட என்பதை அவர் நிரூபித்துள்ளார். மிக்க நன்றி சார்." இவ்வாறு ரோஜா கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications