கனமழை: சென்னை சைதாப்பேட்டையில் பெட்ரோல் பங்க் மேற்கூரை சரிந்து ஒருவர் பலி.. 13 பேர் காயம்
சென்னை: சென்னையில் தற்போது பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், சைதாப்பேட்டையில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதன் இடிபாடுகளில் சிக்கி பெட்ரோல் பங்க் ஊழியர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 13 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் கடந்த சில வாரங்களவே பரவலாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. குறிப்பாக தலைநகர் சென்னையில் பகல் நேரத்தில் வெப்பத்தின் தாக்கம் சற்று அதிகமாக இருப்பதும் மாலை நேரத்தில் திடீரென மழை பெய்தும் வருகிறது. தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 6 நாட்களுக்கு அதாவது நாளை முதல் வரும் 5 ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று விடுத்துள்ள வானிலை எச்சரிக்கையில் தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில், இன்று மாலை சென்னையில் பல்வேறு இடங்களில் திடீரென கனமழை பெய்தது. சென்னை சென்ட்ரல், எழும்பூர், கோடம்பாக்கம், சைதாப்பேட்டை, பல்லாவாரம் என பல்வேறு இடங்களில் கனமழை கொட்டியது. இந்த திடீர் மழையால் அலுவலகம் முடிந்து வீடும் திரும்பிய பலரும் நனந்தைபடி வீடு திரும்பியதை காண முடிந்தது. குடை இன்றி நடந்து வந்த பலரும் கடைகளில் ஆங்காங்கே ஒதுங்கி நின்றனர்.
அதேபோல், பைக்கில் வந்த பலரும் பேருந்து நிறுத்தங்களில் பைக்கை நிறுத்திவிட்டு ஓரமாக நின்றதையும் காண முடிந்தது. அந்த வகையில், சென்னை சைதாப்பேட்டையின் கிழக்கு ஜோன்ஸ் சாலையில் உள்ள பெட்ரோல் பங்கிலும் வாகன ஓட்டிகள் மழையில் நனையாமல் இருக்க ஒதுங்கி நின்றனர். கனமழை கொட்டி கொண்டு இருந்த நேரத்தில் திடீரென பெட்ரோல் பங்கின் மேற்கூரை சரிந்து விழுந்தது.
இந்த விபத்தில் மேற்கூரைக்குள் சிலர் சிக்கிக் கொண்டனர். தகவல் கிடைத்தத்தும் விரைந்து வந்த தீ அணைப்புத்துறையினர் மேற்கூரைக்குள் சிக்கியவர்களை மீட்டனர். பெட்ரோல் பங்க் மேற்கூரை சரிந்ததில் 14 பேர் காயம் அடைந்தனர். இதில், பெட்ரோல் பங்க் ஊழியர் கந்தசாமி (வயது 50) என்பவர் உயிரிழந்தார். இதையடுத்து காயமடைந்த 13 பேரும் சிகிச்சைக்காக சென்னை ராயப்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications