காட்டுக்குள் கஞ்சா புகை.. போலீஸ் துப்பாக்கியில் இருந்து சீரிய தோட்ட.. ரவுடி அசோக் இப்போ ஹாஸ்பிடலில்!
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் ஆப்பூர் காப்பு காட்டில் போலீசாரை தாக்கிய பிரபல ரவுடி மீது துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். கஞ்சா விற்பனை வழக்கு தொடர்பாக கைது செய்யச் சென்ற போது, போலீசாரை நோக்கி தாக்குதல் நடத்தியதாகவும், இதனால் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்திய நிலையில், இடது காலில் காயமடைந்த ரவுடிக்கு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அடுத்த ஆப்பூரில் உள்ள காப்புக்காட்டில் பதுங்கி இருந்து கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக செங்கல்பட்டு மற்றும் பாலூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு போலீசார் சென்றனர்.
தொடர்ந்து கஞ்சா விற்பனை தொடர்பாக ஆப்பூர் காப்பு காட்டில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த பிரபல ரவுடி அசோக்கை போலீசார் சுற்றி வளைத்து பிடிக்க முற்பட்டனர். அப்போது பிரபல ரவுடி அசோக் கையில் வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டியுள்ளார் பின்பு போலீசாரை தள்ளி விட்டு அரிவாளால் தாக்க முற்பட்டுள்ளார். அப்போது தற்காப்பிற்காக போலீசார் ரவுடி அசோக்கின் காலில் துப்பாக்கி சூடு நடத்தி பிடித்துள்ளனர்.

இதில் இடது பக்க காலில் காயம் பட்ட அசோக்குமாரை சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர் . மேலும் பிரபல ரவுடி அசோக் மீது சரித்திர பதிவு குற்றவாளி என்பதும் இவர் மீது 3-கொலை வழக்கு கொலை முயற்சி, கொள்ளை, வழிப்பறி, கஞ்சா விற்பனை உள்ளிட்ட 17-வழக்குகள் நிலுவையில் உள்ளது என காவல்துறையினர் சார்பில் தகவல் தெரிவித்துள்ளனர். தற்பொழுது அவருக்கு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது
சிங்கப்பெருமாள் கோவில் அருகே ஆப்பூர் காப்பு காட்டில் பிரபல ரவுடி அசோக் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. மேலும் தற்பொழுது செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பலத்த போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொலை, கொள்ளை, செயின் பறிப்பு, கஞ்சா விற்பனை உள்ளிட்ட பல்வேறு குற்ற செயல்கள் அதிகரித்து வருகிறது. தொடர்ந்து போலீசார் நடவடிக்கை எடுத்து வந்தாலும் குற்றங்களை கட்டுப்படுத்த முடியவில்லை. இறுதியாக துப்பாக்கிச் சூடு நடத்திய குற்றவாளிகளை பிடிக்க வேண்டியதாக இருக்கிறது, கடந்த சில தினங்களாகவே ரவுடிகளுக்கு எதிராக துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது,
சென்னையில் ஒரு மணி நேரத்தில் ஏழு இடங்களில் செயின் பறிப்பு சம்பவங்கள் நடைபெற்ற நிலையில் அதில் ஒரு கொள்ளையன் மீது போலீசார் என்கவுண்டர் நடத்தினர். இது சென்னை மாநகர காவல் ஆணையராக அருண் பதவி ஏற்ற பிறகு நடந்த நான்காவது என்கவுண்டர் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல சென்னையில் பதுங்கி இருந்த பிரபல ரவுடி ஹைகோர்ட் மகாராஜாவை கிண்டி ரேஸ் கோர்ஸ் அருகே போலீசார் காலில் சுட்டு பிடித்தது குறிப்பிடத்தக்கது. இது மட்டுமில்லாமல் பல்வேறு பகுதிகளிலும் போலீசார் ரவுடிகளை சுட்டுப் பிடித்து வருகின்றனர். இது மட்டும் அல்லாமல் போலீசார் கைது செய்ய செல்லும்போது ரவுடிகள் தப்ப முற்படுவதும், அவர்கள் தவறி விழுந்து கை மற்றும் கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications