யார் எங்கள் எம்எல்ஏ? அவரை நாங்கள் பார்த்ததே இல்லை... கொந்தளிக்கும் பொதுமக்கள்..!
சென்னை: கனமழையால் வடசென்னையில் பல பகுதிகள் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை இந்த பகுதியில் அரசு அதிகாரிகள் எட்டிக்கூடப் பார்க்கவில்லை என்றும் சட்டசபை உறுப்பினரும் கூட இங்கு வரவில்லை என வேதனையுடன் வீடியோ வெளியிட்டுள்ளனர்.
வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகச் சென்னை, திருவள்ளூர் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர் உள்ளிட்ட வடமாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
தலைநகர் சென்னைக்கு ரெட் அலர்டு கொடுக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த 2 நாட்களாகவே சென்னையில் கனமழை பெய்து வருகிறது

சென்னையில் கனமழை
குறிப்பாகக் கடந்த சனிக்கிழமை நள்ளிரவில் மிகக் குறுகிய நேரத்தில் தலைநகர் சென்னையில் பல பகுதிகளில் அதிக மழை கொட்டித் தீர்த்தது. இதனால் நகரின் பல்வேறு முக்கிய பகுதிகளிலும் மழை நீர் தேங்கியுள்ளது. மழை நீரை மோட்டரை கொண்டு வெளியேற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இருப்பினும் மழை தொடர்ந்து பெய்து வருவதால் சென்னைவாசிகளின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மழைநீர் தேங்கியதால் பல இடங்களிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டன.

வடசென்னை
எப்போது மழை பெய்தாலும் வடசென்னை பகுதியில் உள்ள பல பகுதிகளும் மோசமாகப் பாதிக்கப்படும். கடந்த 2015ஆம் ஆண்டில் ஏற்பட்ட சமயத்திலும் கூட மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றாக வடசென்னை. இந்த முறையும் அங்கு நிலைமை மாறவில்லை. அங்குள்ள பெரும்பாலான பகுதிகளில் இடுப்பளவிற்கு மழைநீர் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் அங்குள்ள மக்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மின்சாரம் இல்லை
குறிப்பாகச் சென்னை ராயபுரம் பழைய வண்ணாரப்பேட்டை போஜராஜன் நகர், சீனிவாசபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் தேங்கி வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருவதாகக் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், பாதுகாப்பு காரணங்களுக்காக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதால் கடந்த 2 நாட்களாகவே பொதுமக்கள் மின்சாரம் இல்லாமல் இருளில் வசித்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களைக் கூட இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

கொந்தளிக்கும் பொதுமக்கள்
மேலும், இதுவரை இந்த பகுதியில் அரசு அதிகாரிகள் எட்டிக்கூடப் பார்க்கவில்லை என்று வேதனையுடன் தெரிவித்த அப்பகுதி மக்கள் இதுவரை யார் எங்கள் எம்எல்ஏ என்று எங்களுக்குத் தெரியாது. அவரை நாங்கள் பார்த்ததே இல்லை என்று பொதுமக்களே வீடியோவாக பதிவிட்டு சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர். இந்த பகுதிக்கு மிக அருகில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வந்து சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ராயபுரம் தொகுதியின் சட்டசபை உறுப்பினராக திமுகவின் ஐட்ரீம் இரா. மூர்த்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வேளச்சேரி எம்எல்ஏ
முன்னதாக, வேளச்சேரி பகுதியிலும் வெள்ள பாதிப்பு மோசமாக உள்ள நிலையில், அப்பகுதியின் சட்டசபை உறுப்பினர் வெள்ள பாதிப்புகள் குறித்துக் கேட்டறியவில்லை என அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டினர். இந்நிலையில் தனது வீடே வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதாலேயே மீட்புப் பணிகளில் ஈடுபடுவதில் தாமதம் ஏற்பட்டதாக வேளச்சிரே எம்எல்ஏ அசன் மவுலானா ட்வீட் செய்துள்ளார். மேலும், வெள்ளநீர் புகுந்த தனது வீட்டின் புகைப்படங்களையும் அவர் பதிவிட்டுள்ளார். இந்த படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.

உதவி எண்கள்
அடுத்து வரும் நாட்களிலும் கனமழை தொடர வாய்ப்புள்ள நிலையில் இந்த மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் 1913, 04425619206, 04425619207, 04425619208 ஆகிய எண்களைத் தொடர்பு கொண்டு உதவிகளைப் பெறலாம் எனச் சென்னை மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications