ரயில்வே தேர்வுகள் திடீர் ரத்து-வெளி மாநிலம் சென்ற தமிழர்கள் தவிப்பு-இழப்பீடு கோரும் சு.வெங்கடேசன்!
சென்னை: ரயில்வே வாரியத் தேர்வுக்காக 1,000 கிலோ மீட்டர் பயணித்து வெளி மாநிலங்களுக்கு சென்ற தமிழர்களுக்கு பேரதிர்ச்சியாக 'தொழில்நுட்ப காரணங்களுக்காக' தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரயில்வே தேர்வு வாரியத்தை நம்பி வெளிமாநிலம் சென்று திரும்பியவர்களுக்கு பயணத் தொகையை இழப்பீடாக ரயில்வே துறை வழங்க வேண்டும் என்று சு.வெங்கடேசன் எம்பி வலியுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக சு.வெங்கடேசன் எம்பி கூறியிருப்பதாவது: ரயில்வே தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் லோகோ பைலட் காலிப் பணியிடங்களுக்கான CBT தேர்வுக்கு தமிழ்நாட்டில் இருந்து தேர்வெழுதுவோருக்கு 1500 கிலோமீட்டருக்கு அப்பால் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன.

அதை மாற்ற வேண்டுமெனக் கோரி தொடர்ச்சியான தலையீடுகளை மேற்கொண்டோம் . ஆனால் உடனடியாக 6000 தேர்வர்களுக்கு தேர்வு மையங்களை தமிழ்நாட்டில் தேர்வு செய்ய முடியவில்லை என பதில் அளித்தது.
இத்தனை தடைகளையும் மீறி இன்றைய தினம் 1000 கிலோ மீட்டருக்கும் மேல் பயணம் செய்து தமிழ்நாட்டு தேர்வர்கள் தேர்வெழுத சென்றனர். ஆனால் இன்று தொழில்நுட்ப காரணங்களால் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக ரயில்வே தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு தேர்வெழுத சென்றவர்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்தனை ஆயிரம் கிலோமீட்டர்கள் பயணம் செய்து தேர்வெழுத வருவோருக்கான தொழில்நுட்ப ஏற்பாடுகளைக் கூட முன்னெச்சரிக்கையாக செய்திடாமல் இருப்பது ரயில்வே தேர்வு வாரியத்தின் அலட்சியத்தின் உச்சம். இந்த தொழில்நுட்பக் கோளாறு குறித்து முறையான முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும்.
தொழில்நுட்ப கோளாறு காரணமாக இரயில்வே தேர்வு வாரியத் தேர்வு ரத்து.
— Su Venkatesan MP (@SuVe4Madurai) March 19, 2025
1000 கிலோமீட்டருக்கு மேல் பயணப்பட்டு தேர்வு மையத்திற்கு சென்றுள்ள தேர்வர்கள் அதிர்ச்சி.
போதுமான முன்னெச்சரிக்கை
செய்திடாமல் இருந்தது ரயில்வே தேர்வு வாரியத்தின் அலட்சியத்தின் உட்சம்.
இந்த செயல் RRB யின்… pic.twitter.com/BFzniLWPSk
வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டிய ஒரு தேர்வு தேர்வர்களுக்கான குறைந்தபட்ச வாழ்வியல் தேவையையும் சூறையாடுகிறது. இது ரயில்வே தேர்வு வாரியத்தின் மீதான நம்பிக்கையையே கேள்விக்கு உள்ளாக்குகிறது. இதனை ஒரு போதும் ஏற்கமுடியாது. பிற மாநிலங்களுக்கு தேர்வு மையம் வரை சென்று திரும்பிய தேர்வர்கள் செலவு செய்த தொகையை இழப்பீட்டுத் தொகையாக ரயில்வே வாரியம் வழங்க வேண்டும்.
எனவே இதன் பின்னர் அறிவிக்கப்பட உள்ள தேர்வையாவது தமிழ்நாட்டு தேர்வர்களுக்கு தமிழ்நாட்டிலேயே தேர்வுமையம் அமைத்து நடத்தப்படுவதை ரயில்வே அமைச்சகமும் , ரயில்வே தேர்வு வாரியமும் உறுதிபடுத்த வேண்டுமென வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு சு.வெங்கடேசன் எம்பி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications