பெண்களின் பொற்காலம்.. இலவச பேருந்து, மாதம் ரூ1,000 உதவி தொகை.. சரித்திரம் படைக்கும் திராவிட மாடல்!
சென்னை: பெண்களுக்கு இலவச பேருந்து திட்டத்தை செயல்படுத்தி மிகப் பெரும் மறுமலர்ச்சியை உருவாக்கிய திராவிட மாடல் அரசு இப்போது மாதந்தோறும் தகுதி வாய்ந்த குடும்ப தலைவிகளுக்கு ரூ1,000 உதவித் தொகை வழங்கப்படும் என அறிவித்திருப்பது பெரும் வரவேற்புக்குரியதாகும்.
தமிழ்நாடு முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற போது கையெழுத்திட்ட 5 கோப்புகளில் ஒன்று நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்பதுதான். இத்தகைய இலவச பயணத்தின் மூலம் பெண்களுக்கு அதுவரையிலான செலவுகளில் ரூ1,000 சேமிப்பாக கிடைத்தது. இது உழைக்கும் பெண்களுக்கு மிகப் பெரிய வரபிரசாதமாக கொண்டாடப்படுகிறது. இது நாட்டிலேயே மிகப் பெரிய முன்னோடித் திட்டமாகும்.

பெண்களுக்கான உரிமையை பேசுகிற இயக்கமாக திராவிடர் இயக்கம் இல்லாமல் நடைமுறைப்படுத்துகிற அரசாகவும் இருக்கிறது என்பதற்கு மேலும் ஒரு உதாரணமாக திகழ்ந்தது இந்த இலவச பயண திட்டம்.
இதேபோல் புதுமை பெண்கள் திட்டம். கல்லூரி செல்லும் மாணவிகளுக்கான நிதி உதவித் திட்டம் எத்தகைய பாய்ச்சலைப் பெற்றுள்ளது என்பதையும் இன்று விவரித்திருக்கிறார் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.

இது தொடர்பாக பட்ஜெடடை தாக்கல் செய்து பேசிய நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், ஒரு சமுதாயம் செழித்து தன்னிறைவுடன் திகழ வேண்டுமென்றால் அச்சமுதாயத்திலுள்ள பெண்கள் கல்வியறிவு பெற்றவர்களாய் இருப்பது மிகவும் அவசியம். இதனை நன்குணர்ந்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் பெண் கல்வியை ஊக்குவிக்கும் பொருட்டு 1989ஆம் ஆண்டு மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித்தொகை திட்டத்தினை அறிமுகப்படுத்தினார். தமிழ்நாட்டில் பல ஏழை குடும்பங்களைச் சேர்ந்த மாணவியர் 12ஆம் வகுப்பு முடித்தவுடன் உயர்கல்வியைத் தொடர முடியாமல் போகிறது என்பதை உணர்ந்த தமிழ்நாடு அரசு இத்திட்டத்தை மாற்றியமைத்தது, அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்து உயர்கல்வியில் சேர்ந்த அனைத்து மாணவிகளுக்கும் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படுகிறது. தற்போது, ஒவ்வொரு மாதமும் 2.20 இலட்சம் மாணவிகள் இத்திட்டத்தின் கீழ் பயனடைந்து வருகின்றனர். 2021-22 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது, உயர்கல்வியில் முதலாம் ஆண்டில் சேரும் மாணவிகளின் எண்ணிக்கை நடப்பு ஆண்டில் 29 சதவீதம் அதிகரித்துள்ளது. அதாவது, கூடுதலாக 20,477 மாணவியர்கள் சேர்ந்துள்ளனர். பள்ளிப்படிப்பு முடித்த பின் உயர்கல்வியை தொடராத பல மாணவிகள் கூட தற்போது கல்லூரிகளில் சேர்ந்திருப்பது இத்திட்டத்தின் வெற்றிக்குச் சான்றாகும் என பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
இந்த சரித்திர சாதனையில் மற்றொரு மணிமகுடமாக பெண்களுக்கு மாதம் ரூ1,000 உதவித் தொகை வழங்கும் திட்டம் செப்டம்பர் 15-ந் தேதி முதல் செயல்படுத்தப்படும் என்கிற அறிவிப்புதான்.
தமிழ்நாடு சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்த நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இது தொடர்பாக வெளியிட்ட்ட அறிவிப்பு: சமூகத்தின் சரிபாதியான பெண்ணினத்தை சரிநிகர் சமமாக உயர்த்த திட்டமிட்டுச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது திராவிட மாடல் அரசு. கல்வியில், நிருவாகத்தில், அதிகாரம் மிக்க பொறுப்புகளில், பொருளாதாரத்தில், சமூகத்தில் பெண்களை உயர்த்தும் திட்டங்களைத் திராவிட முன்னேற்றக் கழக அரசு அமையும் போதெல்லாம் தீட்டி செயல்படுத்தி வருகிறோம்.மகளிருக்குச் சொத்துரிமையும், உள்ளாட்சி அமைப்புகளில் தனி இடஒதுக்கீடும் அளித்தது முதல், இன்று அவர்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயணம் வழங்கியது வரை, மகளிரின் நலன் காத்து அவர்களது உரிமைகளை நிலைநாட்டுவதில் எப்போதும் அக்கறையுடன் செயல்பட்டு வருகிறோம். அந்த வரிசையில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படும் என்று நாங்கள் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்துள்ளோம். சொன்னதைச் செய்வோம்; செய்வதைச் சொல்வோம் என்ற இலக்கின்படி செயல்பட்டு வருபவர்கள் மட்டுமல்ல சொல்லாத பல நல்ல திட்டங்களையும் நாங்கள் செயல்படுத்தி வருகிறோம். மக்களைத் தேடி மருத்துவம், புதுமைப் பெண், நான் முதல்வன் போன்றவை தேர்தல் அறிக்கையில் சொல்லப்படாதவை.
அதன் அடிப்படையில், தகுதிவாய்ந்த குடும்பங்களின் குடும்பத் தலைவிகளுக்கு வரும் நிதியாண்டில் மாதம் 1,000 ரூபாய் உரிமைத் தொகையாக வழங்கப்பட இருக்கிறது. ஒன்றிய அரசால் பெருமளவு உயர்த்தப்பட்டுள்ள சமையல் எரிவாயு விலை, விலைவாசி உயர்வால் அதிகரிக்கும் குடும்பச் செலவுகள் போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களின் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும் 1,000 ரூபாய் என்பது அவர்களது அன்றாட வாழ்க்கைக்குப் பேருதவியாக இருக்கும். வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தத் திட்டம் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டான இந்த ஆண்டில், திராவிட இயக்க மாதம் என சொல்லத்தக்க செப்டம்பர் மாதத்தில், தாய் தமிழ்நாட்டின் தலைமகன் - பேரறிஞர் பெருமகன் அறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளான செப்டம்பர் 15 ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இத்திட்டத்திற்காக, இந்த வரவு-செலவுத் 7,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியிருந்தார்.
இப்படி பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், மாணவிகளுக்கு கல்விக்கான நிதி உதவி, மகளிர் சுய உதவிக் குழு என்பதைத் தொடர்ந்து தகுதி வாய்ந்த குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ1,000 உதவி தொகை என்பது நிச்சயம் சரித்திர சாதனைதான் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.












Click it and Unblock the Notifications