ரூ.1000 வேணுமா? கலைஞர் உரிமைத்தொகைக்கு மேல்முறையீடு.. மெசேஜ் எப்போது வரும் தெரியுமா? முக்கிய தகவல்
சென்னை: மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் மேல்முறையீடு செய்த தகுதியானவர்களுக்கு எப்போது குறுஞ்செய்தி அனுப்பப்படும் என்பது குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 2021 சட்டசபை தேர்தலின்போது திமுக தனது தேர்தல் வாக்குறுதியாக அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மாதம் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படும் என அறிவித்தது. இந்த வாக்குறுதி மக்களை கவர்ந்தது. தேர்தலில் திமுக வெற்றி பெற்ற நிலையில் இரண்டரை ஆண்டுகள் கழித்து திட்டம் தொடங்கப்பட்டது.

அரசிடம் நிலவிய நிதி பற்றாக்குறையால் தகுதியானவர்களுக்கு மட்டும் மகளிர் உரிமைத்தொகை வழங்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து சில விஷயங்கள் தகுதிகளாக நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த தகுதியை கொண்டவர்களுக்கு மட்டுமே கடந்த செப்டம்பர் மாதம் 15ம் தேதி அண்ணா பிறந்தநாளில் முதல்வர் ஸ்டாலின் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை தொடங்கி வைத்தார்.
அதன்படி 1.06 குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 உரிமைத்தொகை செலுத்தப்பட்டது. தற்போது அவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமைத்தொகை வங்கி கணக்கு வழியாக செலுத்தப்பட்டு வருகிறது. இதற்கான எஸ்எம்எஸ் அவர்களின் செல்போன் எண்களுக்கு அனுப்பியும் வைக்கப்படுகிறது. இதற்கிடையே தான் மகளிர் உரிமைத்தொகை பெற தகுதி இருந்தும் கூட தங்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்தன. பல லட்சம் பெண்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது இதையடுத்து நிராகரிக்கப்பட்டோர் மேல்முறையீடு செய்ய தமிழக அரசு வாய்ப்பு வழங்கியது.
மேல்முறையீடு செய்ய விரும்பினால் நிராகரிப்பு தொடர்பான குறுஞ்செய்தி பெறப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள் இ-சேவை மையம் வழியாக வருவாய் கோட்டாட்சியருக்கு மேல்முறையீடு செய்யலாம் என அறிவிக்கப்பட்டது. இதைடுத்து கடந்த அக்டோபர் மாதம் கூடுதலாக 5,041 பேர் இந்த திட்டத்தில் பயனாளிகளாக சேர்க்கப்பட்டனர். அதேவளையில் இறந்துபோனவர்கள், தகுதியற்றவர்கள் என 8,833 பேரின் பெயர்கள் நீக்கப்பட்டன.
இருப்பினும் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் பயன்பெற 11.85 லட்சம் பேர் மேல்முறையீடு செய்து இருந்தவர்களின் விண்ணப்பங்களை பரிசீலனை செய்யும் பணி தொடங்கியது. இந்நிலையில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை கிடைக்காமல் மேல்முறையீடு செய்தவர்களுக்கு இன்னும் 10 நாட்களில் குறுஞ்செய்தி அனுப்பி வைக்கப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
இதுதொடர்பாக அதிகாரிகள் தரப்பில் கேட்டபோது, ‛‛தமிழக அரசு தகுதியான அனைவருக்கும் கலைஞர் உரிமைத்தொகை வழங்குவதில் உறுதியாக உள்ளது. தற்போது மேல்முறையீடு செய்தவர்களின் விண்ணப்பங்களை பரிசீலிக்கும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த பணி முடிவடைந்தவுடன் இன்னும் 10 நாட்களில் அவர்களின் செல்போன்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பி வைக்கப்படும்'' என்றனர்.












Click it and Unblock the Notifications