சென்னை அருகே ரூ 13 கோடி மதிப்புள்ள திமிங்கல கொழுப்பு பறிமுதல்.. அம்பர் கிரீஸுக்கு இவ்வளவு மதிப்பா?
சென்னை: சென்னை அருகே திருப்போரூரில் ரூ 13 கோடி மதிப்புள்ள திமிங்கலத்தின் கொழுப்பை வனத்துறையினர் பறிமுதல் செய்து 9 பேரை கைது செய்தனர்.
இந்தியாவில் தடை செய்யப்பட்ட திமிங்கலம் கொழுப்பான அம்பர் கிரீஸ் என்ற பொருளை விற்பனை செய்வதற்காக சென்னை வந்த கிருஷ்ணகிரி மற்றும் கடலூரை சேர்ந்த கும்பல் திருப்போரூர் பகுதியில் ஒன்றுகூடி விற்பனை செய்ய சந்திப்பதாக திருப்பூர் வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
தகவலின் அடிப்படையில் திருப்போரூர் வனச்சரக அலுவலர் கல்யாண், சென்னை வனச்சரக அலுவலர் ராஜேஷ் உள்ளிட்ட வன காவலர்கள் மாறுவேடத்தில் சென்று முதலில் 3 பேர் கொண்ட கும்பலை வளைத்து பிடித்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் பெங்களூரில் இருந்து ஒரு கும்பல் திமிங்கலம் வாங்க வருவதாக தெரியவந்தது.

முயற்சி
அந்த கும்பலைப் பிடிக்க வனத்துறையினர் முயற்சி செய்து தங்களிடம் சிக்கிய ஒருவரை வைத்து செல்போனில் பேசி வரவழைத்து அவர்களை மேலக்கோட்டையூர் வரவைத்து மடக்கிப் பிடித்தனர். இந்த சம்பவத்தில் காஞ்சிபுரம் பிள்ளையார் பாளையத்தை சேர்ந்த மோகன்தாஸ்(34), கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை சேர்ந்த அருள்முருகன்(30), கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை சேர்ந்த விக்னேஷ்(30), தாம்பரம் அடுத்த வெங்கபக்கத்தை சேர்ந்த டேனியல்(53) ஸ்ரீபெரும்புதூர் அடுத்த நடுவீரப்பட்டு பகுதியை சேர்ந்த ஆதித்யா(43), சென்னை அரும்பாக்கத்தில் சேர்ந்த ராஜன்(51), நெற்குன்றத்தை சார்ந்த முருகன்48), பூந்தமல்லி அடுத்த தண்டலம் கிராமத்தை சேர்ந்த மோகன்(50), கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த சதீஷ்குமார்(50) ஆகிய 9 பேரை போலீசார் கைது செய்தனர்.

இரு சக்கர வாகனங்கள்
கைதான அவர்களிடமிருந்து 13 கிலோ அம்பர் கிரீஸ், இரண்டு இருசக்கர வாகனங்கள், ஒரு கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த திமிங்கல கொழுப்பின் மதிப்பு 13 கோடி என வன அலுவலகர்கள் தெரிவித்தனர். அது போல் நேற்று முன் தினம் தூத்துக்குடியில் 23 கிலோ எடை கொண்ட அம்பர் கிரீஸை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ 23 கோடியாகும். இது தொடர்பாக நெல்லை , தூத்துக்குடியை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். 20 வயதுக்கு மேல் உள்ள திமிங்கலங்கள், உடலில் இருந்து உற்பத்தியாகும் மெழுகு போன்ற பொருளை வாய் வழியாக உமிழும். இதுவே, அம்பர் கிரீஸ். கடலில் மிதக்கும் தன்மை கொண்ட அம்பர் கிரீஸ் உயர்தர நறுமணப் பொருட்கள் தயாரிக்க பயன்படுகிறது.

நறுமணப் பொருட்கள்
துபாய் உள்ளிட்ட நாடுகளில் நறுமணப் பொருட்கள் தயாரிப்புக்கு அம்பர் கிரீஸ் பயன்படுத்தப்படுகிறது. எகிப்தியர்கள் பழங்காலத்தில் மருந்துப் பொருளாக இதை பயன்படுத்தியுள்ளனர். இந்தியாவில் இதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த அம்பர் கிரீஸை திமிங்கலத்தின் வாந்தி என்றும் கூறுவார்கள். இது வெள்ளை, சாம்பல்- கருப்பு நிறங்களில் கலந்து இருக்கும்.

வேட்டையாடப்படும் திமிங்கலங்கள்
பொதுவாக திமிங்கலங்கள் எந்த விலங்கையாவது வேட்டையிடும் போது இந்த வாந்தியை வெளியேற்றும். இதன் மூலம் அதன் உடலுக்கு தீங்கு விளைவிக்காது. இது போல் திமிங்கலம் வெளியேற்றும் இந்த கொழுப்பு பொருள் கடலில் மிதக்கும் போது சூரிய ஒளியும் உப்பு நீரும் பட்டு அது திடப்பொருளாக மாறுகிறது. திமிங்கலத்தின் வாந்தி முதலில் துர்நாற்றம் வீசும் என்றும் நேரம் ஆக ஆக அதன் நறுமணம் அதிகமாக இருக்கும் என்றும் தெரிவிக்கிறார்கள். இந்த அம்பர் கிரீஸ் பழைமையாகவும் பெரியதாகவும் இருந்தால் அதிக விலைக்கு செல்லும்.

மார்கோ போலோ
வெளிநாட்டு பயணியான மார்கோ போலோ இந்த அம்பர் கிரீஸ் குறித்து தனது குறிப்பில் எழுதியுள்ளார். இது மூளை, உடல், நரம்பு மற்றும் பாலுறவு பிரச்சினைகளுக்கு பல்வேறு மூலிகைகளுடன் பயன்படுத்தப்படுகிறது. இது விந்தணுக்களை பெருக்கும் அளவுக்கு நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது. தங்கத்தை விட இது விலை மதிப்பானது. இதனால் இதை மிதக்கும் தங்கம் அல்லது கடல் தங்கம் என அழைப்பார்கள். இது கிலோ ஒன்றுக்கு ரூ 1.5 கோடிக்கு மதிப்பிடப்படுகிறது.

ஒடிஸா கடற்பகுதி
இந்த அம்பர் கிரீஸ் பொதுவாக குஜராத் மாநிலம் மற்றும் ஒடிஸா கடற்பகுதியில் சேகரிக்கப்படுகிறது. அது போல் கேரளா கடற்பகுதியிலும் இது கிடைக்கிறது. 1986 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட வன பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் இந்த பொருள் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த அம்பர் கிரீஸுக்காக திமிங்கலங்கள் வேட்டையாடப்படுவது இந்த சட்டத்தின் மூலம் தடுக்கப்படுகிறது. இந்தியாவை போல் ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் அம்பர் கிரீஸுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அது போல் பிரிட்டன், பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, மாலத்தீவுகளில் இந்த அம்பர் கிரீஸை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நறுமணம் நாய்களை கவரும்
இந்த அம்பர் கிரீஸின் நறுமணம் நாய்களை கவரும். இதனால் நாய்கள் மூலமும் அம்பர் கிரீஸை தேடும் பணிகளை சிலர் மேற்கொண்டு வருகிறார்கள். அம்பர் என்றால் சாம்பல் நிறம் என்பது பழைய பிரென்ஞ் வார்த்தை. வெளிநாடுகளில் இந்த அம்பர் கிரீஸ் அட்லாண்டிக் கடல், தென்னாப்பிரிக்கா கடல், பிரேசில், மடகாஸ்கர், மாலத்தீவுகள், சீனா, ஜப்பான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, மொலுக்கா தீவுகளில் இது கிடைக்கும். யேமனில் இந்த ஆண்டு மீனவர்கள் 280 பவுண்ட் எடை கொண்ட அம்பர் கிரீஸை கண்டெடுத்தனர். இதன் மதிப்பு 1.5 மில்லியன் டாலர்களாகும். அது போல் 1.75 மில்லியன் ஆண்டுகள் பழமைவாய்ந்த அம்பர் கிரீஸ் படிவங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications