ரூ. 1600 கோடி சசிகலா பினாமி சொத்து....14 பேர் தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்த ஹைகோர்ட்
சசிகலாவுக்கு பினாமிகளாக செயல்பட்டதாக கூறி வருமான வரித்துறை எடுத்த நடவடிக்கையை எதிர்த்து நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் 14 பேர் தாக்கல் செய்த வழக்குகளை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை: பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட 1,600 கோடி ரூபாய் மதிப்பிலான கரன்சி நோட்டுக்களை பயன்படுத்தி சொத்துக்களை வாங்க சசிகலாவுக்கு பினாமிகளாக செயல்பட்டதாக கூறி வருமான வரித்துறை எடுத்த நடவடிக்கையை எதிர்த்து நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் 14 பேர் தாக்கல் செய்த வழக்குகளை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த 2016 நவம்பர் மாதம் 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்தது. மதிப்பிழப்பு செய்யப்பட்ட ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் மதிப்பிலான கரன்சிகளை பயன்படுத்தி, சொத்துக்களை வாங்கியதாக, சசிகலா மீது வருமான வரித்துறை குற்றம் சாட்டியது.

இதுபோல 130 கோடி ரூபாய் மதிப்பிலான, மதிப்பிழப்பு செய்யப்பட்ட கரன்சிகளை பயன்படுத்தி வாங்கப்பட்ட சென்னை பெரம்பூரில் உள்ள ஸ்பெக்ட்ரம் மாலை வாங்கிய விவகாரம் தொடர்பாக, மால் உரிமையாளர்கள் கங்கா பவுண்டேஷன், பாலாஜி மற்றும் வி.எஸ்.ஜே தினகரன் ஆகியோர் மீது வருமான வரித்துறையினர், பினாமி சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்தனர்.
கடந்த 2017ஆம் ஆண்டு 'ஆப்ரேஷன் கிளீன் மணி' என்ற பெயரில் வருமான வரித்துறை சோதனை நடத்தினர். சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் தொடர்புடைய 187 இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது. அதில், 4ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் வாங்கப்பட்டதற்கான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, வி.எஸ்.ஜே.தினகரனின் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்திய வருமான வரித் துறையினர், பல முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.
இந்த சோதனையில் 1,600 கோடி ருபாய் மதிப்பிலான மதிப்பிழப்பு செய்யப்பட்ட கரன்சிகள் மூலம், பல்வேறு சொத்துக்களை வாங்க சசிகலாவுக்கு பினாமியாக செயல்பட்டுள்ளதாக கூறி கங்கா பவுண்டேஷன், வி.எஸ்.ஜே தினகரன், ஸ்பெக்ட்ரம் மால் உரிமையாளர்கள், பாலாஜி, பழைய மாமல்லபுரம் சாலையில் மார்க் ஸ்கொயர் ஐ.டி. பார்க், புதுச்சேரி ஓசன் ஸ்பிரே உள்ளிட்ட நிறுவனங்களின் சொத்துக்களை முடக்கி வருமான வரித்துறையினர் பினாமி சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்தனர்.
இதை எதிர்த்து தினகரன், பாலாஜி, கங்கா பவுண்டேஷன் உள்பட 14 பேர் தரப்பில் வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த வழக்குகளை, நீதிபதி அனிதா சுமந்த் விசாரித்தார். மதிப்பிழப்பு செய்யப்பட்ட கரன்சிகளை பெற்று இடத்தை விற்பனை செய்ததற்காக தங்களுக்கு எதிராக பினாமி சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியாது என மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.
ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே இடத்தை விற்பனை செய்துள்ளதால் தங்களுக்கு எதிராக பினாமி சட்டத்தை பயன்படுத்த முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வருமான வரித்துறை தரப்பு, கடும் நிதி நெருக்கடி காரணமாக ஸ்பெக்ட்ரம் மாலை விற்பனை செய்ய உரிமையாளர்கள் முடிவு செய்ததாகவும், அதற்காக அவர்கள் ரியல் எஸ்டேட் ஏஜெண்ட் மூலம் சசிகலாவின் வழக்கறிஞரை அணுகியதாகவும், இந்த சந்திப்பு பண மதிப்பிழப்புக்கு முன் நடந்ததாகவும் குறிப்பிடப்பட்டது.
ஸ்பெக்ட்ரம் மாலுக்கான தொகையை உரிமையாளர்களுக்கு வழங்க மேற்கொண்ட நடைமுறை, வாங்குபவரின் பெயர் இல்லாமல் ஒப்பந்தங்கள் மேற்கொண்டது போன்ற நடவடிக்கைகள் காரணமாக, பினாமி சட்டத்தை பயன்படுத்தியது சரியே எனவும் வாதிடப்பட்டது.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி, வருமான வரித்துறை தரப்பு விளக்கத்தை ஏற்று அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications