மினிமம் பேலன்ஸ் அபராதம் மூலம் ரூ.2,331 கோடி வசூல்! 11 வங்கிகளில் கொட்டிய பண மழை!
சென்னை: 2024 ஆம் நிதியாண்டில் மட்டும் 11 பொதுத்துறை வங்கிகள் குறைந்தபட்ச இருப்புத் தொகையை சரியாகப் பராமரிக்கவில்லை எனச் சொல்லி வாடிக்கையாளர்களிடமிருந்து ரூ.2,331 கோடியை வசூல் செய்துள்ளன.
தனியார் வங்கிகளில் நடக்கும் கட்டணக் கொள்ளை தாங்க முடியாமல்தான் மக்கள் பொதுத்துறை வங்கிகளின் தங்களின் வங்கிக் கணக்கைத் தொடங்க அதிக ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால், அப்படி அரசு வங்கிகளே பொது மக்களிடம் இருந்து மினிமம் பேலன்ஸ் இல்லை என்று சொல்லி ஒரு தொகையை வசூலித்துவிடுகின்றன.

இப்படித்தான் மகளிர் உரிமைத் தொகையை தமிழக அரசு வங்கிகளில் செலுத்திய போது, பல ஆண்டுகளாக இருப்புத் தொகையை முறையாகப் பராமரிக்கவில்லை என்று சொல்லி அரசு கொடுத்த 1000 ரூபாயிலிருந்து குறிப்பிட்ட தொகையை பிடித்தம் செய்தன. அது மிகப்பெரிய சர்ச்சையாக மாறியது. அரசு முன்பே இது பற்றிய வழிகாட்டு நெறிமுறையை வெளியிட்டும் பணத்தைப் பிடித்த வங்கிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக நிதியமைச்சர் எச்சரித்திருந்தார்.
ஆனால், அப்படி பிடித்தம் செய்த பணத்தை எத்தனை வங்கிகள் மீண்டும் உரிய வங்கிக் கணக்குகளில் திரும்பச் செலுத்தின என்பது இதுவரை புரியாத புதிராகவே உள்ளது. இந்நிலையில்தான் இந்த 2024 ஆம் நிதியாண்டில் 11 பொதுத்துறை வங்கிகள் குறைந்தபட்ச இருப்புத் தொகையை சரியாகப் பராமரிக்கவில்லை என்பதற்காக வாடிக்கையாளர்களிடமிருந்து ரூ.2,331 கோடி வசூலித்துள்ளன என்பது தெரியவந்துள்ளது. சொல்லப் போனால் இப்படி வாடிக்கையாளர்களின் சேமிப்பு வங்கிக் கணக்கில் பணம் இல்லாவிட்டாலும் கூட வங்கிகள் நூதனமாகப் பணம் சம்பாதித்து வருகின்றன.
குறைந்தபட்ச இருப்புத் தொகை இல்லை என்பதற்காக வாடிக்கையாளர்களிடம் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா மட்டுமே பணத்தை பிடித்தம் செய்யப் போவதில்லை என்று முன்பே அறிவித்திருந்தது. அதனடிப்படையில் 2020 நிதியாண்டிலிருந்து குறைந்தபட்ச இருப்புத் தொகையைப் பராமரிக்காததற்காக அபராதம் வசூலிப்பதை எஸ்பிஐ நிறுத்திவிட்டது.
மற்றபடி மீதமுள்ள 11 பொதுத்துறை வங்கிகள் 2024 நிதியாண்டில் சேமிப்பு வங்கிக் கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகையைப் பராமரிக்கத் தவறியதற்காகக் கணக்கு வைத்திருப்பவர்களிடமிருந்து ரூ. 2,331 கோடி வசூலித்துள்ளன என்ற தகவல் பொதுமக்கள் பலரையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. இந்தத் தொகை 2023 நிதியாண்டில் ரூ.1,855.43 கோடியாக இருந்தநிலையில் இப்போது 25.63% உயர்ந்துள்ளது என்றும் தெரிகிறது. இந்த வங்கிகள் கடந்த 3 ஆண்டுகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகையைப் பராமரிக்காததற்காகக் கணக்கு வைத்திருப்பவர்களிடமிருந்து ரூ.5,614 கோடி வசூலித்துள்ளதாக நிதி அமைச்சக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
பஞ்சாப் நேஷனல் வங்கி தனது வாடிக்கையாளர்களிடமிருந்து அதிகபட்சமாக ரூ.633.4 கோடியை அபராதமாக வசூலித்துள்ளது. அதைத் தொடர்ந்து பேங்க் ஆஃப் பரோடா ரூ.386.51 கோடி, இந்தியன் வங்கி ரூ.369.16 கோடியை வசூலித்துள்ளதாக நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு நிதியமைச்சகம் அளித்துள்ள பதிலில் இருந்து தெரியவந்துள்ளது.

பேசிக் சேவிங் பேங்க் டெபாசிட் அக்கெளண்ட் (BSBDA) வழிகாட்டுதல் நெறிமுறையின் கீழ் கணக்கு வைத்திருப்பவர்களுக்குக் குறைந்தபட்ச இருப்புத் தேவை இல்லாமல் சில அடிப்படை வசதிகள் இலவசமாக வழங்கப்படுகின்றன. அதன்படி வங்கிக் கிளை மூலம் பணம் போடுவது அல்லது பெறுவது, ஏடிஎம்கள் மூலம் பணம் எடுப்பது, சிடிஎம்கள் (Cash Deposit Machines) மூலம் பணம் போடுவது, அதற்கான பற்றுச்சீட்டு பெறுவது என எந்தவொரு மின்னணு சேவைக்குக் கட்டணங்களை நிர்ணயிக்கக் கூடாது. இவை அனைத்தும் இலவச சேவைகள்தான்.
ஆனாலும், தனியார் வங்கிகளைப் போல இப்போது பொதுத்துறை வங்கிகளும் சில சேவைக்கு வரம்பு மட்டும் கட்டணத்தை நிர்ணயித்துள்ளன. சேமிப்பு வங்கிக் கணக்கின் (BSBDA) கீழ், ஏடிஎம் மூலம் பணம் எடுப்பது உட்பட ஒரு மாதத்தில் குறைந்தபட்சம் நான்கு முறை பணம் எடுக்க வங்கிகள் அனுமதிக்கின்றன.
இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கை படி, சேமிப்பு வங்கிக் கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகையைப் பராமரிக்காததற்கு அபராதக் கட்டணம் வசூலிப்பது குறித்தும், வங்கிகளில் வாடிக்கையாளர் சேவை குறித்தும் சில வழிகாட்டுதல்களை வகுத்துள்ளது. வங்கிகள் தங்களது வாரியம் அங்கீகரித்துள்ள கொள்கை படி, சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகையைப் பராமரிக்காதது தொடர்பான அபராதக் கட்டணங்களை நிர்ணயிக்க அனுமதித்துள்ளது. அதே சமயம் அபராதக் கட்டணங்கள் பராமரிக்கப்படும் உண்மையான இருப்புக்கும் குறைந்தபட்ச இருப்புக்கும் இடையிலான வித்தியாசத்தின் மீது ஒரு நிலையான சதவீதம் மட்டுமே விதிக்கப்பட வேண்டும் என்பதை உறுதி செய்துள்ளது.
வெவ்வேறு நடைமுறை அம்சங்களைக் கருத்தில் கொண்டு கட்டணங்களை வசூலிக்க வங்கிகள் ஸ்லாப் முறையை உருவாக்கியுள்ளன. மேலும், ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளின்படி, வங்கிகள் கணக்கைத் திறக்கும் போது குறைந்தபட்ச இருப்புத் தேவை குறித்து வாடிக்கையாளர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். அடுத்தடுத்த மாற்றங்கள் பற்றித் தெரிவிக்கப்பட வேண்டும். இந்த விவகாரம் பற்றிப் பேசிய வங்கி அதிகாரி ஒருவர், "கணக்கு வைத்திருப்பவர்களுக்குத் தேவையான குறைந்தபட்ச இருப்புத் தொகை இல்லை என்றால், அவர்களுக்குக் குறுஞ்செய்தி அல்லது அஞ்சல் மூலம் முன்கூட்டியே தெரிவிக்கப்பட வேண்டும்"என்கிறார்.
குறைந்தபட்ச இருப்புத் தொகையைப் பராமரிக்காத பட்சத்தில், அறிவிப்புத் தேதியிலிருந்து ஒரு மாதத்திற்குள் இருப்புத் தொகையை நிரப்பவில்லை என்றால்தான் அபராதக் கட்டணம் பிடிக்க உள்ளது பற்றி வாடிக்கையாளருக்கு வங்கி அறிவிக்க வேண்டும். வழிகாட்டுதல்களின்படி, குறைந்தபட்ச இருப்புத் தொகையைப் பராமரிக்காததற்காகக் கட்டணம் வசூலிப்பதால் மட்டுமே சேமிப்புக் கணக்கு உயிர்ப்புடன் இருக்கும் என்பதை உரிய முறையில் புரியவைக்க வேண்டும். ஆனால், இந்த நடைமுறைகள் யாவும் சரியாகப் பின்பற்றப்படவில்லை என்பதுதான் சோகம்.












Click it and Unblock the Notifications