”ரூ.4.73 கோடி ரொக்கம், முக்கிய ஆவணங்கள்” சென்னையில் நடந்த ஈடி சோதனையில் கைப்பற்றப்பட்டது என்ன?
சென்னை: சென்னை, வேலூர் உள்பட 16 இடங்களில் நடந்த அமலாக்கத்துறை சோதனையில் ரூ.4.73 கோடி ரொக்கம் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்ப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. மாசு கட்டுப்பாட்டு அதிகாரி வீடு உள்பட பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடந்திருந்தது.
சென்னையில் பல்வேறு இடங்களில் இன்று அதிகாலையிலேயே அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சென்னை அசோக் நகரில் இயங்கி வரும் மருந்து நிறுவனம் மற்றும் அதன் உரிமையாளருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது. அதிமுக ஆட்சிக்காலத்தில் மாசு கட்டுப்பாட்டு அதிகாரியாக இருந்தவர் வீட்டிலும் இந்த சோதனை நடந்தது. இந்த நிலையில் இச்சோதனையில் ரூ.4.73 கோடி ரொக்கம் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அசோக் நகரில் உள்ள என்சி எஸ் டெக்னாலஜி என்ற தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்கள், அந்நிறுவன உரிமையாளரின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது. இதேபோன்று சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் உள்ள தொழில் அதிபர் வீடு, விருகம்பாக்கம், சாலிகிராமம், தி. நகர், அசோக் நகர், சைதாப்பேட்டை, கோட்டூர்புரம் ஆகிய இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது. இதேபோன்று சேகர் ரெட்டி உறவினர்கள் வீட்டிலும் ரெய்டு நடப்பதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், சென்னை மற்றும் வேலூர் என 16 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.4.73 கோடி ரொக்கம் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக ஈடி தரப்பில் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக அமலாக்கத்துறை கூறுகையில், சென்னை மற்றும் வேலூரில் பல்வேறு இடங்களில் கடந்த 6 ஆம் தேதி அமலாக்கத்துறை சோதனை நடந்தது. சுற்றுச்சூழல், சுகாதார நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கியது தொடர்பாக, பணப்பறிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையின் இந்த சோதனை நடத்தப்பட்டது.
சென்னையில் விருகம்பாக்கத்தில் உள்ள ஓய்வு பெற்ற மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி பாண்டியன் வீடு உள்பட பல்வேறு இடங்களில் இந்த சோதனை நடந்தது. இந்த சோதனையில் பல்வேறு முறைகேடுகள், லஞ்ச பணம் கை மாறியதற்கான பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. ரூ.4.73 கோடி ரொக்கம் கைப்பற்றப்பட்டுள்ளது என்று கூறியுள்ளது. இதேபோல் ஏஜெண்டுகளாக செயல்பட்ட சிகாமணி, ஏகே நாதன், நவீன் குமார், வினோத்குமார் உள்ளிட்டோர் முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் கூறியுள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியின் போது மாசுக் கட்டுப்பாட்டு வாரியத் துறை கண்காணிப்பாளராக இருந்த பாண்டியன் மீது, அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டு இருந்தது. கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14 ஆம் தேதி இவரது வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு சோதனை நடந்தது. இதில் 1.37 கோடி ரொக்கம், 3 கிலோ தங்க கட்டிகள், 3 கிலோ வெள்ளி பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டிருந்தது. இதன் அடிப்படையிலேயே இந்த அமலாக்கத்துறை சோதனை நடத்தப்பட்டதாவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications