நடுவழியில் பயணியை இறக்கிவிட்ட ஆம்னி பஸ்.. மறக்க முடியாத உத்தரவிட்ட நுகர்வோர் நீதிமன்றம்
சென்னை: மதுரையில் இருந்து சென்னை வருவதற்காக தனியார் ஆம்னி பஸ்சில் முன்பதிவு செய்து இருந்த பயணியை நடுவழியில் இறக்கிவிட்டதற்காக ஆம்னி பஸ் நிறுவனம், ரெட் பஸ் செயலி உள்பட 3 பேருக்கு நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் சென்னையில் இருந்து கோவை, திருச்சி, மதுரை, நெல்லை, கன்னியாகுமரி, பெங்களூர், திருவனந்தபுரம் உள்பட பல்வேறு நகரங்களுக்கு தனியார் ஆம்னி பஸ்கள் இயங்கி வருகின்றன. ரெட் பஸ் உள்ளிட்ட செயலிகள் மூலமாக இந்த பஸ்களில் புக்கிங் செய்து பயணிகள் பயணம் செய்கிறார்கள்.

சொகுசான பயணம், விரைவாக செல்ல வேண்டிய ஊர்களுக்கு செல்ல முடியும் உள்ளிட்ட காரணங்களால் கட்டணம் அதிகமாக இருந்தாலும் கூட பயணிகள் இந்த ஆம்னி பஸ்களில் புக்கிங் செய்து பயணிப்பதை காண முடிகிறது. அதேவேளையில், ஆம்னி பஸ்களில் பண்டிகை மற்றும் வார இறுதி நாட்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக பயணிகள் குற்றச்சாட்டையும் முன்வைக்கின்றனர்.
அதுமட்டும் இன்றி ஒரு சில பேருந்துகள் பயணிகளை நடுவழியில் இறக்கிவிட்டு செல்வதாகவும் அவ்வப்போது பிரச்சினைகள் வெடிக்கும்.. இந்த நிலையில் தான், மதுரையில் இருந்து சென்னைக்கு செல்லும் பேருந்தில் ஏறிய பயணி ஒருவரை நடுவழியில் இறக்கிவிட்டதற்காக ஆம்னி பஸ் மற்றும் ரெட் பஸ் நிறுவனம் சேர்ந்து ரூ. 5 லட்சம் இழப்பீடு கொடுக்க வேண்டும் என்று நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்த விவரம் வருமாறு:-
அணு ஆராய்ச்சி மையத்தில் விஞ்ஞானியாக பணியாற்றி வரும் சண்முகநாதன் என்பவர் ரெட் பஸ் மொபைல் ஆப் மூலம் மதுரையில் இருந்து சென்னைக்கு வர ஏசி ஸ்லீப்பர் பஸ்சில் முன்பதிவு செய்திருந்தார். பஸ்சில் ஏற வரும் போது தன்னுடன் 2 பெட்டி காய்கறிகளை எடுத்து சென்றுள்ளார். அதற்கு கூடுதலாக 600 ரூபாய் கொடுக்க வேண்டும் என ஆம்னி பஸ்சின் நடத்துனர் கூறியுள்ளார்.
எனினும், 15 கிலோ வரை பைகளை எடுத்து செல்லலாம் என விதிகளில் குறிப்பிட்டுள்ளதே என பயணி சண்முகநாதன் ஆம்னி பஸ் கண்டக்டரிடம் கூறியிருக்கிறார். ஆனால் இதை ஏற்காத ஆம்னி பஸ் ஊழியர்கள் மதுரை மேலூர் அருகே வந்த போது, சண்முகநானை வலுக்கட்டாயமாக பஸ்சில் இருந்து இறக்கிவிட்டுள்ளனர். இதனால், சண்முகநாதன் ரெட் பஸ் மற்றும் பேருந்து நிறுவனம் மீது நுகர்வோர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.
ரெட்பஸ் நிறுவனம் சார்பில் தாங்கள் ஒரு முன்பதிவு நிறுவனமாக மட்டுமே செயல்படுவதாகவும் இது போன்ற சர்ச்சைகளுக்கு பொறுப்பல்ல என்றும் வாதத்தை முன்வைத்துள்ளனர். ஆனால், இதை ஏற்காத நுகர்வோர் ஆணையம், பயணிகளிடம் இருந்து நேரடியாக பணத்தை ரெட்பஸ் செயலி பெறுவதால் கண்டக்டரால் செய்யப்படும் நியாயமற்ற செயல்களுக்கு அந்த நிறுவனமும் பொறுப்பேற்க வேண்டும் என சுட்டிக்காட்டியது.
மேலும் ரெட்பஸ், பேருந்து உரிமையாளர், டிராவல்ஸ் நிறுவனம் ஆகிய 3 பேரும் சண்முக நாதனுக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ரூ.5 லட்சமும், சட்ட செலவுகளுக்காக ரூ.15 ஆயிரமும் வழங்க வேண்டும் என்ற அதிரடி உத்தரவினை பிறப்பித்துள்ளது.












Click it and Unblock the Notifications