ஓடி ஓடி "உழைத்த" மா சுப்பிரமணியன்.. கொரோனா நிதிக்கு ரூ 56 லட்சம் அர்ப்பணிப்பு
சென்னை: சென்னை மேயர், எம்எல்ஏ, சுகாதாரத் துறை அமைச்சர் என எந்த பொறுப்பை கொடுத்தாலும் சும்மா பட்டையை கிளப்பும் மா சுப்பிரமணியன் மாரத்தான் போட்டிகள் மூலம் 56 லட்சம் ரூபாயை திரட்டி அதை கொரோனா நிவாரண நிதியாக வழங்குகிறார்.
மா சுப்பிரமணியன் கருணாநிதி, ஸ்டாலின் ஆகியோருக்கு விசுவாசமானவர். மிகவும் நெருக்கமானவர். வழக்கறிஞரான இவர் எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் அதை விரல் நுனியில் வைத்திருப்பவர்.
முதல்வர் ஸ்டாலின் முதல்வராக பதவியேற்பதற்கு முன்னர் கொரோனா இரண்டாவது அலை உச்சத்தில் இருந்தது. அப்போது கொரோனா நிலவரத்தை அறிய முதலில் ஸ்டாலின் அழைத்தது மா சுப்பிரமணியனைத்தான். அவர் கொடுத்த புள்ளி விவரங்கள், டேட்டாக்களை கொண்டு வந்தார்.

உடல்நலன்
பொதுவாகவே இவர் ஆரோக்கியம், உடல்நலனில் மிகவும் அக்கறை கொண்டவர். இந்த வயதிலும் மிகவும் துடிப்பான இளைஞர் போல் செயல்படுபவர். இதற்கெல்லாம் காரணம் அவரது உடற்பயிற்சி, ஓட்ட பயிற்சி, யோகா, தியானம் உள்ளிட்டவைதான். தற்போது சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த போதிலும் அவர் அவ்வப்போது மாரத்தான் போட்டிகளில் ஓட மலை பகுதிகளில் பயிற்சி எடுத்துக் கொள்கிறார்.

டெல்லி சென்றிருந்த மா.சு
13 கோரிக்கைகள் அடங்கிய கோப்புகளுடன் டெல்லி சென்றிருந்த போது கூட நாடாளுமன்றம் அருகே ஓட்டப்பயிற்சியை மேற்கொண்டவர். அந்த அளவுக்கு எந்த இடம் சென்றாலும் அவர் தனது வழக்கமான உடற்பயிற்சி உள்ளிட்டவற்றை செய்து முடிப்பவர். சுகாதாரத் துறைக்கு பொருத்தமானவரான இவர் கொரோனா இரண்டாவது அலையையும் திறம்பட குறைத்துவிட்டார்.

உலக அளவிலான போட்டி
இந்த நிலையில் அவர் மாரத்தான் போட்டிகளில் கலந்து கொண்டு உலக அளவில் பல்வேறு நாடுகளின் கவனத்தை ஈர்த்தவரான இவர் விளையாட்டு, உடல் பிட்னஸ் ஆகியவற்றின் மீது தீராத காதல் கொண்டவர். பல மாரத்தான் போட்டிகளில் கலந்துகொண்டு விருதுகள் பெற்றவர். இரண்டாம் ஆண்டு கலைஞர் நினைவு பன்னாட்டு மெய்நிகர் மாரத்தான் -2021 நடத்தியிருந்தார்.
Recommended Video

19596 பேர்
இதில் 37 நாடுகளை சேர்ந்த 19,596 நபர்கள் கலந்து கொண்டனர். உலக சாதனையாக இது பார்க்கப்பட்டது. இந்த நிலையில், இந்தப் போட்டியில் கலந்து கொள்வதற்காக ஒவ்வொருவரும் கட்டணம் செலுத்த வேண்டும். அப்படி செலுத்தப்பட்ட கட்டணத்தின் மொத்த தொகை 56,02,693 ரூபாய். இந்த தொகையை தமிழக அரசின் கொரோனா நிதிக்காக இன்று வழங்க உள்ளார் மா.சுப்பிரமணியன். இதற்கான விழா, இன்று அறிவாலயத்தில் நடக்கிறது. சிறப்பு விருந்தினராக ஸ்டாலின் கலந்து கொள்ளவிருக்கிறார். அப்போது அந்த தொகை அவரிடம் கொடுக்கப்படவிருக்கிறது.

3ஆவது அலை
ஒரே கல்லில் இரண்டு மாங்காயை மா சுப்பிரமணியன் அடித்து வருகிறார். மாரத்தானில் கலந்து கொண்டவர்களுக்கு உடல் பிட்னஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியதோடு கொரோனாவின் 3ஆவது அலையின் தொடக்கத்தில் உள்ள தமிழகத்திற்கு நிவாரண நிதியையும் வசூல் செய்து கொடுத்துவிட்டார். இவரை அனைத்து தரப்பினரும் பாராட்டி வருகிறார்கள். குறிப்பாக இளைஞர்களுக்கு முன்மாதிரியாக திகழ்கிறார்.












Click it and Unblock the Notifications