ஏப்பமிடப்பட்ட ரூ.800 கோடி.. சென்னை ஹிஜாயு நிறுவன நிர்வாகி திடீர் தற்கொலை.. குவிந்த மக்கள்-பரபரப்பு
சென்னையில் அதிக வட்டி தருவதாக கூறி ஹிஜாயு அசோசியேட்ஸ் எனும் நிறுவனம் செயல்பட்டு வந்தது.
சென்னை: சென்னை கீழ்பாக்கத்தில் ஹிஜாவு அசோசியேட்ஸ் நிறுவனம் அதிக வட்டி தருவதாக கூறி பல ஆயிரம் பேரிடம் ரூ.800 கோடி மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று அந்த நிறுவனத்தின் இயக்குனர் சவுந்திரராஜன் நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையில் ஏற்கனவே கைதாகி ஜாமீனில் வெளியே வந்த நிறுவனத்தின் நிர்வாகி நேரு இன்று தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
சமீபத்தில் சென்னையை உலுக்கிய ஒரு மோசடி என்றால் அது ஹிஜாவு அசோசியேட்ஸ் மோசடி தான். சென்னை கீழ்ப்பாக்கத்தில் ஹிஜாவு அசோசியேட்ஸ் நிறுவனம் செயல்பட்டு வந்தது.
இந்த நிறுவனம் இந்தியா உள்பட வெளிநாடுகளில் பல்வேறு தொழில்களை செய்து வருவதாக கூறி மக்களை அணுகியது. மேலும் எங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்தால் 15 சதவீத வட்டி வழங்கப்படும். மாதந்தோறும் வட்டிப்பணம் வங்கி கணக்குகளில் செலுத்தப்படும் என அறிவித்தது.

லட்சம் லட்சமாக முதலீடு
இதனை நம்பிய ஏராளமானவர்கள் அந்த நிறுவனத்தில் முதலீடு செய்தனர். அதாவது லட்சம் லட்சமாக பல ஆயிரம் மக்கள் அந்த நிறுவனத்தில் முதலீடு செய்ததாக கூறப்படுகிறது. இதன்மூலம் ஹிஜாவு அசோசியேட்ஸ் நிறுவனத்துக்கு பல கோடி குவிந்தது. இருப்பினும் அந்த நிறுவனம் கூறியபடி மக்களுக்கு வட்டி பணம் கொடுக்கவில்லை. மேலும் முதலீடு செய்த பணத்தையும் மக்களிடம் திரும்ப வழங்கவில்லை.

ரூ.800 கோடி மோசடி
இதனால் ஏராளமானவர்கள் ஹிஜாவு அசோசியேட்ஸ் நிறுவனத்துக்கு எதிராக சென்னையில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார்கள் செய்தனர். இந்த புகார்களின் அடிப்படையில் போலீசார் விசாரணையை தொடங்கினர். அப்போது சுமார் ரூ.800 கோடி பொதுமக்களிடம் அந்த நிறுவனம் மோசடி செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக நிதி நிறுவனத்தின் இயக்குனரான சவுந்திரராஜன் உள்ளிட்ட 21 பேர் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.

முக்கிய நபர் சரண்
இதில் பெண் நிர்வாகிகள் உட்பட பலர் சமீபத்தில் கைது செய்யப்பட்டனர். மேலும் சவுந்திரராஜன் உள்பட சிலர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டனர். அதோடு நிறுவனம் தொடர்புடைய நிர்வாகிகளிடம் வீடுகளில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அதிரடியாக சோதனைகள் நடத்தினர். இந்நிலையில் தான் தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்ட சவுந்திரராஜன் நேற்று சென்னை நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

நிர்வாகி தற்கொலை
இந்நிலையில் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முக்கிய நபரான நேரு (வயது 49) சென்னை பெரம்பூரில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி அறிந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவர் சமீபத்தில் கைது செய்யப்பட்ட நிலையில் சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்தார். இந்நிலையில் தான் தற்போது அவர் தற்கொலை செய்துள்ளார். இருப்பினும் தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது பற்றி போலீசார் இன்னும் கூறவில்லை. இதுபற்றி போலீசார் விசாரணையை துவங்கி உள்ளனர். இதற்கிடையே அவரது வீட்டு அருகே ஏராளமானவர்கள் குவிந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications