ரூ.1000 வராதா? திடீர்னு ஏறிய வழிகாட்டி மதிப்பு.. கையில் லிஸ்ட்டுடன் வந்த ஹென்றி.. தமிழக அரசு முடிவு?
சென்னை: வழிகாட்டி மதிப்பை உடனடியாக குறைக்க வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு, ரியல் எஸ்டேட் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பத்திரப்பதிவு கட்டணம் குறைப்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டு, அது நடைமுறைக்கும் தற்போது வந்துவிட்டது. ஆனால், வழிகாட்டி மதிப்பு 33 சதவீதம் உயர்த்தப்படும் என்கிற அறிவிப்புக்கு மாறாக, பல இடங்களில் 50 சதவீதம் வரை வழிகாட்டி மதிப்பு உயர்த்தப்பட்டிருப்பதாகவும், வீடு வாங்க திட்டமிட்டிருக்கும் மக்களுக்கு இது அதிர்ச்சியை தந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

காரணம், ஒரு புதிய நடைமுறையை அமல்படுத்தும்போது, அதற்கு காலஅவகாசம் தரப்பட வேண்டும். ஆனால், உடனுக்குடன் அடுத்தடுத்த நடைமுறை கொண்டுவரப்படுகிறது. இந்த கட்டண உயர்வினால், பதிவுத்துறைக்கு வருவாய் இழப்பும் ஏற்படுவதுடன், கட்டுமான நிறுவனங்களும் பாதிக்கப்படும் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
ரியல் எஸ்டேட்: சென்னையில் வீடுகள் விற்பனை, 30 சதவீதம் இப்போதே குறைந்துவிட்டதாக ரியல் எஸ்டேட் தரப்பில் சொல்லப்பட்டு வருகிறது.. அரசிற்கு வருவாய் தேவை அவசியம் தான் என்றாலும், நடுத்தர வர்க்கத்தினர் வீடு வாங்கும் தேவையையும், அரசு பூர்த்தி செய்ய வேண்டும்..
எனவே, வீடு வாங்குபவர்களின் சுமையை குறைக்க, கடந்த சில மாதங்களில் பத்திரப்பதிவு துறையில் செய்யப்பட்ட அனைத்து மாற்றங்களையும், அரசு திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கையும் வலுவாகி வருகிறது.
இப்படிப்பட்ட சூழலில், அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு தலைவர் ஹென்றி, பொதுச்செயலாளர் நந்து உள்ளிட்ட நிர்வாகிகள் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்கள்,. அப்போது அவர்கள் சொன்னதாவது:
வருவாய்: "இப்போது பதிவுத்துறை, தான்தோன்றித்தனமாக செயல்படுகிறது. ஊழல் நிறைந்த அதிகாரிகள்தான் அங்கு இருக்கிறார்கள்.. அரசுக்கு பெரிய அளவில் வருவாய் கொடுத்துவிட்டு, கட்டுமானம் உள்ளிட்ட ரியல் எஸ்டேட் தொழிலை முன்னெடுக்கும் எங்களை, சாதாரண பதிவாளர்கள் ஏளனமாக நடத்துகிறார்கள். பதிவுத்துறை, மக்கள் நலனில் துளியும் அக்கறை செலுத்துவதில்லை. மாறாக, நிலங்கள் மீதான அரசு வழிகாட்டி மதிப்பை தன் இஷ்டம் போல உயர்த்தி வருகிறது.
கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல், இன்றுவரை பலமடங்கு வழிகாட்டி மதிப்பை, சந்தை மதிப்பைவிட, கூடுதலாக உயர்த்தியிருக்கிறது. இதன்மூலம், வீடு வாங்க வேண்டும் என்று நினைப்பவர்களின் கனவை கலைத்து விட்டார்கள். சார் பதிவாளர்கள் பதிவு செய்ய வரும் பொதுமக்களிடம் பதிவுக்கு செய்யும் ஆவணத்தில், ஏதாவது குறைகளை கண்டுபிடித்து சாக்கு சொல்லி பணம் பறிக்கும் நோக்கத்தில் செயல்படுகிறார்கள்.
வீட்டு மனை: புதிய வீட்டுமனை பிரிவுக்கு வழிகாட்டி மதிப்பு நிர்ணயிக்க சார்பதிவாளர் அலுவகத்தில் ஆவணத்தை தாக்கல் செய்தால், அதுகுறித்து அவர் மாவட்ட பதிவாளருக்கு பரிந்துரை செய்வதற்கு பெருமளவில் பணம் கேட்கிறார். சார்பதிவாளரும், மாவட்ட பதிவாளரும் கேட்கும் பணத்தை கொடுக்காவிட்டால், ரூ.500 வழிகாட்டி மதிப்பு நிர்ணயம் செய்க்னறனர். இதுகுறித்து கேட்டால், மேலிட உத்தரவு என்கிறார்கள்.
மகளிர் உரிமைத்தொகை கொடுப்பதற்கு பணம் தேவைப்படுகிறது. நேரிடையாக அரசுக்கு பதிவுத்துறை மூலம் வருவாய் வருவதால், இதை பெரியளவில் உயர்த்த சொல்லியிருக்கிறார்கள் என்று கூறுகிறார்கள். அதனால், முதல்வர் ஸ்டாலின் இந்த பிரச்சனையில் தலையிட்டு உரிய தீர்வு காண வேண்டும். உயர்த்திய வழிகாட்டி மதிப்பை குறைக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.
கோரிக்கை: ரியல் எஸ்டேட் துறையின் அடிப்படை ஆதாரமாக விளங்கும் பொது அதிகார ஆவணத்திற்கு பதிவு கட்டணம் குறைந்தபட்சம் ஒரு சதவிகிதம் எனவும், அதிகபட்சமாக ரூபாய் 50 ஆயிரம் எனவும் அறிவித்து உடனடியாக குறைத்து நடைமுறைப்படுத்திட வேண்டும் என்று பெயிரா தலைவர் ஹென்றி, கடந்த சில நாட்களுக்கு முன்புகூட, ஒரு கோரிக்கையை விடுத்திருந்த நிலையில், தற்போது வழிகாட்டி மதிப்பை குறைக்க வலியுறுத்தியிருப்பதும், முக்கிய கவனம் பெற்று வருகிறது.
அதுமட்டுமல்ல, சில நாட்களுக்கு முன்பு, மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் தமிழ்நாடு மாநில தலைவர் தன்ராஜ் செய்தியாளர்களிடம் இதே உரிமைத்தொகை விவகாரம் குறித்து பேசியிருந்தார்.
உரிமைத்தொகை: "தமிழகத்தில் பெண்களுக்கு மாதந்தோறும் அரசின் சார்பில், 1,000 ரூபாய் வழங்க வேண்டும் என்பதற்காக, வாகனங்களுக்கான வரி உயர்வு, ஆன்லைன் வழக்குப்பதிவு போன்றவை மேற்கொள்ளப்படுகின்றன.. இந்த தொகை எங்கள் வீட்டு பெண்களுக்கு கிடைப்பது இல்லை. யாரையோ திருப்திப்படுத்த வேண்டும் என்பதற்காக, லாரி உரிமையாளர்களின் வாழ்வாதாரமே பாதிக்கப்படுகிறது" என்று குற்றஞ்சாட்டியிருந்தது நினைவுகூரத்தக்கது.












Click it and Unblock the Notifications