தேவையில்லாமல் வரும் பிரச்சினை.. தள்ளிப் போகும் ஊரக உள்ளாட்சி தேர்தல்? மு.க.ஸ்டாலின் போடும் கணக்கு?
சென்னை: தமிழகத்தில் 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தல் நடத்தப்பட வேண்டிய சூழலில், அந்த தேர்தல் தற்போது தள்ளிப் போக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் 2026 சட்டமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு தேர்தலை தள்ளி வைக்கும் முடிவில் திமுக தலைமை இருப்பதாகவும் கூறப்படுகிறது.
தமிழகத்தில் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் தவிர்த்து, உள்ளாட்சி அமைப்பு செயல்பட்டு வருகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை ஊரகம், நகர்ப்புறம் என இரண்டு வகையான உள்ளாட்சி அமைப்புகள் இருக்கிறது.

மாநகராட்சி மேயர், துணை மேயர், வார்டு கவுன்சிலர்கள், நகராட்சி தலைவர், நகராட்சி துணைத் தலைவர், கவுன்சிலர்கள் என நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படுகிறது. இவை தவிர்த்து ஒன்றியம், பேரூராட்சி, ஊராட்சிகளுக்கு உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படுகிறது.
ஊராட்சி ஒன்றிய தலைவர், துணைத் தலைவர், மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சித் தலைவர், வார்டு கவுன்சிலர்களை தேர்ந்தெடுக்க ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த 2019 ஆம் ஆண்டில் 27 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. வார்டு வரையறை பிரச்சினை, எல்லை தீர்மானம் உள்ளிட்ட காரணமாக ஒன்பது மாவட்டங்களில் தாமதமாக அதாவது 21 மாதங்கள் கழித்து தேர்தல் நடத்தப்பட்டது.
27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் 2019 ஆம் ஆண்டில் நடைபெற்ற நிலையில், மற்ற ஒன்பது மாவட்டங்களுக்கு 2021ஆம் ஆண்டு நடைபெற்றது. இந்த நிலையில் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்று பதவி ஏற்ற தலைவர், வார்டு கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர் உள்ளிட்டவர்களின் பதவிக்காலம் வரும் ஜனவரி 5ஆம் தேதி உடன் நிறைவடைகிறது. இதன் காரணமாக அதற்கு முன்னதாகவே தேர்தலை நடத்தி முடிக்க வேண்டிய கட்டாயம் தேர்தல் ஆணையத்திற்கு ஏற்பட்டிருக்கிறது.
ஆனால் ஊரக உள்ளாட்சி தேர்தல் பணிகளை தொடங்குவதில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதாகவும் தேர்தல் நடைபெறுவதே தள்ளிப் போகலாம் என அதிகாரிகள் மட்டத்தில் பேசப்படுகிறது. அதாவது தற்போது சில மாவட்டங்களில் கிராமங்களை நகராட்சி மற்றும் மாநகராட்சிகளுடன் இணைப்பதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் அதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். உதாரணத்திற்கு திண்டுக்கல் மாநகராட்சியில் 5 ஊராட்சிகளை இணைப்பதற்காக பல நாட்களாகவே திட்டம் தீட்டப்பட்டு வருகிறது. ஆனால் கிராம மக்கள் இதனை மிகக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
காரணம் கிராமங்களாக இருக்கும்போது 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் கிடைக்கும், குடிநீர் இணைப்பு இலவசமாக கிடைக்கும், அதே நேரத்தில் நகராட்சி அல்லது மாநகராட்சியாக ஊரகப்பகுதிகள் இணைக்கப்பட்டால் குடிநீர் இணைப்புக்கு அதிக பணம் கட்ட வேண்டி வரும். மாதந்தோறும் செலுத்தும் வரியும் அதிகமாக இருக்கும். வீட்டு வரி உள்ளிட்டவைகளை அதிகமாக செலுத்த வேண்டி வரும். இதேபோல 100 நாள் வேலை வாய்ப்பு திட்டமும் பறிக்கப்படும் என்பதால் பல கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதனால் மாநகராட்சிகளை விரிவாக்கம் செய்வதில் சிக்கல் இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் 2019 ஆம் ஆண்டில் 27 மாவட்டங்களுக்கு தேர்தல் நடைபெற்ற நாளையில் மற்ற ஒன்பது மாவட்டங்களுக்கு 21 மாதங்கள் கழித்து தேர்தல் நடைபெற்றது. இதனால் அந்த ஒன்பது மாவட்டங்களில் உள்ளாட்சி பதவி வகிக்கும் நபர்களுக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் பதவிக்காலம் இருக்கிறது. இதனால் 27 மாவட்டங்களில் தாமதமாகவோ அல்லது ஒன்பது மாவட்டங்களில் முன்னதாகவோ தேர்தலை நடத்த வேண்டி வரும். இது போன்ற நடைமுறை சிக்கல்கள் இருக்கிறது.
அதுமட்டுமல்லாமல் தேர்தலை நடத்துவதில் அரசியல் ரீதியாகவும் சில சிக்கல் இருப்பதாக திமுக தலைமை கருதுகிறது. உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் போது கூட்டணி கட்சியினருக்கு ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர், ஒன்றிய தலைவர், ஒன்றிய துணைத் தலைவர், உள்ளிட்ட பதவிகளை தர வேண்டி இருக்கும். கடந்த ஆண்டுகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற போது திமுக கூட்டணி கட்சியில் உள்ள விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தங்களது கடும் எதிர்ப்பினை தெரிவித்து இருந்தன.
இந்த நிலையில் 2026 சட்டமன்றத் தேர்தல் பணிகளை தொடங்க இன்னும் ஒரு ஆண்டு காலமே இருக்கும் நிலையில் உள்ளாட்சித் தேர்தலால் தேவையில்லாமல் சட்டமன்ற தேர்தலில் கூட்டணி கட்சிகள் இடையே மனக்கசப்பு ஏற்படும். இதனால் உள்ளாட்சித் தேர்தலை ஒட்டுமொத்தமாக 2026 இல் நடத்தலாம் என கூறப்படுகிறது.
ஏற்கனவே உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாமல் இருந்தபோது சட்டமன்றத்தில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு தனி அதிகாரிகளை நியமித்து உள்ளாட்சிப் பணிகள் கவனிக்கப்பட்டது. ஊராட்சிகளை ஊராட்சி செயலர்களும், ஊராட்சி ஒன்றியங்களை வட்டார வளர்ச்சி அலுவலர்களும் கவனித்து கொண்டனர். இதன் காரணமாக தற்போதும் அதே பாணியை பின்பற்ற அரசு திட்டம் இருப்பதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications