செஞ்சது எல்லாம் டிரம்ப்தான்.. இந்தியாவின் முதுகில் இப்போ ரஷ்யாவும் குத்திடுச்சு.. அதிரவிட்ட புடின்
நியூயார்க்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஆகியோர் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடந்த கடந்த மாத மோதல் குறித்து போனில் விவாதித்தனர். இந்த மோதல், அதிபர் டிரம்பின் தனிப்பட்ட ஈடுபாட்டின் மூலம் நிறுத்தப்பட்டது என்று புடினின் முக்கிய உதவியாளர் ஒருவர் தெரிவித்தார். அதாவது நான்தான் போரை நிறுத்தினேன் என்று டிரம்ப் தம்பட்டம் அடித்ததை புடின் தரப்பும் இப்போது ஒப்புக்கொண்டு உள்ளது.
இந்தியா-பாகிஸ்தான் மோதலில் டிரம்ப் தலையீடு
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான ராணுவ மோதலை நிறுத்துவதில் அமெரிக்க அதிபரின் ஈடுபாடு குறித்து ரஷ்யா பேசுவது இதுவே முதல் முறை ஆகும்.
ரஷ்ய அதிபரின் உதவியாளர் யூரி உஷாகோவ் கூறுகையில், எங்கள் ஆலோசனையில் மத்திய கிழக்கு விவகாரம் மற்றும் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடந்த ஆயுத மோதல் குறித்தும் விவாதிக்கப்பட்டது. இந்தியா பாகிஸ்தான் மோதல் அதிபர் டிரம்ப் அவர்களின் தனிப்பட்ட ஈடுபாட்டின் மூலம் நிறுத்தப்பட்டது என்றார்.

சுமார் 70 நிமிடங்கள் நீடித்த புடின் மற்றும் டிரம்ப் ஆகியோரின் தொலைபேசி உரையாடலுக்குப் பிறகு இந்தத் தகவல் வெளியாகி உள்ளது.
மே 10 அன்று போர் நிறுத்தம் மற்றும் ராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவதற்கான முடிவு தனிப்பட்ட வகையில் எடுக்கப்பட்டது . இந்திய மற்றும் பாகிஸ்தான் ராணுவ நடவடிக்கைகளின் இயக்குநர்கள் ஜெனரல்களுக்கு இடையே மட்டுமே இந்த முடிவு எடுக்கப்பட்டது என்று இந்தியா எப்போதும் கூறி வருகிறது. பாகிஸ்தானின் டிஜிஎம்ஓ இந்திய டிஜிஎம்ஓவுக்கு அழைப்பு விடுத்த பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டது. டிரம்ப் இந்தியா-பாகிஸ்தான் மோதலில் எந்த முடிவையும் எடுக்கவில்லை என்று இந்தியா கூறி வருகிறது.
விடாத டிரம்ப்
இதற்கிடையில், அதிபர் டிரம்ப் பலமுறை இரு நாடுகளுக்கும் இடையே போர் நிறுத்தத்தை தான் ஏற்படுத்தியதாகக் கூறியுள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசுகையில், இந்தியா - பாக். போர் நிறுத்தத்தை ஏற்படுத்த வர்த்தகத்தை பெருமளவில் பயன்படுத்தினேன். என் தலையீட்டால்தான் தாக்குதல் நிறுத்தப்பட்டது. ஒப்பந்தம் செய்வோம், வர்த்தகம் செய்வோம் என அழைத்தேன் உடனே தாக்குதலை நிறுத்திவிட்டார்கள் என்று கூறி உள்ளார்.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேச்சு இந்தியா - பாக். தாக்குதல் நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தையில் வர்த்தகம் பற்றி பேசப்படவில்லை என இந்திய வெளியுறவுத் துறை விளக்கமளித்த பிறகும், வர்த்தகத்தை முன்னிறுத்தி போரை நிறுத்தியதாக சவுதி முதலீட்டாளர் மாநாட்டில் மீண்டும் அதிபர் ட்ரம்ப் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டிரம்ப் வீண் பேச்சு
முன்னதாக டிரம்ப் இதே விவகாரம் தொடர்பாக பேசுகையில், இரண்டு நாடுகளுமே நிறைய அணு ஆயுதங்களை கொண்டுள்ளன. ஆனால் அணு ஆயுதப் போர் நிறுத்தியது நான் தான் என்பதை உங்களுக்குச் சொல்லிக் கொள்வதில் பெருமைப்படுகிறேன். அவர்கள் நிலைமையின் தீவிரத்தை புரிந்து கொள்ளும் வலிமை, ஞானம், உறுதி தங்களுக்கு இருக்கிறது என்ற நிலைபாட்டில் இருந்தார்கள். ஆனால் நாங்கள் நிறைய உதவினோம். வர்த்தகத்தில் உதவினோம்.
சண்டையை நிறுத்தினால் உங்களுடன் நிறைய வர்த்தகம் செய்யப் போகிறோம் என்று இந்தியாவிடமும் பாகிஸ்தானிடமும் சொன்னேன். போரை நிறுத்தாவிட்டால் நாங்கள் எந்த வர்த்தகத்தையும் செய்யப் போவதில்லை என்று சொன்னேன். உடனடியாக நாங்கள் போரை நிறுத்துவோம் என்று சொன்னார்கள். அதை அவர்கள் செய்துவிட்டார்கள், என்று கூறி இருந்தார்.
இப்படிப்பட்ட நிலையில்தான் இந்த மோதல், அதிபர் டிரம்பின் தனிப்பட்ட ஈடுபாட்டின் மூலம் நிறுத்தப்பட்டது என்று புடினின் முக்கிய உதவியாளர் ஒருவர் தெரிவித்தார். அதாவது நான்தான் போரை நிறுத்தினேன் என்று டிரம்ப் மேடைக்கு மேடை பேசியதை புடின் தரப்பும் இப்போது ஒப்புக்கொண்டு உள்ளது.












Click it and Unblock the Notifications