ஆரூத்ரா மோசடி.. ஜாமீனில் வந்து “எஸ்கேப்” ஆன ரூசோ கைது.. மேலும் 2 பேரும் சிக்கினர்.. பரபர!
சென்னை: ஆருத்ரா மோசடி விவகாரத்தில் தலைமறைவாக இருந்த அந்த நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவரான ரூசோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னையை தலைமையிடமாக கொண்டு ஆருத்ரா கோல்டு டிரேடிங் நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தில் முதலீடு செய்பவர்களுக்கு மாதம் 25 சதவிகிதம் முதல் 30 சதவிகிதம் வரை வட்டி தருவதாக விளம்பரம் செய்யப்பட்டது. இதன் மூலம் ஆருத்ரா கோல்டு டிரேடிங் நிறுவனம் பொதுமக்களிடம் இருந்து ரூ 2,438 கோடி ரூபாய் முதலீட்டை பெற்றது.

ஆனால், ஆருத்ரா நிறுவனம் சொன்னது போல் பணத்தை தரவில்லை. முதலீடு செய்தவர்கள் கொடுத்த புகாரின் பேரில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக அந்த நிறுவனத்தில் இயக்குநர்களில் ஒருவரான ரூசோ உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர்.
ஆருத்ரா நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவராக செயல்பட்ட ஹரீஷ் என்பவர் பாஜகவின் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவில் மாநிலச் செயலாளராக இருந்தார். மாநில பொறுப்பு வாங்க ஆரூத்ரா கோல்டு நிறுவனத்தில் பொதுமக்களிடம் இருந்து பெற்ற பணத்தை பாஜக நிர்வாகிகளுக்கு ஹரீஷ் கொடுத்ததாக புகார் எழுந்தது. மேலும், ஆருத்ரா மோசடியில் பாஜகவை சேர்ந்த நடிகர் ஆர்.கே.சுரேஷ் தொடர்பு கொண்டிருப்பதும் தெரியவந்தது.
ஆருத்ரா நிறுவனம் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குறிப்பாக 40 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, அதில் 22 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த மோசடி வழக்கில் முக்கிய குற்றவாளியான ஆருத்ரா நிறுவன இயக்குநர் ராஜசேகர் துபாயில் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் ரூசோவுக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவு அளித்திருந்தது. இதைத்தொடர்ந்து அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர், ரூசோ மோசடி செய்துள்ளார் அவரை ஜாமீனில் விடுவித்தது தவறு, அவர் ஜாமீனில் வெளியே இருப்பதால் சாட்சிகளை கலைத்துவிடுவார் என வாதிட்டார். வாதங்களை கேட்ட நீதிபதி, ரூசோவுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்து உத்தரவிட்டார்.
ஆனால், ஜாமீனில் வெளியே வந்த ரூசோ தலைமறைவாகிவிட்டார். அவரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்நிலையில், ஆருத்ரா கோல்ட் நிறுவன மோசடி வழக்கில் ஜாமினில் வெளிவந்த தலைமறைவான ரூசோ வை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்ட நிலையில், ஆருத்ரா நிதி நிறுவன இயக்குநர்களில் ஒருவரான ரூசோவை நீதிமன்ற உத்தரவுப்படி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். இவர் இப்போது கைது செய்யப்பட்டிருப்பதால் இந்த நிதி மோசடி புகாரில் தொடர்புடைய இன்னும் பலர் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும், ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில் மேலும் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆவடியில் ஆருத்ரா நிதி நிறுவனத்தின் கிளை தொடங்கி 134 கோடி மோசடி செய்ததாக ஆருத்ரா கிளை நிறுவன உரிமையாளர் அருண்குமார் மற்றும் அவரது மனைவி ஜெனோவா ஆகிஉஓர் கைது செய்யப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications