நேத்து கூட பேசினீரே.. 57 வயதில் உலகை விட்டு போக என்ன அவசரம் மயில்சாமி.. எஸ்.வி.சேகர் உருக்கம்
நேற்று கூட இருவரும் பேசினோமே, என்ன அவசரம் மயில்சாமி என எஸ் வி சேகர் வீடியோ வெளியிட்டு இரங்கல்
சென்னை: நேற்று இரவு கூட என்னிடம் பேசினாயே! அப்படி என்ன அவசரம் என நடிகர் மயில்சாமியின் மறைவுக்கு நடிகரும் அரசியல்வாதியுமான எஸ் வி சேகர் வீடியோ வெளியிட்டு உருக்கமாக பேசியுள்ளார்.
நடிகர் மயில்சாமி சிவராத்திரியை முன்னிட்டு நேற்று இரவு முழுவதும் மேகநாதேஸ்வரர் கோயிலில் வழிபாடு நடத்தினார். அங்கு டிரம்ஸ் சிவமணியுடன் இசை கச்சேரி நடத்தினார்.
இதையடுத்து அதிகாலை நேரத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மயங்கி விழுந்த அவரை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

மருத்துவர்கள்
அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டார் என தெரிவித்தனர். அவரது இறப்பு குறித்து தகவலறிந்த போரூர் போலீஸார் பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது இறப்பு ஏற்பட்டது எதனால் என்பதை அறியமுடியும் என்றனர். ஆனால் இந்த நிலையில் மயில்சாமியின் உடலுக்கு பிரேத பரிசோதனை செய்யவில்லை.

மாரடைப்பு
அவருக்கு மாரடைப்பு உறுதியானதை மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர். அவர் ஏற்கெனவே இதயம் சம்பந்தமாக போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது மாரடைப்பு ஏற்பட்டு இறந்து போனது உறுதியானது. இறப்புக்கான காரணம் உறுதியானதால், அவரது உடலுக்கு பிரேதப் பரிசோதனை செய்யப்படவில்லை.

சாலிகிராமம்
இதையடுத்து அவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். ரமேஷ் கண்ணா, மனோ பாலா, டிரம்ஸ் சிவமணி, நாசர், கார்த்தி, ராதாரவி, ஜெயராம், போண்டாமணி, தாமு, என்.எஸ்.பாஸ்கர், கோவை சரளா, மன்சூர் அலிகான், கிங்ஸ்லி, அப்புக்குட்டி, முதல்வர் ஸ்டாலினின் சகோதரி செல்வி, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

இறுதி சடங்குகள்
அவரது உடலுக்கு நாளை இறுதி சடங்குகள் நடைபெறுகிறது. வடபழனியில் ஏவிஎம் மயானத்தில் அவருக்கு இறுதி சடங்கு நடைபெறுகிறது. இந்த நிலையில் மயில்சாமியின் நீண்ட கால நண்பர் எஸ்.வி.சேகர் தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ள வீடியோவில் உருக்கமாக பேசியுள்ளார். அவர் கூறியிருப்பதாவது: காலையில் எழுந்ததும் இப்படி அதிர்ச்சியான செய்தியை கொடுத்துவிட்டாய் மயில்சாமி நேற்று இரவு கூட மயில்சாமி என்னிடம் பேசினியே. ஏதோ கோயிலில் இருந்து பேசுவதாக கூறினாய். என்ன இவ்வளவு அவசரமா இந்த உலகத்தை விட்டு போகணும்னு முடிவு செய்திட்டே. இப்போ அவருக்கு 57 வயசுதான் ஆகுது. 70 முதல் 80 வயது வரை இருந்திருக்கலாம். எல்லாமே நம் கையில் இல்லை. சிவ பக்தரான நீ , மூன்று கால பூஜையை பார்த்துவிட்டு இறந்துவிட்டாய். உனக்கு சொர்க்கம் நிச்சயம். ஆனால் வீட்டில் இருப்போரின் நிலைமையை நினைத்து பார்த்தியா? அவரது இறப்பு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். நகைச்சுவை இருக்கும் வரை சினிமா இருக்கும் வரை மயில்சாமி வாழ்ந்து கொண்டுதான் இருப்பார் என அந்த வீடியோவில் உருக்கமாக கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications