கோர்ட்டில் கேஸ் இருந்தாலும் சொத்து விற்பனையை பதிவு செய்யலாம்! பத்திரப்பதிவு துறையால் அதிர்ச்சி
சென்னை: நீதிமன்றங்களில் வழக்கு நிலுவையில் இருந்தாலும் சொத்து விற்பனையை பதிவு செய்யலாம் என பத்திரப்பதிவுத் துறை உத்தரவிட்டுள்ளது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சொத்து தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் இருந்தால் அதை விற்பதற்கு என வரும் பத்திரங்களை சார் பதிவாளர்கள் பதிவு செய்ய மறுத்து திருப்பி அனுப்புவது வழக்கம். இதில் நீதிமன்றம் எந்த வித உத்தரவையும் பிறப்பிக்காத நிலையில் சொத்து விற்பனையை நிறுத்தவே கூடாது என சில வழக்குகளில் தீர்ப்புகள் வந்துள்ளன.

எனவே தடை ஆணை இல்லாத நிலையில் வழக்கு நிலுவையில் இருந்தாலும் சொத்து விற்பனையை பதிவு செய்யலாம் என பதிவுத் துறை உத்தரவிட்டுள்ளது. பத்திரங்களை திருப்பி அனுப்புவதால் ஏற்படும் வருமான இழப்பை தடுக்கும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
எனினும் பதிவுத் துறையின் இந்த உத்தரவு சொத்து வாங்குவோர் , அதற்கு கடன் கொடுக்கும் வங்கிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சொத்து வாங்கும் மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்ற நோக்கத்தில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் பொதுமக்களுக்கு இந்த உத்தரவால் நிச்சயம் பாதிப்பு ஏற்படும்.
தற்போதைக்கு ஒரு குறிப்பிட்ட சொத்தின் மீது ஸ்டே உத்தரவு பிறப்பிக்காவிட்டாலும் வருங்காலத்தில் பிறப்பிக்க வாய்ப்புள்ளன. அப்படியிருக்கும் போது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சொத்துகளை விற்பனை செய்யும் போது அதை வாங்குவோருக்கு அந்த சொத்து பிரச்சினையை கொடுக்கும். அவருக்கே ஏதாவது ஒரு கஷ்டம் வந்துவிட்டால் விற்க முடியாமல் போகும்.
இன்னொரு விஷயம், உரிமையாளருக்கு தெரியாமல் போலி ஆவணங்கள் வாயிலாக அபகரித்த சொத்தை ஒருவர் வேறு நபருக்கு விற்கும் நிலையில் உரிமையாளர் வழக்கு தொடர்ந்தால் அந்த வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்படாத நிலையில் மோசடி செய்தவர் அந்த சொத்தை எளிதாக வேறு ஒரு ஏமாளியின் தலையில் கட்டி விட முடியும்.
வீட்டுக் கடன் கொடுத்த வங்கிகளுக்கும் இது ஒரு பிரச்சினையாகும். எனவே இந்த உத்தரவை பத்திரப்பதிவு சட்ட வல்லுனர்களை கொண்டு ஆலோசனை செய்ய வேண்டும் என்பதே ரியல் எஸ்டேட் நிபுணர்களின் கருத்தாகும். வீடு விற்பனைக்கான பத்திரப்பதிவின்போது கடைப்பிடிக்க வேண்டிய கட்டடங்களுக்கான, புதிய வழிகாட்டி மதிப்புகள் அமலுக்கு வந்துள்ளன.
பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில், அடுக்குமாடி குடியிருப்புகளில், தரைதளத்தில், 10.7 சதுர அடிக்கு, 11,515 ரூபாய்; முதல் தளம், 10,535 ரூபாய், இரண்டாம் தளம், 10,695 ரூபாய், 3வது தளம், 10,870 ரூபாய் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில், 10.7 சதுர அடிக்கு தரை தளத்தில், 12,667 ரூபாய்; முதல் தளம், 11,589 ரூபாய்; இரண்டாம் தளம், 11,765 ரூபாய்; 3வது தளம், 11,957 ரூபாய் என, நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications