நகரங்களிலும் நாளை முதல் சலூன்களை திறக்கலாம்.. சென்னையில் தடை தொடரும்- அரசு அனுமதி
நகரங்களிலும் நாளை முதல் சலூன்களை திறக்கலாம்.. சென்னையில் தடை தொடரும்- அரசு அனுமதி
சென்னை: நகரப் பகுதிகளிலும் நாளை முதல் சலூன் கடைகள், அழகு நிலையங்களைத் திறக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா ஊரடங்கு உத்தரவால் கடந்த 60 நாட்களுக்கும் மேலாக சலூன் கடைகள் உள்பட கடைகள் திறக்கப்படாமலேயே இருந்தன. 4ஆவது கட்டமாக இந்த மாதம் 31-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த காலகட்டத்தில் கடைகளைத் திறப்பது, தொழிற்சாலைகளை இயக்க அனுமதிப்பது, உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.

கடை திறப்பு
எனினும் சலூன் கடை மூலம் கொரோனா தொற்று வேகமாக பரவியதால் மற்ற கடைகளைத் திறக்க தளர்வு வழங்கப்பட்ட போதிலும் சலூன் கடைகள், பியூட்டி பார்லர், ஸ்பா உள்ளிட்ட கடைகளை திறக்க அரசு அனுமதி மறுத்தது. இந்த நிலையில் அவர்களது வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு முதலில் கிராமப்புறங்களில் உள்ள சலூன் கடைகளை திறக்க கடந்த இரு தினங்களுக்கு முன்னர் அரசு அனுமதி அளித்தது.

சலூன் கடைகள்
இந்த நிலையில் நாளை முதல் நகர்ப்புற பகுதிகளிலும் சலூன் கடைகளை திறக்கலாம் என அரசு அனுமதி அளித்துள்ளது. இதுகுறித்து அரசு வெளியிட்ட அறிக்கையில் சென்னை தவிர பிற மாவட்டங்களில் நகர் பகுதிகளிலும் நாளை முதல் சலூன் கடைகளை திறக்கலாம். சலூன் கடைகள், அழகு நிலையங்களை காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை திறக்கலாம்.

தொழிலாளர்கள்
குளிர்சாதன வசதியை சலூன்களும் அழகு நிலையங்களும் பயன்படுத்தக் கூடாது. சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். கிருமிநாசினி அவ்வப்போது தெளிக்க வேண்டும். தடை செய்யப்பட்ட பகுதிகளில் இருந்து வரும் தொழிலாளர்களை பணியமர்த்தக் கூடாது.

நிபந்தனைகள்
காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உள்ளே அனுமதிக்கக் கூடாது என்பன உள்ளிட்ட நிபந்தனைகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் சலூன் கடை உரிமையாளர்களும், அழகு நிலைய உரிமையாளர்களும் தமிழக அரசுக்கு நன்றி கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications