ஆம்ஸ்ட்ராங் கொலையில் “மாஸ்டர் மைண்ட்”.. வெளிநாட்டில் இருந்தே சம்போ செந்தில் போட்ட ‘ஸ்கெட்ச்’?!
சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை விவகாரத்தில் அடுத்தடுத்து பிரபல ரவுடிகளின் பெயர்கள் அடிபட்டு வருகின்றன. ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு சம்போ செந்தில் 'ஸ்கெட்ச்' போட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகப்படுவதால் அவரை பிடிக்க தேடுதல் வேட்டை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5 ஆம் தேதி சென்னை பெரம்பூரில் தனது வீட்டிற்கு அருகிலேயே வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக ஏற்கனவே 11 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களை கஸ்டடியில் எடுத்து காவல்துறையினர் விசாரித்து வந்த நிலையில் ரவுடி திருவேங்கடம் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

அடுத்தடுத்து சிக்கிய ரவுடிகள்: இந்நிலையில் வழக்கறிஞர்கள் மலர்க்கொடி சேகர், ஹரிஹரன் மற்றும் சதீஷ் ஆகியோர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டனர். மேலும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த ஆற்காடு சுரேஷின் மனைவியும் பாஜக முன்னாள் நிர்வாகியுமான அஞ்சலை நேற்று முன்தினம் ஓட்டேரியில் கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதைத் தொடர்ந்து அஞ்சலை, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில், கொலை சம்பவத்துக்கு பயன்படுத்திய 6 செல்போன்களை, வழக்கறிஞர் அருள், தான் கைதாவதற்கு முன்பு திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூரை சேர்ந்த ஹரிதரன் என்பவரிடம் கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து ஹரிதரனை போலீசார் திருவள்ளூரில் நேற்று கைது செய்தனர்.
வழக்கறிஞர்கள் லிங்க்: மேலும், அந்த செல்போன்கள் குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அனைத்து செல்போன்களையும் சேதப்படுத்தி, திருவள்ளூர் மாவட்டம் வெங்கத்தூர் கொசஸ்தலை ஆற்றில் ஹரிதரன் வீசியது தெரியவந்தது. இதையடுத்து, தீயணைப்புத்துறையினர், ஸ்கூபா டைவிங் நிபுணர்கள் உதவியுடன், கொசஸ்தலை ஆற்றில் இறங்கி செல்போன்கள் வீசப்பட்ட இடத்தில் போலீசார் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது, 4 செல்போன்களின் பல்வேறு பாகங்களை தீயணைப்புத் துறையினர் கைப்பற்றினர்.
அந்த செல்போன்கள் தடயவியல் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து, ஹரிதரனிடம் விசாரணை நடந்து வருகிறது. ஹரிதரன், திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் அதிமுக ஒன்றிய கவுன்சிலராக இருந்து வருகிறார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மாஸ்டர் மைண்ட் யார்?: ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக அடுத்தடுத்து ரவுடிகள் சிக்கி வரும் நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலையில் மாஸ்டர் பிரெய்ன் யார் என்பதை நோக்கி போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை விவகாரத்தில் ரவுடி சம்போ செந்தில் ஸ்கெட்ச் போட்டிருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. சம்போ செந்தில் என்ற செந்தில்குமாரை போலீசார் தேடி வருகின்றனர்.
இதுதொடர்பாக 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வெளி மாநிலங்களிலும் போலீசார் சம்போ செந்திலை தேடி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சம்போ செந்தில், வெளிநாட்டிற்கு தப்பி சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகித்துள்ளனர். அந்த கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
சம்போ செந்தில்: கடந்த 2020 ஆம் மார்ச் மாதம் காக்கா தோப்பு பாலாஜி மற்றும் ரவுடி சிடி மணி ஆகியோர் சென்ற கார் மீது வெடிகுண்டு வீசிய வழக்கில் சம்போ செந்திலுக்கு லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்ட ரவுடி சம்போ செந்தில் போலி பாஸ்போர்ட் மூலம் வெளிநாடு தப்பி சென்றார் என்றும் விசாரித்து வருகின்றனர்.
ரவுடி சம்போ செந்தில், பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்பு உள்ளவர். வழக்கறிஞரான செந்தில், ரௌடிகளுக்கு ஆதரவாக ஆஜராகி வாதிட்டு வந்தவர். ஒருகட்டத்தில் அவரே ரவுடியாக ஃபார்ம் ஆகி இருக்கிறார். கொலைக்கு ஸ்கெட்ச் போட்டுக் கொடுப்பதில் செந்தில் கில்லாடி எனக் கூறப்படுகிறது. அதன் காரணமாக சம்பவம் செந்தில் என்று அழைக்கப்பட்டு வந்தவர், பேச்சுவழக்கில் சம்போ செந்தில் என்று ரவுடிகள் மத்தியில் அழைக்கப்படுகிறாராம்.
சமீபத்திய போட்டோ கூட இல்லை: கொலை வழக்குகளில் தேடப்பட்டு வரும் குற்றவாளியான சம்போ செந்தில் கடந்த பல ஆண்டுகளாக போலீசாரின் கண்ணில் சிக்காமல் இருந்து வருகிறார். 6 ஆண்டுகளாக செந்திலை வலை போட்டு தேடி வருகிறது தமிழ்நாடு போலீஸ். சம்போ செந்திலின் சமீபத்திய புகைப்படம் கூட யாரிடமும் இல்லை எனக் கூறப்படுகிறது.
வெளிநாட்டில் இருந்தபடியே, தமிழகத்தில் சம்போ செந்தில் கொலை திட்டங்களை தீட்டுவதாகவும் கூறப்படுகிறது. சம்போ செந்தில் நேபாளம், இலங்கை, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளில் மாறி, மாறி வசித்து வருவதாக கூறப்படுகிறது. சென்னையில் பழைய பொருட்கள் வாங்கி விற்பனை செய்யும் ஸ்க்ராப் தொழிலில் சம்போ செந்தில் கேங் ஈடுபட்டுள்ளது. ஸ்கிராப் வர்த்தகத்தை கைப்பற்றுவதில் ஏற்பட்ட போட்டியில் ஆம்ஸ்ட்ராங், கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
ஸ்கிராப் பிசினஸ் தகராறு காரணமா?: ஸ்கிராப் பிசினஸில் சம்போ செந்திலுக்கு ஆம்ஸ்ட்ராங் இடையூறாக இருந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, ஏற்கனவே ஆம்ஸ்ட்ராங் உடன் மோதல் உள்ள ரவுடிகளை ஒருங்கிணைத்து, ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்வதற்கு சம்போ செந்தில் ஸ்கெட்ச் போட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இதையடுத்தே, தலைமறைவாக உள்ள சம்போ செந்திலை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டுவதாக கூறப்படுகிறது. தூத்துக்குடிதான் அவரது சொந்த ஊர் என்பதால் அங்கும் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளதாக தெரிகிறது. சம்போ செந்தில் நேபாளத்தில் பதுங்கி இருக்கலாம் எனக் கூறப்படுவதால் அந்த கோணத்திலும் தேடுதல் வேட்டை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications