பழிக்கு பழி.. துடிக்கும் ஆம்ஸ்ட்ராங் தரப்பு? உளவுத்துறை அலர்ட்.. ஆக்ஷனில் இறங்கிய போலீஸ்
சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், பழிவாங்க ஆம்ஸ்ட்ராங் ஆதரவாளர்கள் முயன்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே முன்னெச்சரிக்கையாக பலரை போலீஸ் கைது செய்துள்ள நிலையில், அதேநேரம் தீவிரமாக தேடப்பட்டு வரும் சம்போ செந்தில் எப்போது கைது செய்யப்படுவார் என்று கேள்வியும் எழுந்திருக்கிறது.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ஆம் தேதி சென்னை பெரம்பூரில் 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக கொலை செய்யப்பட்ட ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பியான பொன்னை பாலு உட்பட, ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், கோகுல், சக்தி, சந்தோஷ், அருள், சிவசக்தி என பலர் கைது செய்யப்பட்டனர். இதில் காவலர்களை தாக்கிவிட்டு தம்பிக்க முயன்றதாக கூறி திருவேங்கடம் என்பவர் கடந்த போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்டார்.

அதேபோல வழக்கு தொடர்பாக பிரபல தாதாவின் மனைவியும் வழக்கறிஞருமான மலர் கொடி மற்றும் ஹரிஹரன் ஆகியோரை செம்பியம் போலீசார் கைது செய்து உள்ளனர். இதுவரை 3 கட்சி நிர்வாகிகள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இதில் சென்னை பாஜக மகளிர் அணி துணைச் செயலாளர் அஞ்சலையை தனிப்படை கைது செய்தபோது வழக்கின் போக்கில் திருப்பம் ஏற்பட்டது.
அதாவது சம்போ செந்தில் எனும் பெயர் இந்த வழக்கிற்குள் நுழைகிறது. போலீசின் பல கேஸ்களில் சம்போ செந்திலின் பெயர் அடிப்பட்டிருந்தது. எனவே, ஆம்ஸ்ட்ராங் வழக்கில் இவர் பெயர் வந்ததில் காவல்துறையினருக்கு பெரிய ஆச்சரியம் ஒன்றும் இல்லை.
சம்போ செந்தில் திருப்போரூர் ரியல் எஸ்டேட் அதிபர் ரவீந்திரகுமார் கொலை, முத்தியால்பேட்டையில், ரவுடி காக்காத்தோப்பு பாலாஜியின் கூட்டாளி கொலை சம்பவங்களில் தொடர்புடையவராக இருந்திருக்கிறார்.
அவரை ஆம்ஸ்ட்ராங் கொலையுடன் தொடர்புபடுத்தியது பழைய பொருட்கள் விற்பனைதான். நகரில் சேகரிக்கப்படும் பழைய பொருட்களை விற்பதில் பெரும் லாபம் வருகிறது. இன்றைய நாட்களில் இதன் மொத்த மார்கெட் பல கோடி ரூபாயாக இருக்கிறது.
இப்படி இருக்கையில், இதனை கைப்பற்றுவதற்கும் பெரும் போட்டி நடந்து வந்திருக்கிறது. இந்த போட்டியில் ஆம்ஸ்ட்ராங்கும் இருந்திருக்கிறார். எதிர் தரப்பில் இருந்தவர் சம்போ செந்தில்.
ஆம்ஸ்ட்ராங்கை முடித்தால் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு பெரிய போட்டியாளர்கள் யாரும் இல்லை என்று திட்டமிட்டு, அவரை சம்போ செந்தில் கொலை செய்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
ஆனால், கடந்த 6 ஆண்டுகளாக சம்போ செந்தில் எங்கு இருக்கிறார்? எப்படி திட்டம் தீட்டுகிறார் என்பது யாருக்கும் தெரியாது. இன்னும் சொல்லப்போனால், அவர் வெளிநாடுகளிலிருந்து திட்டம் தீட்டி அதன் மூலம் காய்களை நகர்த்துகிறார் என்றும் பேச்சு அடிபடுகிறது.
இவரை காவல்துறை தற்போது தீவிரமாக தேடி வருகிறது. மறுபுறும் ஆம்ஸ்ட்ராங் ஆதரவாளர்கள் பழிவாங்கும் நடவடிக்கையை தொடங்கியுள்ளனர். முன்னெச்சரிக்கையாக, ஆம்ஸ்ட்ராங்கின் 16வது நாள் காரியத்தில் சென்னை முழுவதும் போலீஸ் ஊஷார்படுத்தப்பட்டிருந்தது. எனவே வன்முறை ஏதும் நடக்கவில்லை. அதேபோல ஆம்ஸ்ட்ராங்குக்கு நெருக்கமான ரவுடிகளும் கைது செய்யப்பட்டனர்.
இருப்பினும் நீண்ட நாட்களுக்கு போலீசால் இப்படியே இவர்களை கட்டுப்படுத்தி வைத்திருக்க முடியாது. சம்போ செந்தில் கைது மூலமாகத்தான் இந்த வழக்கு முடிவுக்கு வரும். எனவே அதை நோக்கி போலீசார் வேகமாக நகர்ந்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications