தூய்மை பணியாளர்களை நள்ளிரவில் குண்டுகட்டாக தூக்கிய போலீஸ்! சென்னையில் ரோந்து தீவிரம்
சென்னை: சென்னை சென்ட்ரல் அருகே உள்ள ரிப்பன் மாளிகைக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தூய்மை பணியாளர்களை காவல்துறையினர் நள்ளிரவில் கைது செய்திருக்கின்றனர். இந்நிலையில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் போராட்டக்காரர்கள் புகுந்திருப்பதாகவும், சென்னை முழுவதும் ரோந்து பணிகளை தீவிரப்படுத்தியிருப்பதாகவும் போலீசார் கூறியுள்ளனர்.
பணி நிரந்தரம், தூய்மை பணியை தனியாருக்கு கொடுக்க கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 13 நாட்களாக ரிப்பன் மாளிகைக்கு வெளியே தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

ஆனால் ரிப்பன் பில்டிங் என்பது போராட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்ட இடம் என்று கூறி, போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனையடுத்து, நள்ளிரவில் சுமார் 600க்கும் அதிகமான போலீசார் போராட்ட களத்தில் குவிக்கப்பட்டனர். அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்தி வருகின்றனர்.
போராட்டக்காரர்கள் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஊடுருவியிருப்பதாகவும், மாநகர் முழுவதும் ரோந்து பணிகளை தீவிரப்படுத்தியிருப்பதாகவும் போலீசார் தெரிவித்திருக்கின்றனர்.
இதற்கிடையில், போராட்டம் நடைபெற்ற இடத்தில், அவர்கள் அமைத்திருந்த பந்தல் உள்ளிட்டவற்றை போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தி வருகின்றனர். மறுபுறம் வேளச்சேரி 100 அடி சாலையில் தூய்மை பணியாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications