sanitation workers protest: ரிப்பன் மாளிகையில் பதற்றம்.. தூய்மை பணியாளர்களை நள்ளிரவில் கைது செய்தது போலீஸ்!
சென்னை: பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து 2 வாரமாக தூய்மை பணியாளர்கள் ரிப்பன் மாளிகைக்கு வெளியில் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். ஆனால் அனுமதி மறுக்கப்பட்ட இடத்தில் போராட்டம் நடப்பதாக கூறிய நீதிமன்றம், தூய்மை பணியாளர்களை அப்புறப்படுத்த உத்தரவிட்டது. இதனையடுத்து ரிப்பன் மாளிகைக்கு வெளியே நூற்றுக்கணக்கில் போலீசார் குவிக்கப்பட்டிருக்கின்றனர். தற்போது போராடி வரும் தூய்மை பணியாளர்களை அப்புறப்படுத்த தொடங்கியுள்ளனர்.
இன்றிரவு எங்களை அப்புறப்படுத்த போலீசார் முயற்சிக்கலாம் என்று கூறிய போராட்டக்காரர்கள், எங்கள் கோரிக்கைகளை அரசு ஏற்கும் வரை போராட்டங்களை கைவிட மாட்டோம் என்று கூறியிருந்தனர். இதனையடுத்து போலீசார் போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த தொடங்கியுள்ளனர். போராட்டக்காரர்களை குண்டுகட்டாக தூக்கி அப்புறப்படுத்தும் வீடியோ சோஷியல் மீடியாக்களில் பரவி வருகிறது.

தூய்மை பணியாளர்களின் கோரிக்கை என்ன?
கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சென்னை மாநகராட்சியில் தூய்மை பணியில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், தூய்மை பணியை தனியார் வசம் ஒப்படைக்க கூடாது உள்ளிட்டவைதான் இவர்களின் கோரிக்கைகள். ஆனால் இதை தமிழக அரசும், சென்னை மாநகராட்சியும் ஏற்க மறுத்திருக்கிறது. தூய்மை பணி என்பது காலம் காலமாக நீடிக்கும் பணி. இதை தனியார் வசம் ஒப்படைப்பதன் மூலம் தொழிலாளர்களின் உழைப்பு சுரண்டப்படும் என்பதே இவர்களின் வாதம்.
இந்தியாவில் தொழிலாளர்களுக்கு என அடிப்படை ஊதியம் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. குறைந்தபட்ச ஊதிய சட்டப்படி மத்திய அரசு, Unskilled ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் மாதம் ரூ.20,358-ஐ ஊதியமாக நிர்ணயித்திருக்கிறது. ஆனால் சென்னையில் தூய்மை பணியில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.10,000 கூட முழுமையாக வழங்கப்படுவதில்லை. இத தவிர இதர பணி பலன்கள் இருக்கின்றன. ஆனால் இவை எவையும் தனியார் ஒப்பந்ததாரர்கள் கொடுப்பது கிடையாது.
Police crackdown begins #ChennaiSanitationWoekers protest pic.twitter.com/LkorMkhXgo
— Shabbir Ahmed (@Ahmedshabbir20) August 13, 2025
ஆக வெளிப்படையாகவே இவர்களது உழைப்பு சுரண்டப்படுகிறது. எனவே தூய்மை பணியார்களை தனியார்மயப்படுத்தக்கூடாது, அவர்கள் அரசு ஊழியர்களாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.
கடந்த 2021ம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்லின்போது திமுகவின் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி எண்.285ல் ஊராட்சிகள், அரசுப்பள்ளிகள், அரசு மருத்துவமனைகள், அரசு மாணவர் விடுதிகள், நகராட்சி, மாநகராட்சி, பேரூராட்சிகள் ஆகியவற்றில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களின் பணி, ஊதியம், ஓய்வூதியம் போன்ற கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்படும் என வாக்குறுதி கொடுக்கப்பட்டிருந்தது. இதனை சுட்டிக்காட்டும் போராட்டக்குழுவினர், எங்கள் கோரிக்கைகளை உடனடியாக அரசு ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications