அதிமுகவுக்கு ஆப்படித்த 4 பேர்.. தவெக காலத்தில் சான்ஸ் தரக் கூடாது! திடீரென குரல் கொடுத்த சரத்குமார்!
சென்னை: வேலுமணி அணியில் இருந்த மதுராந்தகம் எம்.எல்.ஏ. மரகதம் குமரவேல், பெருந்துறை எம்.எல்.ஏ. ஜெயக்குமார், தாராபுரம் எம்.எல்.ஏ. சத்யபாமா ஆகியோர் தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து, அமைச்சர் ஆதவ் அர்ஜுனா முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ள நிலையில், அவர்களுக்கு இடைத் தேர்தலில் தவெக சார்பில் போட்டியிட வாய்ப்பளிக்கப்படலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில் ராஜினாமா செய்தவர்களை மக்கள் முழுவதுமாக புறக்கணித்திட வேண்டும் என நடிகரும் பாஜக நிர்வாகியுமான சரத்குமார் கூறியுள்ளார்.
2026 தமிழக சட்டசபை தேர்தல் தோல்விக்குப் பிறகு, அதிமுகவின், எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம் உள்ளிட்டோர் எடப்பாடி பழனிசாமி தலைமைக்கு எதிராக திரும்பினர். அதன் உச்சமாக, சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் 25 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

முதலில், இந்த அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை நேரடியாக அமைச்சரவையில் சேர்க்கும் திட்டம் தவெக தரப்பில் இருந்ததாக கூறப்படுகிறது. யாருக்கு எந்த அமைச்சரவை பதவி வழங்குவது என்பது குறித்தும் பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்ததாக தகவல்கள் வெளியாகின. ஆனால் வழங்கவில்லை.
இதனால் வேலுமணி உள்ளிட்டோர் அதிருப்தியடைந்த நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக மதுராந்தகம் எம்.எல்.ஏ. மரகதம் குமரவேல், தாராபுரம் எம்.எல்.ஏ. சத்யபாமா, பெருந்துறை எம்.எல்.ஏ. ஜெயக்குமார் மற்றும் அம்பாசமுத்திரம் எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்துள்ளனர். அவர்களுக்கு இடைத் தேர்தலில் தவெக சார்பில் போட்டியிட வாய்ப்பளிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் ராஜினாமா செய்தவர்களை மக்கள் முழுவதுமாக புறக்கணித்திட வேண்டும் என நடிகரும் பாஜக நிர்வாகியுமான சரத்குமார் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்," தேர்தல் முடிவுகள் வெளியாகி புதிய அரசு பொறுப்பேற்று வெறும் இரண்டு வாரங்களே ஆன நிலையில், மக்களின் வாக்கால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களுக்குப் பொறுப்பளித்த மக்களின் நம்பிக்கையை மதிக்காமல், சொந்த அரசியல் லாபம் மற்றும் தனிப்பட்ட தேவைகளுக்காக பதவியை ராஜினாமா செய்வது ஜனநாயகத்தையே அவமதிக்கும் செயல் ஆகும்.
மக்கள் நலப் பணிகளை முன்னிறுத்த வேண்டிய நேரத்தில், சுயநல அரசியல் கணக்கீடுகளுக்காக பதவியை விட்டு விலகுவது தொகுதி மக்களை ஏமாற்றும் நடவடிக்கையாகும். இதுபோன்ற சூழ்நிலைகளால் மறுதேர்தல் நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், அந்த தேர்தலுக்காக அரசு மேற்கொள்ளும் முழு செலவையும், அவருக்கு எதிராக போட்டியிட்ட வேட்பாளர்கள் மேற்கொண்ட தேர்தல் செலவுகளையும் சம்பந்தப்பட்ட ராஜினாமா செய்த உறுப்பினரிடமே அபராதமாக வசூலிக்க வேண்டும்.
மேலும் மறுதேர்தல் நடைபெறும் தருணத்தில், மக்கள் இதுபோன்ற அரசியல் நிலைப்பாடு இல்லாதவர்களை முற்றிலும் புறக்கணித்து, பொறுப்புணர்வுடன் செயல்படும் தலைவர்களை தேர்வு செய்ய வேண்டும். இப்படிப்பட்டவர்களை மக்கள் முழுவதுமாக புறக்கணித்திட வேண்டும்." என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications