ஜெ.மனநிலையில் வலம் வரும் சசிகலா... சரிசமமாக அமர்ந்த ஓபிஎஸ் தம்பி - திருச்செந்தூரில் நடந்தது என்ன
தான் போகும் இடங்களில் எல்லாம் உற்சாக வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்த சசிகலாவிற்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.
சென்னை: தன் முன்னால் எல்லோரும் பணிவாகவும் பவ்யமாகவும் நடந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார் சசிகலா. ஆனால் நடப்பதோ வேறு மாதிரியாக உள்ளது. தன்னை பார்க்க வரும் அதிமுகவினர் சரிசமமாக தன்னுடன் அமர்ந்து பேசுவதை சசிகலாவால் ஜீரணிக்க முடியாமல் உள்ளதாம். ஓபிஎஸ் தம்பி ஓ.ராஜா உடன் திருச்செந்தூரில் நிகழ்ந்த பேச்சுவார்த்தை பற்றிய தகவல்களும் கசிந்துள்ளன.
ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை அவருடனேயே வலம் வந்தார் சசிகலா. ஜெயலலிதா இருக்கும் அறை பக்கம் கூட ஒரு ஈ, கொசு கூட பறக்க முடியாத அளவிற்கு செக்யூரிட்டி இருக்கும். தேர்தல் பிரச்சாரத்திற்கோ, ஆலய தரிசனத்திற்கு ஆன்மீக பயணமாக சென்றாலோ ஜெயலலிதா செல்லும் இடங்களில் எல்லாம் அலைகடலென தொண்டர்கள் கூடுவார்கள்.
ஜெயலலிதாவை பார்த்தாலே நிர்வாகிகளின் முதுகு வளைந்து பணிவும் பக்தியும் தானாக வரும். ஜெயலலிதாவின் காலில் விழுந்து ஆசி பெற நிர்வாகிகள் அலைமோதுவார்கள். இதை எல்லாம் நேரில் இருந்தே பார்த்தவர் சசிகலா.
ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு அதே போல சில நாட்கள் நடந்தது. எல்லாம் சசிகலா சிறைக்குப் போகும் வரைத்தான்.

சசிகலா ரிட்டன்
நான்கு ஆண்டு கால சிறை வாசத்திற்குப் பிறகு சசிகலா சென்னை திரும்பினாலும் அதிமுக நிர்வாகிகளிடம் அதே பணிவை எதிர்பார்க்கிறார் சசிகலா. என்னதான் ஜெயலலிதா போல மேக் அப் போட்டு அதே போல பச்சைக்கலர் சேலை கட்டி ஹேர் ஸ்டைல் செய்தாலும் சசிகலாவிற்கு அந்த அளவிற்கு மரியாதை கிடைப்பதில்லை. சின்னம்மா என்று அழைத்தாலும் அதிமுக நிர்வாகிகள் யாரும் பணிவாக காலில் விழுவதில்லையே என்ற மனக்குறை சசிகலாவிற்கு இருக்கத்தான் செய்கிறது.

சசிகலா திருச்செந்தூர் பயணம்
அதிமுகவை மீட்பேன் என்று அவ்வப்போது கூறி வருகிறார் சசிகலா. சட்டசபைத் தேர்தல், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிந்த உடனே அறிக்கை வெளியிட்டார். சமீபத்தில் திருச்செந்தூர் சென்ற போது கூட விமான நிலையத்தில் பேட்டி அளித்தார் சசிகலா. ஆனால் அதை ஓபிஎஸ், இபிஎஸ் சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை. அதே வேகத்தோடு திருச்செந்தூர் சென்றாலும் அவர் எதிர்பார்த்தது போல பெரிய அளவில் கூட்டம் எதுவும் கூடவில்லை.

ஓ.ராஜா சந்திப்பு
திருச்செந்தூரில் தனியார் ஹோட்டலில் தங்கியிருந்த சசிகலாவை பார்க்க போயிருந்தார் ஓ.பன்னீர் செல்வத்தின் தம்பி ஓ.ராஜா, அவரிடம் அதே பணிவை எதிர்பார்த்திருக்கிறார் சசிகலா. ஆனால் அதை தரத்தவறிவிட்டார் ஓ.ராஜா. சசிகலாவிற்கு சரிசமமாக நாற்காலியில் அமர்ந்து பேசினாராம் ஓ.ராஜா. அதை சசிகலா கொஞ்சம் கூட ரசிக்கவேயில்லையாம்.

நல்லாயிருக்கீங்களா
ஓ.ராஜா பணிவாக வருவார் என்று எதிர்பார்த்த சசிகலாவிற்கு மிகப்பெரிய ஏமாற்றம். அதோடு வணக்கம்மா நல்லாயிருக்கீங்களா என்று சாதாரணமாக பேசவே சப்பென்று ஆகி விட்டதாம் சசிகலாவிற்கு. திருச்செந்தூர் பயணத்தில் எதுவும் பேச வேண்டாம் இது அரசியல் பயணமில்லை என்று மட்டும் சொன்னாராம் சசிகலா. அப்புறம் பேசலாம் என்று அனுப்பி வைத்து விட்டாராம்.
Recommended Video

போட்டோ ஷூட்
ஜெயலலிதா உடன் நிர்வாகிகள் போட்டோ எடுக்க தவம் இருக்க வேண்டும். குறைந்த பட்சம் ஒரு அடி இடைவெளி விட்டு நிற்க வேண்டும். ஆனால் சசிகலா உடன் நிர்வாகிகள் நெருக்கமான நின்று கொண்டு போட்டோ எடுத்தனர். இதுவும் சசிகலாவை எரிச்சல் படுத்தி விட்டதாக சொல்கின்றனர். சசிகலா உடனான இந்த சந்திப்புக்கே கட்சியை விட்டு நீக்கிவிட்டனர் ஓ. ராஜாவை. நிர்வாகிகளிடம் பழைய பணிவை எதிர்பார்க்கிறார் சசிகலா. ஆனால் ஜெயலலிதா வேறு சசிகலா வேறு என்று நிர்வாகிகள் நினைக்கின்றனர்.












Click it and Unblock the Notifications