"மூஞ்சிய காட்டுடா".. துண்டு துண்டா சிதறிய சத்யா.. மயங்கிய அம்மா.. நோயாளியின் ஓயாத விசும்பல் சத்தம்
பரங்கிமலை மாணவி சத்யாவை கொன்ற சதீஷ் குறித்து சில தகவல்கள் வெளியாகி உள்ளன
சென்னை: சத்யா கொலை செய்யப்பட்டது முதல் அவரது அப்பா உயிரிழந்தது வரையிலான அதிர்ச்சியில் இருந்து தமிழக மக்கள் மீளவில்லை.. எனினும் கொலையாளி சதீஷ் எப்படி போலீசில் சிக்கினான்? அவனது குடும்ப பின்னணி என்ன? என்பது குறித்த சில தகவல்கள் வெளியாகி உள்ளன.
பரங்கிமலை சத்யாவின் கொலையும், அவரது தந்தையின் அதிர்ச்சி மரணமும் தமிழக மக்களை உலுக்கி எடுத்துவருகிறது.. ஒருதலைக்காதலால், ரயில்வே ஸ்டேஷனிலேயே சத்யாவுக்கும் - சதீஷூக்கும் மோதல் வெடிக்க, மின்சார ரயில் வரும்போது, எட்டி உதைத்துள்ளார் சதீஷ்..
இதில் சத்யாவின் உடல் ரயிலில் மோதி துண்டு துண்டாக சிதறி விழுந்தது. தப்பி சென்ற சதீஷை போலீசார் கைது செய்தனர்.. இதனிடையே, சத்யாவின் அப்பா மாணிக்கமும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட நிலையில், பிணவறையில் 2 உடல்களும் அருகருகே வைக்கப்பட்டு இருந்ததை கண்டு, உறவினர்கள் கதறியது காண்போரை நிலைகுலைய வைத்தது.

தாய்மாமா
கடந்த 2 நாட்களாகவே இதுகுறித்த சம்பவங்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.. அடுத்தடுத்து நடந்த இந்த துயர சம்பவங்களை கண்டு தமிழக மக்களும் உறைந்து போயுள்ளனர்.. இதுகுறித்து பல்வேறு தரப்பினர் கண்டனங்களையும், சத்யாவின் மரணத்துக்கு நீதியும் கேட்டு வருகின்றனர்.. சத்யாவின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் பலரும் கண்ணீர்விட்டு அழுதனர்... ஒரே வண்டியில் அப்பா, மகள் சடலங்கள் கொண்டு செல்லப்பட்டது, காண்போரின் இதயத்தை பிழிந்தெடுத்தது.. கொலை செய்த சதீஷூக்கு 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மாம்பலம்
மகள் ரயிலில் தள்ளிவிடப்பட்டு இறந்துவிட்டார் என்ற தகவல் கிடைத்ததுமே, ரயில்வே ஸ்டேஷனுக்கு ஓடியுள்ளார் அவரது அப்பா மாணிக்கம்.. அன்றைய இரவு வரை மாம்பலம் ரயில்வே ஸ்டேஷனிலேயே இடிந்து போய் உட்கார்ந்திருந்துள்ளார்.. அதற்கு பிறகுதான் காரில் அழைத்து வர முயன்றபோது, மயங்கி கிடந்ததை கண்டு, ஆஸ்பத்திரிக்கு தூக்கி சென்றுள்ளனர்.. கடைசியில் விஷம் சாப்பிட்டு இறந்தது தெரியவந்தது.. இங்கே இவரது நிலை இப்படி என்றால், சத்யாவின் நிலைமை பரிதாபத்திலும் பரிதாபமாக உள்ளது.. தலைமைக்காவலரான, சத்யாவின் அம்மா ராமலட்சுமி மார்பக புற்றுநோயால் நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறார்..

மார்பக புற்று
படுத்த படுக்கையாக இருப்பதால், வீட்டிலிருந்து வெளியே வர முடியாத நிலைமையில் இருந்து வருகிறார்.. இவருக்கு சத்யாதான் தேவையான உதவிகளை பக்கத்தில் இருந்து செய்து வந்தாராம்.. மகள் இறந்தது பற்றி சொன்னால், அதிர்ச்சியில் எது வேண்டுமானாலும் நடந்து விடக்கூடும் என்பதால், மகள் இறந்ததை உறவினர்கள் யாரும் சொல்லவில்லை.. அதற்கு பதிலாக, ரயில் விபத்தில் சிக்கி சத்யாவுக்கு சிகிச்சை நடந்து கொண்டிருப்பதாக கூறியுள்ளார்கள்.. அதற்கு பிறகுதான் மெல்ல அவரை தேற்றி விஷயத்தை சொல்லி உள்ளனர்.. மகள் கொலை செய்யப்பட்டுவிட்டார் என்று கேட்டதுமே அவரும் அப்படியே மயக்கமாகி விழுந்துவிட்டாராம்..

ஐயோ கதறல்
ஆனால், அடுத்த சில மணி நேரத்தில் மாணிக்கமும் உயிரிழந்துவிட, இந்த தகவலை மறுபடியும் எப்படி ராமலட்சுமியிடம் சொல்வது என்று குடும்பத்தினர் அளவுக்கு அதிகமாகவே பரிதவித்துவிட்டனர்.. 2 சடலங்களும் போஸ்ட் மார்ட்டம் முடிந்து வீட்டுக்கு கொண்டு வரும் வழியில்தான், கணவரும் உயிரிழந்துவிட்டார் என்ற தகவலை சொல்லி உள்ளனர்.. இரு உடல்களும் வீட்டிற்கே வெளியே வைக்கப்பட்டிருந்த நிலையில், அதை பார்த்து பார்த்து கதறி கொண்டே இருந்தார் ராமலட்சுமி.. முன்னதாக, சதீஷை போலீசார் கைது செய்து, சதீஷை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து வந்திருந்தனர்..

மூஞ்சி எங்கே
அப்போது, சதீஷை பார்த்ததுமே, அங்கிருந்த சில வழக்கறிஞர்கள் ஆத்திரத்தில் அடிக்க பாய்ந்தார்கள்.. மேலும் சில வழக்கறிஞர்கள், சூழ்ந்து கொண்டு, "இவன் முகத்தை ஏன் மறைச்சு கூட்டிட்டு வர்றீங்க... ஒரு கொலையை செய்துவிட்டு, அந்த கொலையின் காரணமாக, அந்த பெண்ணின் அப்பாவும் உயிரிழந்திருக்கிறார்.. இப்படிப்பட்ட கொலைகாரன் மீது எவ்வித தாக்குதலும் நடத்தாமல், தண்டனையும் தராமல், இவ்வளவு பத்திரமாக அழைத்து வருவது ஏன்? இவனை ஏன் பொத்தி பொத்தி வைக்கிறீங்க? இதோ, மீடியாக்கள் எல்லாரும் நிற்கிறாங்க.. முகத்தை காட்டாமல் ஏன் கூட்டிட்டு போறீங்க?" என்று ஆவேசமாக கேள்விகள் எழுப்பினார்கள்..

விசும்பல்கள்
நீதிபதி உத்தரவுக்கு பிறகு, சதீஷை மறுபடியும் வெளியே அழைத்து வந்தபோது, கிட்டத்தட்ட 50-க்கும் மேற்பட்ட போலீசார் வந்திருந்தனர்.. ஆனால், அப்போது சதீஷ் முகம் மூடப்படவில்லை.. முகத்தை பார்த்ததுமே வழக்கறிஞர்களுக்கு இன்னும் ஆத்திரம் வந்தது.. இதையெல்லாம் பார்த்து பதறிக்கொண்டே ஜீப்பில் சதீஷ் ஏறப்போனால், கடைசியில் ஜீப்புக்குள்ளேயே கேமரா இருப்பதை பார்த்து அலறிப்போனார். இந்த சம்பவமெல்லாம் ஒருபக்கம் இருந்தாலும், ரயில்வே ஸ்டேஷன்களில் அன்று ஸ்வோதி, அடுத்து ஸ்வேதா இன்று சத்யா என்று இளம்பெண்கள் காவு வாங்கப்பட்டு வரும் நிலையில், ரயில் நிலையங்களில் பாதுகாப்பு என்ன ஆனது? என்ற கேள்விக்கு மட்டும் இதுவரை யாரிடமிருந்தும் நமக்கு பதிலே இல்லை... அழுவதற்குகூட தெம்பில்லாமல் உருகிப்போன உடம்பில் ராமலட்சுமியின் விசும்பல் சத்தம் இன்னமும் அடங்கவே இல்லை..!!!












Click it and Unblock the Notifications